Tuesday, November 2, 2010

தாகம் ‍- கு.சின்னப்பபாரதி



வாழ்க்கை தாகம், சுதந்திர தாகம் என்று பொருள்படும் இந்த தாகம் எனும் நாவல் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி மாரப்பன் எனும் விவசாயின் வாழ்க்கையையும் இரண்டாம் பகுதி தாழ்த்தப்பட்ட அடிமைகளின் வாழ்க்கையையும், மார்க்ஸிய முறையில் எழுச்சி பெறுவதையும் கூறுகிறது. இரண்டாம் பகுதியை படிக்க ஆரம்பித்ததும் 290 பக்கங்கள் கொண்ட முதல் பகுதி ஏன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது எனற குழப்பம் ஏற்படுகிறது.அத்துடன் மாரப்பனின் இத்தனைநீள கதை தேவையா என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அதிக விவரங்களும், வர்ணணைகளையும் கொண்ட ஆரம்பபகுதிகளை படிக்கும்போது சலிப்பும்,அயர்ச்சியும் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் அதன் பின்னால் நாம் கண்டிராத வாழ்க்கை முறையையும், புதிய அனுபவங்களையையும் பெறுகிறோம் எனும்போது புத்தகத்தை கீழே வைக்க மனம் வருவதில்லை.
தஞ்சைபகுதி விவசாயியைவிட ஒருபங்கு கடின உழைப்பை செலுத்தவேண்டிய நிலையில் கொங்கும‌ண்டல விவசாயியான மாரப்பனின் வாழ்க்கைமுறை துயரம் நிறைந்தது. அதனுடே அவன் வாழ்க்கை செல்கிறது. மனைவி, குழந்தைகள் என்று இருந்தாலும் நிலத்தினுடன் அவன் கொள்ளும் உறவு அலாதியானது. மாரக்காள், கோமாளிக் கிழவர் பாத்திரங்கள் மிக அழகாகச் உருவாக்கப்பட்டுள்ளன. கோமாளிக்கிழவர் பேசு பேச்சுக்கள் ஒரு வயோதிகரிடம் கதை கேட்ட நிறைவை அளிப்பவை.
களப்பணி செய்து நாவல் எழுதும் வழக்கம் கொண்ட சின்னப்பபாரதியின் மற்றய கதைகள் போல இதுவும் அமைதிருக்கிறது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன் போன்றவர்கள் எழுதும் பாணியிலான நாவல்தான் என்றாலும், அதிலிருந்து வேறுபடும் விசயஙகளும் உள்ளன. கிராமத்தில் கருகலைப்பிற்கு எருக்கஞ் செடியை உபயோகித்தல், அடிமைகளின் திருமண உறவுகள், என்று பல அத்தனையும் புதிய நாம் கேட்டிராத விசயங்கள். இதற்க்காக ஆசியரரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
-o0o-

No comments: