Tuesday, March 23, 2010

கவிதைக் கனவின் நீட்சி


இதற்கு முதலில் 'என் முதல் கவிதை' என்று தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். 'கவிதைக்கனவு' கட்டுரை நன்றாக வந்துள்ளது என்று பல(?) பேர் கூறிவிட்டதால், அதன் தொடர்ச்சியான இக்கட்டுரையை அதிலிருக்கும் அனுகூலங்களை பயன்படுத்தவேண்டி 'கவிதைக் கனவின் நீட்சி' என்று வைத்துவிட்டேன்.
கல்லூரி நாட்களில் எழுதிய‌ என் முதற்கவிதையின் பிண்னனி ஒரு சிறுபொறிதான். அப்போது சென்னையிலிருந்து பெரம்ப்லூரில் இறங்கி அங்கிருந்து பஸ் பிடித்து அரியலூர் சென்று கொண்டிருந்தேன். அதிகாலை வேளை, இன்னும் விடியவில்லை. தூக்ககலக்கமும் அசதியும் ஒருசேர என்னை தள்ளிக் கொண்டிருந்தன. ஜன்னலோர இருக்க்கையில் அமர்ந்து இருட்டை வேடிக்கை பார்த்தபடியிருந்தாலும் என் உடலும் மனமும் தூக்கத்தை வேண்டியபடியிருந்தன. வண்டியிலிருந்த வெளிச்சமும் வெளியில் செல்லும் வாகனங்களின் வெளிச்சமும் கண்களை குத்தி தூக்கத்தை வரவிடாமல் செய்துகொண்டிருந்தன. இடையே பல நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் ஏறியபடியே இருந்தது. NH45 சாலையை தாண்டி எதிர் சாலையில் சென்றதும் வண்டியின் வேகம் அதிகரித்தது. வலைந்து நெளிந்து கிழக்குநோக்கி சென்றுகொண்டிருந்த பாதையில் நிறுத்தங்கள் குறைந்ததும் சட்டென வண்டியின் எல்லா விளக்குகளையும் அணைத்தார் ஓட்டுனர்.
விடிந்துகொண்டிருந்த நேரம். விளக்குகளை அணைத்த வேகத்தில் இருள் வந்து கவிழ்ந்துகொண்டது. சன்னலுக்கு வெளியேயும் உள்ளேயும் முழுவதும் இருள். மிக மெதுவாக ஒவ்வொன்றாக துலங்க ஆரம்பித்தன. அந்த வேகம் படிப்படியாக அதிகரித்தபோது இத்தனை அழகுணர்ச்சியும் இதுவரை எங்கே போயிருந்தன என்று தோன்றியது.
இருளை கண்கள் பழக பழக விடியலும் வேகம் கொண்டது. அதன் வேகத்தில் வெளியேயிருந்த மரக்கிளைகளின் அடிப்பாகத்தில் பொன்னிற மெழுகு பூசினாற்போலாகியது. வீடுகள், குடிசைகள், வாகனங்கள் பொன்னிறம் கொண்டது போக, இருண்ட மேகங்கள் ஒருபக்கம் கொண்ட பொன்னிற வெளிச்சத்தால் அதன் முழு பரிமானமும் தெரிய ஆரம்பித்தன. எங்கும் பொன்னிறம். விடியல் இத்தனை அழகா?
அந்த வேகத்தில் என் மனதில் தோன்றிய வார்த்தை 'விளக்குகள் எல்லாம் அணையட்டும், நான் விடியலை நோக்குகின்றேன்' என்பதுதான். அதற்கு பின்னால் தொடர்ந்து வார்த்தைகள் வந்துகொண்டிருந்தன. அதே எண்ணத்தோடு வந்து எழுதிபார்த்த இந்த கவிதை ஒரு சுயஎழுச்சி கவிதைதான் என்றாலும் மனதை நிறைவு செய்தது. 


 இதோ அந்த கவிதை:  (நினைவிலிருந்து எழுதியது விடுபடல்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.)

விளக்குகள் எல்லாம் அணையட்டும் நான்
விடியலை நோக்குகின்றேன்
இலக்கணம் எல்லாம் மறையட்டும் நான்
இலக்கியம் படைக்கின்றேன்.

பாதைகள் மறையும் போதினிலே ஒரு
பாத‌க‌ம் இல்லை தோழா - என்
பாத‌ங்கள் காட்டும் பாதையிலே நான்
ப‌யண‌‌ங்க‌ள் தொட‌ர்வேன் என் தோழா            (விள)

சிரமங்கள் ஆயிரம் சேர்ந்திடினும் நான்
சிறகுகள் விரிப்பேன் தோழா அந்த‌
சிறகுகள் ஒடியும் வேலையிலும் நான்
சிகரத்தை தொடுவேன் என் தோழா           (விள)

உடைமைகள் அழியும் வேளையிலும் - என்
கட‌மைகள் மறவேன் தோழா ‍அந்த‌
மடைமைகள் மடியும் வேலையிலே நான்
மறுபடியும் எழுவேன் என் தோழா.           (விள)

தோற்றவன் மீண்டும் எழுகையிலே ஒரு
மாற்றம் மண்ணில் வரும் தோழா அந்த
மாற்றங்கள் காணும் வேளையிலே நம்
மாணுடம் வெல்லும் என் தோழா           (விள)


- o0o -

No comments: