Monday, October 16, 2017

வனவாசி - விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயநான் முன்பு திருவாரூரில் இருந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு உறவினர் என்னை அவரது ஊரான அம்மையப்பனுக்கு அழைத்துச் சென்றார். சின்ன பையனாக இருந்த என்னை முன் பாரில் உட்காரவைத்து சைக்கிளை எளிதாக மிதித்து வந்தார். நடுவே இருந்த ஊர்களின் பெயர்களை அங்கு என்ன கிடைக்கும் என்பதை சொல்லிக் கொண்டுவந்தார். ஒரு இடம் வந்ததும் இதற்குமேல் ஊர் இல்லை என்றுவிட்டார். மனதை குடைந்துக் கொண்டேயிருந்தது அவர் சொன்னது. ஊர் இல்லையென்றால் அந்த இடத்தை எப்படி அழைப்பது, அங்கு யாரும் வசிக்கவில்லையா? பேய்கள் ஒருவேளை அந்த பகுதியில் இருக்கலாம் என்று தோன்றியது. இதற்குமேல் வயல்களும் காடும் மட்டுமே என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குதான் புரிய சில காலமாகியது.

Sunday, October 15, 2017

தஞ்சைக் கூடலின் செப்டம்பர்'17 மாதக் கூட்டம்புதிய நண்பர்கள் ஒவ்வொரு மாதமும் இணைவது நடந்துக் கொண்டேயிருக்கிறது. சிலர் வரமுடியாமல் போவதும் நிகழ்கிறது. இந்த மாதம் கரந்தை ஜெயக்குமார், சுரேஷ் பிரதீப், பேராசிரியர் கல்பனா, தமிழ் பல்கலைக்கழக மாணவர் ராமசந்திரன் போன்றவர்கள் புதியவர்கள். முதலில் சுரேஷ் பிரதீப் தான் மாலை 4.55க்கே வந்துவிட்டிருந்தார். போன் செய்து கூறிய அரை மணி நேரம் கழித்துதான் நான் சென்று சேர்ந்தேன். சுரேஷை இப்போதுதான் முதலில் சந்திக்கிறேன். அன்பும், அமைதியும் கொண்ட இளம்மனிதராக தெரிகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின் ஹரணி, அவரது நண்பர்களுடனும், வியாகுலன், சி.எம்.முத்து நண்பர்களுடனும் வந்து சேர்ந்தார்கள்.

Tuesday, October 10, 2017

பெயர் தெரியாப் பறவையின் கூடு (சிறுகதை)

சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்டசின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்தமூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடையதாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிகளை எழுப்ப ஆரம்பிக்கும். உணவு வாய்க்கும் வரும்வரை கத்தி கூப்பாடு போட்டுவிட்டு பின் அமைதியாக உறங்கிவிடும்.
இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்தஅவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். சில நேரங்களில் ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான். குஞ்சுகளைக் கண்டு .. என்று கூவும் அவனின் ஆச்சரியங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பவைகள். நீண்ட கூரிய அலகுள்ள தாய்ப் பறவையை கிட்டத்தில் பார்க்கும்போது அதன் கால்களும் இறகுகளும் மரத்தால் செய்யப்பட்டபொம்மைபோல் இருக்கும். யாரும் அவைகளை தொல்லை செய்யக்கூடாது என கட்டளை இட்டிருந்தான். ‘பாவம் குஞ்சிங்க…’ என்று சொல்லிக்கொண்டான். அவனின் விசித்திர செயலால் அம்மாவும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

Friday, October 6, 2017

விவேக் ஷான்பாக்கின் நிர்வாணம் கதைவிவேக் ஷான்பாக்கின் கதை எப்போதும் மேலதிகமான ஒன்றை உணர்த்திக் கொண்டிருக்கும். எதிர்பாராத வாழ்க்கை சூழல், உறவு சிக்கல்களின் அந்தரங்க முடிச்சு, திருப்பங்களின் அதிர்வு என்று பலகோணங்களை அவர் கதைகள் கொண்டிருக்கும். கன்னட எழுத்தாளர்களான எஸ்.எல். பைரப்பா, யூ.ஆர். அனந்தமூர்த்திக்கு பின் விவேக் ஷான்பாக்கை வைக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்து இனி வர இருக்கும் அவரது நாவல்கள் அதை உறுதி செய்யலாம். வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் சிறந்த கதைகளாக வேங்கைசவாரி, கோழியை கேட்டா மசாலா அறைப்பது, அடுத்தவர் குடும்பம் போன்ற கதைகளை சொல்லலாம். இந்த மூன்று கதைகள் இல்லாமல் ஜாமீன் சாஹிப், காரணபூதம், நம் வழியில் நாம், சரவணா சர்வீஸ், சில்லறை, சுதீரின் அம்மா போன்ற கதைகள் கிடைக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சில ஆர்வலர்களின் முயற்சியால் அவரது இந்த 9 கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கே.நல்லதம்பி மொழிபெயர்த்த நிர்வாணம் (காலச்சுவடு, செப் 17) என்கிற கதையும் சேர்கிறது. மற்ற கதைகள் எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் வந்திருக்கின்றன. இந்தக் கதை நேரடியாக கன்னடத்திலிருந்து மொழியெயர்க்கப் பட்டிருக்கிறது.

Wednesday, October 4, 2017

முகநூலில் பிரபலமாவது எப்படி?

நகைச்சுவை:
முகநூல் இப்போதுதான் வந்தது. மிக சமீபமாகத்தான் பரவலாக அறியப்பட்டது. ஆகவே புதியதாக கண்டுபிடிக்கப்படும் விதிகளால் தான் பிரபல ஆகமுடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.


சமூக வெளியில் பிரபல்யமாக என்ன செய்வோம், பிடித்தவரோ இல்லையோ காலையில் பார்த்ததும் அவர்களுக்கு குட்மார்னிங் சொல்வோம். டீ வாங்கிதருவோம். அதாவது காக்காய் பிடிப்போம். அதற்கு இங்கே லைக் என்று பெயர். ஒருவரின் ஸ்டேடஸ் பிடிக்காமல் போகலாம், அல்லது சொதப்பலாக இருக்கலாம், அவர் பிரபலமாக இருக்கும் ஒரே காரணம் போதும். உடனே லைக் போட்டுவிடுங்கள். ஒருவரின் லைக் எதிர்காலத்தில் வேண்டும் என நினைப்பவர்களை படிக்காமலும், முன்பின் யோசிக்காமலும் லைக் போட்டுவிடலாம்.

Tuesday, October 3, 2017

அலர் (சிறுகதை)


மதியதூக்கத்தை கெடுத்துவிட்டது அந்த செய்தி. மற்றநாளாக இருந்தால் அலுவலகம் முடிந்துவிட்டு வந்தபின்தான் தெரிந்திருக்கும். மதியஉணவுவை முடித்துவிட்டு வழக்கம்போல வாசலில் வந்து வேடிக்கை பார்த்த நேரத்தில் தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வெங்கட் விடுபட்டதை யோசிக்கிறவனாக திரும்பி விஷயம் தெரியுமா’ என்றான். தெரியாதது ஒரு குற்றம்போல் அவனுக்கு பட்டிருக்கவேண்டும். ‘என்ன?’ என்று கேட்டவுடன் மெதுவாக நான் நின்றிருந்த வாசல்வரை வந்து அவன் எப்போதும் இருக்கும் கலகலப்பு தோரனையை மெனக்கெட்டு திருத்தியதுபோல் தீவிரமான முகக்குறிகளோடு 'மூன்றாம் தெரு குணசேகரன் இருக்காருல்ல, ஹைஸ்கூல் வாத்தியாரு, அவர் பொண்டாட்டி இன்னிக்கு 12 மணிக்கு ஆக்ஸிடன்ல செத்துபோயிடுச்சி' என்றான். அவன் சொன்ன விதத்தாலே அந்த செய்தி தூக்கிவாரிப்போட்டது. போனவாரமாக இருக்கலாம், குணசேகரன் உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் மனைவியை வண்டியின் பின்னால் வைத்து கிருஷ்ணன் கோயில் தெரு வழியாக டாக்டர் வீட்டிற்கு அழைத்து சென்ற சித்திரம் நினைவிற்கு வந்தது. அவர் மனைவி நாற்பது வயது பெண்மணி, எப்போது சோர்ந்து இருப்பது போன்று அமைதியாக காணப்படும் முகம். சிரிக்கும்போதுகூட சிரிக்கலாமா என்று யோசித்துவிட்டு சிரிப்பதுபோல இருக்கும். யாரிடமும் அதிர்ந்துகூட பேசுபவரல்ல அவர். அப்படிப்பட்டவரும் நேர்ந்த சோகம் சற்று அதிக அதிர்ச்சியாக இருந்தது. பதற்றம் வெளிப்படுத்தாமல் ‘என்ன ஆச்சு’ என்றேன். 'சரியா விவரம் தெரியல, இன்னிக்கு தொம்மங்குடி சைடுல பொண்டாட்டியோட டூவீலர்ல போயிருக்காரு, பின்னாடி வந்த பஸ்சு பிரேக் பிடிக்காம அவங்க மேல மோதிருக்கு போல, அதுல ரெண்டு பேருக்கும் அடி, அவருக்கு கொஞ்சம் அடி, அந்தம்மா மண்டையில அடிப்பட்டு அப்படியே ஸ்பாட்லே காலி’. சொல்லும்போது எந்த சொல்லும் மாறிப் போய்விடக்கூடாது என்கிற பயம் இருப்பதுபோல சரியாக மிக நிதானமாக கைகளைக்கூட அடக்கமாக வைத்துக்கொண்டு பேசினார். 'தெரு ஜனமே ஆஸ்பிடலுக்குதான் போயிருக்கு, ஆனா பொழைக்க வைக்க முடியலையாம், சரி நா வாரேன்' என்று முக்கிய விஷயம் நினைவு வந்தவன்போல் அவசரமாக கிளம்பினான். அவன் போவதையே நெடுநேரம் ஏன் என்று தெரியாமல் கவனித்துவிட்டு உள்ளே சென்றேன்.

Monday, October 2, 2017

மினி பேட்டி -- பேசும் புதியசக்தி

செப்டம்பர்'17 பேசும் புதியசக்தி இதழில் என் மினிபேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டியை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக, கேள்விகள் எஸ்.செந்தில்குமார்.