Tuesday, July 13, 2010

சோ.தர்மனின் தூர்வை




அத்தியாயங்கள் இல்லாது படிக்கும் முதல் நாவல் இது. அதுவே இதன் சிறப்பு என தோன்றுகிறது. நேரடியான கூறல் முறை என்பதால் வேறு எதிலும் கவனம் கொள்ளாமல், சில இடங்களில் சலிப்படைந்தாலும், தொடந்து படிக்க முடிகிறது. தலித் மக்களில் வாழ்வை இவ்வளவு பக்கத்தில் அழைத்துச் சென்று வேறு ஒரு நாவலும் காட்டியதில்லை. சுய எள்ளல்களுடன், இதுவரை சொல்லப்படாத தலித்துகளின் வாழ்வை சொல்லியிருக்கிறார். மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை. நிலபுலங்களை வைத்து நன்கு வாழ்ந்த குலம், கூலிவேலைக்கு ஆள் கிடைக்காமல், தீப்பெட்டி, சாக்கு தொழிற்சாலைக்களுக்கு நிலங்களை விற்றதாலும், விவசாயம் நசிந்து, அடுத்த தலைமுறையினரே கூலிவேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
ஆசிரியரின் எந்த ஒரு தலையிடும் நாவலில் இல்லை. தன்னை மறைத்தபடியே இருக்கிறார். ஆகச் சிறந்த ஒன்றாக இந்நாவலில் இதை கூறலாம். இதுவே நாவலின் மீதான நம்பத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மினுத்தான்‍ மாடத்தி நிஜ கதாப்பாத்திரங்களாக நாவல் முழுவதும் வருகிறார்கள். நிலபுலன்களோடு கிராமத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, எந்த ஊரில் இம்மாதிரி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களை காண மனம் ஆவல்கொள்கிறது. நாவல் முடிவு அது சாத்தியமில்லை எனனும் போது சற்று கலக்கம்தான் ஏற்படுத்துகிறது.
பிறகு, கோவேறுக் கழுதைகள், தூர்வை மட்டுமே சிறந்த தலித் நாவல்களாக சுட்டப்படுகின்றன. தீராநதிப் பேட்டியில் அவர் குறிப்பிடுவதும் இதைத்தான். அத்தோடு ``என்னை பிறப்பால் வேண்டுமென்றால் தலித் என்று குறிப்பிடுங்கள். ஆனால் எழுத்தால் என்னைப் பிரிக்காதீர்கள்'' என்கிறார்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெரிய பாண்டில் படிக்க எளிதாக் உள்ளது. ஒருசில இடத்தில் அச்சுப்பிழைகள் உள்ளன, ஆனால், கிராமிய சொலவடைகள், வட்டார எழுத்துக்கள் உள்ள ஒரு நாவலில் இது மிக குறைவே. தர்மனின் மற்றொரு நாவலான 'கூகை'யை படிக்க ஆவல் ஏற்படுத்துகிறது இந்த நாவல்.

- o0o -

No comments: