Wednesday, October 12, 2011

அப்ரஞ்ஜி: சிறுகதை



இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின் சாந்தாவின் 25ஆம் வருட திதி இன்று. மஞ்சள் காமாலையில் இறந்த அவ‌ளுக்கு கூழுற்றும் தினம், இந்த வருடம் சிறப்பாக செய்துவிடவேண்டுமென ராஜேஸ்வரி நேற்றே கூறிவிட்டார்.

விடியாகாலை வேளையில் அடுப்பு வெப்பத்தின் காரணமாக உடலில் பரவியிருந்த வியர்வை குளிராய் இதமாய் இருந்தது. துடைக்க மனம் வராமல் வேலை செய்துகொண்டிருந்தாள் அப்ரஞ்ஜி. கொழுக்கட்டையின் மணம் அந்த தோட்டத்து ரேழி முழுவதும் பரவியிருந்தது. பெரிய சுவாலைகள் பாத்திரத்தின் பாதியளவிற்கு மேல் பரவி அமானுஷ்ய சத்தத்துடன் எரிந்துகொண்டிருந்தது அடுப்பு. சாயம்போடும் கரிபிடித்த பெரிய பாத்திரங்களும் கரண்டிகளும் தாறுமாறாய் ஒரு பக்கமும், மறுபக்கம் விறகுகளின் அடுக்கு ரயிலொடு சார்புவரைக்கும் உயர்ந்திருந்தன. வெப்பம் தாளாமல் நீர்கொழுக்கட்டைகள் பாத்திரத்திலிருந்து வெளியேவர எத்தளிப்பது போல‌ தத்தளித்துக் கொண்டிருந்தன. சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. வரும் நேரம்தான், காகங்கள், குயில்களின் கத்தும் ஒலிகள் கேட்க தொடங்கிவிட்டன. விடிவதற்குள் முடிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கண்களும் கைகளும் வேகமாக செயல்பட்டன.

அப்ரஞ்ஜி…..’ இருட்டிலிருந்து ஒருகுரல் நீண்டகுரல் வெளிப்பட்டது.

…’ பதிலளித்தாள்.

ஆயிடுச்சா…’ இது நாகமனியின் மருமகள் ராஜியின் குரல்.

ஆயிட்டே இருக்குடியம்மா…, இதோ முடிஞ்சிடும்

ராஜியின் மருமகள் தனத்தின் மாப்பிள்ளைக்கு போனவிருந்தின் போது அவர்கள் ஊரில் கிடைக்காத இந்த நீர்கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிட்டதால் இம்முறையும், தனம் கேட்டுக்கொண்டதன்பேரில், ஊரிலிருந்து வரும் அவருக்காக விசேஷமாக தயாராகிவருகிறது.

அளவாக இருந்த கொழுக்கட்டைகளாக பார்த்து எடுத்து இரண்டு குண்டான்களில் வைத்துக்கொண்டு, மிச்சத்தை கட்டைகள் இழுத்துவிடப்பட்ட அடுப்பிலேயே விட்டுவிட்டு எதிர்கொண்டுவந்த தனத்திடம் கொடுத்தாள் அப்ரஞ்ஜி. நினைத்ததைவிட வேகமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் விரிந்த உதடுகளில் காவிபடர்ந்த பற்களிடையே சிரிப்பாக பெற்றுக்கொண்டாள் தனம். அப்ரஞ்ஜி என்றாலே வேகம்தான். எத்தனை பேருக்கு எத்தனை வகை என்றாலும் சொன்ன நேரத்தில் செய்துமுடித்துவிடக் கூடியவள்.

தனத்தின் மகள் பிருந்தாவிற்கு சந்தோஷில்பெரிய செலவழித்து பிறந்த ஆண்குழந்தையை கவனிக்க சென்றது அப்ரஞ்ஜிதான். ராசியான கையென்று வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு முதல் சக்கரைத் தண்ணி கொடுத்தது அப்ரஞ்ஜிதான். முன்பெல்லாம் பிரசவத்திற்கு அவளைதான் அழைத்தார்கள். மொட்ட வீட்டு நாகமணி, கீழத்தெரு காவேரியம்மாளுக்கு பத்து பத்து பிள்ளைகள் சளைக்காமல் பிரசவம் பார்த்தாள், பிற்பாடு ஆஸ்பத்திரி, கிளினிக் என வந்துவிட அவளுக்கு உடல் ஒத்துழைப்பு குறைந்துவிட பார்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் இன்றைக்கும் குழந்தைக்கு முதல் சக்கரைத்தண்ணி அவள் கையால்தான், பிறகு குழந்தையை குளிப்பாட்டுவதிலிருந்து பீதுணி அள்ளுவதுவரை அவள்தான் செய்வாள்.

பஞ்சுபஞ்சாக பறக்கும் வெள்ளைமுடி, லேசான கூன்விழுந்த முதுகு, இறுக்கிகட்டப்பட்ட சேலையில் அப்ரஞ்சியை பார்க்க தொண்ணூறு வயது என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது. இதுவரை அப்ரஞ்ஜி நோய், நொடியென்று படுத்தது கிடையாது. தண்ணீர் இறைப்பது, இந்த தெருவில் நாலு வீடுகளுக்கு வாசல் தெளித்து கோலம் போடுவதும், துணிதுவைப்பதும் இப்போதும் செய்கிறாள். கோரா சாயம் வெளுக்க கும்பகோணத்தில் இப்போது கூப்பிட்டாலும் போய் செய்வாள். லெட்சுமி வீட்டில் முன்பு தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தாள். நாகமணி இருக்கும் வரை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். நல்லா பொறுப்பா வேலைய பாக்க்குற அப்ரஞ்ஜி நீ, அங்க கூப்பிறாங்க இங்க் கூப்பிறாங்கனு எங்கேயும் போயிற கூடாது ஆமா, நம்ம கூடவே இருக்கனும்என்பாள். ஆபத்துல உதவுற நா உன்னைய விட்டு எங்க போயிறப்போறேன் நாவமணிஎன்று அப்ரஞ்ஜியும் சளைக்காமல் கூறுவாள். அவளின் பத்து பிள்ளைகளையும் பிரசவம் பார்த்து வளர்த்தவள் அன்றுமுதல் என்ன விசேஷங்கள் என்றாலும் அவள்தான் முன் நிற்பாள்.

கொழுக்கட்டைகளை வாங்கிகொண்ட தனம், ‘அப்ரஞ்ஜி, நேத்து சொன்னமாரி இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு மொன பொங்கல் வச்சிடு, இந்தா காசுஎன்று பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சரிடியம்மா, கூலுத்தி முடிஞ்சொன்ன, பதினொருபன்னன்டு மணிக்கா வெச்சுறேன்’.

எப்போதும் மொனபொங்கல் செய்வது அப்ரஞ்ஜிதான். லச்சுமியம்மா வீட்டு கொல்லையில் மூன்று செங்கல்லும், ஒரு சிறு சட்டியும், ஒரு செம்படமும் இருக்கின்றன அந்த தெரு மொனைக்கு தோதாக. கொஞ்சம் அரிசியும், வெல்லமும் வாங்கி அந்த சின்ன சட்டியில் போட்டு மூன்றுகல்லில் அடுப்பு மூட்டி கொதித்ததும் வடித்து மொகனையிலேயே உள்ள திரிசூலமோ, பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதேனும் சாமிக்கோ படைத்துவிட்டு, சுற்றியிருக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்ததுபோக மிச்சத்தை அங்கிருக்கும் சிறுகல்லில் வைத்துவிட்டு வருவாள். தெரு தாண்டி புருஷன் வீட்டிற்கு பிறந்த குழந்தையோடு செல்பவளுக்கு, குழந்தைக்கும், அவளுக்கும் எந்த காத்து கருப்பு அண்டாமலிருக்க மொனபொங்கல் செய்வது ஐதீகம்.

மொனபொங்கல் என்றில்லை வளைகாப்பு, காதுகுத்து, கல்யாணம், கருமாதி இப்படி விசேஷ நாட்களில் முறையாக செய்ய‌ அப்ரஞ்ஜி இல்லாமல் முடியாது. சில நேரங்களில் எல்லா வீட்டு விசேஷங்கள் ஒரேநாளில் அமைந்துவிட்டால் எல்லா வீட்டிற்கும் போகமுடியாமல் அவள் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதுபோக‌ பாவில் சிக்கல் எடுக்க, சாயம்போட, பிறந்த குழந்தைக்கு குளிப்பாட்ட, தீட்டுக்கழிக்க, காட்டேரி பூசை செய்ய, அரிவுரி அம்மன் பூசை செய்ய எல்லாவற்றிற்கும் அப்ரஞ்ஜிதான்.

தீபாவளி சீசனில் பட்டுஜவளி கும்பகோணத்தில் அமோகமாக இருக்கும். வேலையும் அதற்குதகுந்தாற் போல அவளுக்கு இருக்கும். வீதியில் பாவுபோடும் சம‌யங்களில் வாசு ஆள்சொல்லி அனுப்பிவிடுவார். அப்ரஞ்ஜியின் விரல்களின் அசைவுகளுக்கு மட்டுமே பாவின் சிக்கல்கள் விரைந்து நேராகும்.

பெண் பிரசவத்தின்போது. அப்ரஞ்ஜிபச்ச உடம்பு, பொண்ண பாத்துக்கஎன்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து - குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.
 
குழந்தை ரொம்ப அழுதால் அப்ரஞ்ஜியை கூப்பிட்டுவிடுவார்கள். எண்ணெய் தேய்த்து நீவி , சாம்பிராணி போட்டு பாட்டு படிப்பாள்

தாள மாமையா - தசரத
ராம சந்திரையா

கஞ்சி வரதையா ‍- எனை

கொஞ்சி வருதையா

மடியில் வைத்து குழந்தைக்கு லட்டுபிடிப்பது போல காட்டி அப்ரஞ்சி பாடும் போது குழந்தை சொக்கி சிரிப்பதை கண்டு ஊரே மகிழ்ந்துபோகும்.

செத்தவர்களின் திதிநாள், பொங்கபடைப்பை அய்யர் வந்து கூறுவதற்கு முன்பே ஞாபகப்படுத்துவது அப்ரஞ்ஜியாகத்தான் இருக்கும். சரியான நாளில் அவளின் கனவில் வந்து இறந்தவர்கள் சோறு கேட்டுவிடுவார்கள். சோறு கேட்டபின் பூஜை வைக்காமல் விட்டுவிட முடியாதே? திதி வைக்கும்நாளில் செத்தவர்கள் அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு வருவது அவளுக்கு மட்டுமே தெரியும். தனக்கு பிடித்ததை வைத்து படைத்தற்கு நன்றி சொல்லிவிட்டோ அல்லது பிடிக்கவில்லை என்று அவளிடம் திட்டிவிட்டோ செல்வார்கள். இருபது வருடம் முன்பு ராஜேஸ்வரியின் எட்டுவயது மகள் மஞ்சகாமாலை நோய்வந்து செத்தபின் ஒவ்வொரு சித்திரையிலும் அந்த நட்சத்திரத்தில் நாள் மாறாமல் அவள் வந்து அப்ரஞ்சியிடம் கூல் ஊற்றச் சொல்வாள். இன்று அந்த கூல் ஊற்றும் நாள்.
தனம் கொடுத்த பழையதை எடுத்து செல்பின் மீது வைத்துவிட்டு அரசலாறிற்கு குளிக்க கிளம்பும்போது இறந்த ராஜேஸ்வரியின் மகளை நினைத்துக்கொண்டாள். நேற்று மாதிரி இருக்கிறது அதற்குள் இருபதுஐந்து வருடஙகள் ஆகிவிட்டன. சட்டென போய்விட்டாள். அவளிடம் பேச்சு கொடுத்து மாளாது. அத்தனை சுட்டி. கிள்ளிபோடும் வெத்தலை தொடுமைகள் அவளுக்கு பிடிக்கும். பாட்டி பாட்டி என்று அவள் பின்னாலெயே சுற்றுவாள். அவள்தான் கேட்டாள் அப்ரஞ்ஜின்னா என்ன பாட்டி என்று.

ம்.. தங்கம்டி தங்ககட்டி பாத்திருக்கியா அதான் அர்த்தம்

அப்ப தங்க க‌ட்டியா நீஎன்று கூறிவிட்டு சீவலை வாயில் போட்டபடி ஓடினாள்.

நாகமணி வீட்டில் சாயம் போட்டுக்கொண்டிருந்த சின்னையாவைத்தான் அப்ரஞ்ஜிக்கு கட்டிவைத்தார்கள். உண்மை பெயரான செல்லம்மா, பருவத்தில் ‍ கல்யாணம் கட்டிவந்த சமயத்தில், அவள் அழகில் மயங்கி அப்ரஞ்ஜி என்று மாமியாகாரி செல்லமாக அழைக்க அதுவே நிலைத்துப் போனது. கூற‌ப்பட்டு சேலையில் அவ்வளவு பாந்தமாக இருந்தாளாம். சின்னையாவை பார்த்து, இந்த பழத்துக்கா இவளை கட்டிக்கொடுத்தார்கள் என்று கேட்காதவர்கள் இல்லையாம். மாமியாகாரி போடி, உங்க வேலைய பாத்துக்கிட்டுஎன்பாள்.

என்ன சாபமோ, கொடுப்பினையோ தெரியவில்லை, கொஞ்ச நாளில் சின்னையா சித்தபிரமை பிடித்துபோனது. வறுமையில் உழன்ற அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டாள். தெருக்களிலேயே அழைந்துகொண்டிருந்தவன் அப்புறம் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவன் மூலமாக பிற‌ந்த அவளின் மகள் அம்புஜம் வளர்ந்தபின் இருக்கும் காசை வைத்து தாராசுரத்தில் கட்டிக்கொடுத்தாள். கொஞ்சநாளில் அவளும் காணாமல் போனாள். ஆற்றில் விழுந்து செத்துவிட்டதாகவும், அவ்வூரின் வியாபாரி ஒருவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், அவளின் ஒரு கொழுந்தனை வைத்துக் கொண்டு அம்மாபேட்டையில் குடித்தனம் நடத்துவதாகவும் பேச்சு அடிப்பட்டது. அப்ரஞ்ஜி என்னஏது என்று புரியாமல் காலத்தை ஓட்டினாள்.

சின்னனையா காணாமல் போனபோதும், அம்புஜம் விட்டுபோன போதும் ஆறுதலாய் இருந்தவர்கள் நாகமணியும் காவேரியும் தான். ஒன்னுக்கும் கவலபடாத ஒன்னைய அப்படியே விட்டுடமாட்டோம்என்று ஆறுதல் சொன்னார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் இப்போதும் அதே பாச‌த்துடன்தான் பார்க்கிறார்கள். அவர்கள் போய் பல ஆண்டுகள் ஆனபிறகும், அவர்கள் சந்ததியர்கள் லெட்சுமி, மல்லிகா, மீனாட்சி என்று அத்தனை பேரும் அவளுக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் போனபின்பும் அவர்களின் மகன்கள் மகள்கள் அவர்களின் மகன்கள், மகள்கள் என்று பார்த்துவிட்டாள், எல்லாருக்கும் அவள் பிரியம்தான்.

இத்தனை காலத்திலும் தலைசுற்றலை தவிர‌ நோய்நொடி என்று வந்து படுத்ததுகிடையாது. மற்றவர்களுக்கு பாரமாக இருந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு இருந்தாலும் அப்படி நம்பள ஆண்டவன் வைக்கமாட்டான் என்று திடமாக நம்பியிருந்தாள்’. அவளுக்கு இன்றையதினம் இற்றோடு. இந்த நெசவாளர் குடியிருப்பில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்தில் அவர்கள் வீடுகளிலேயே ஆங்காங்கே தங்கிகொண்டு வாழ்க்கை நடத்திவந்தாள்.

பாதியிருட்டிலேயே அரசலாற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட இன்று செய்யவேண்டிய கூழுற்றுதல், மொனபொங்கல் வேலைகளை பற்றி நினைத்தபடி நிதானமாக நடந்துவந்தாள், துவைத்த துணிகள் ஈரத்தோடு தோள்களில். சொட்டிய துளிகள் அவள் நடந்துவந்த பாதையை காட்டின. ரோட்டில் அந்த நேரத்தில் யாரும் இருக்கபோவதில்லை. மும்மூர்த்தி விநாயகர் கோவில் அருகில் வந்தபோது தலைசுற்றலாக‌ வந்தது. விநாயகரை நின்று வழிபட்டு செல்வது வழக்கம். முன்னாடி வச்சலா மட்டுமே பால் வாங்க குவளையோடு சென்றுகொண்டிருந்தாள். அவளை கூப்பிட நினைத்தாள் ஆனால் கொஞ்ச நேரத்தில் சட்டென மயங்கி விழுந்தாள்.

பொழுதுபுலர்ந்தபோது அப்ரஞ்ஜி மயங்கி விழுந்து கிடப்பது தெரிய, ரோட்டில் சென்றவர்கள் பயந்து வீடுகளிலும் கடைகளிலும் ஏறிக்கொண்டார்கள். டீக்குடிக்க வந்த ரெங்கா பார்த்துவிட்டு நாகமணியின் கொள்ளுபேரன் தினேஷிடம் பட்டுநூல்காரம்மா மய‌ங்கி விழுந்துகிடக்குஎன்ற செய்தி சொன்னான். வெய்யில் ஏறி அப்ரஞ்ஜி மேல் மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது. தெரு முழுவதும் இதே பேச்சாக இருந்தது. அப்ரஞ்ஜி இப்படி ஆயிட்டாளே என்றார்கள், அவளுக்கு நல்ல மனசு அதான் இப்படி சட்னு போய்டா என்றார்கள்.

சைக்கிள் மிதித்து வந்த தினேஷ், உதட்டோரம் ரத்தகரையைப் பார்த்துவிட்டு முனிசிபாலிட்டிக்கு உடனே தகவல் சொன்னான். கொஞ்ச நேரத்தில் முனிசிபாலிட்டிகாரர்கள் வந்து வண்டியில் தூக்கி போட்டு சென்றபின்னே கடைகளிலும், வீடுகளிலும் நின்றவர்கள் இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

_o0o_

Tuesday, October 11, 2011

இரண்டாம் படி: சிறுகதை


சித்தி இந்த ரூபத்தில் வந்து உதவுவார் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பஸ்ஸில் அமர்ந்தபடி நாலு பக்கமும் திரும்பி பார்த்துக்கொண்டான். வெளியில் தெரிந்த இருட்டு லேசாக பயமுறுத்துவதாக இருந்தது. ஏதோ ஒரு பக்கத்திலிருந்து அவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனதை அரித்துக்கொண்டிருந்தது.


கொஞ்சநாட்களுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாய் படித்த மகேஷ்பாபுவை கும்பகோணம் பஸ்ஸாண்டில் வைத்து பார்த்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ந‌ல்ல உயரமாகவும் அழகாகவும் இருந்தான். மூன்றாண்டுகளுக்கு பின் இப்போது கல்லூரி வாழ்க்கையை முடித்து இன்னும் உயரமாகவும், தடித்தும், அழகாகவும் மாறியிருந்தான். தியாகுவிற்கு தான் அப்போதிருந்தே ஒல்லியாக அப்படியே இருப்பதாகப்பட்டது.


அந்த சந்திப்பில் மகேஷ் அவனுக்கு ந‌ல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியிருந்தான். சொன்னபடி போனும் செய்தான். அடுத்தநாள் காலையில் பங்கிற்கு செல்லும்போதே சைக்கிளை வேகமாக மிதிப்பதாக தோன்றியது. கல்லாவில் அமர்ந்து துணியால் டேபிளை தட்டும்போது பெட்ரோல் போடும் பன்னீர், ‘என்ன தியாகு, ஒரே சிந்தனையா இருக்காப்ல தெரியிது,’ என்று கூறியபடியே உள்ளே சென்றான். இன்னும் முதலாளி வந்திருக்கவில்லை. பன்னீர் கூறியது எரிச்சலாகவும் உடனே க்ண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து சரி செய்துகொள்ள வேண்டும் என தோன்றியது. அடக்கி கொண்டான். மேலும் கேள்விகள் கேட்டு எண்ணங்களைத் தெரிந்து கொண்டுவிடுவானோ என பயமாக இருந்தது. அவனைப் பார்ப்பதையே தவிர்த்தான்.


பள்ளிப்படிப்பை முடித்ததும் அப்பாவின் நண்பர் மூலமாக இங்கு வேலைக்கு வந்துவிட்டான். பெட்ரோலுக்கும், ஆயிலுக்கும் சீட்டு கிழித்துக் கொடுத்து, காசு வாங்கி, பின் மொத்த வரவு செலவுக் கணக்கை சரிபார்த்து வீட்டுக்கு போகும்போது முதலாளியிடம் கணக்கை சமர்ப்பித்து செல்லவேண்டும். மூன்றாண்டுகளாக இதே வேலைதான். ஞாயிறு விடுமுறை என்றுபேர், ஒருநாள் சம்பளமாகக் கணக்கில் கொண்டு அந்த நாளும் வரவேண்டியிருக்கும். கல்யாணம், கருமாதி என்றால் உண்டு, மற்ற எந்த நாளிலும் விடுமுறை கிடையாது. பங்க் உரிமையாளர்கள் சங்கப் போராட்டம் போன்ற நாளில்கூட பாதி திறந்துவைத்து விற்றுக் கொண்டிருபார்கள். பாபநாசம் போன்ற சிறிய ஊரில் யார் கேட்கப்போகிறார்கள்.
 
படிக்கும்போது சில ஆசிரியர்கள் தயாரித்து தரும் PKV (பரிட்சைக்குக் கட்டாயம் வரும்) கேள்விகளை கேட்டால் கொடுக்காதவன் என்ன செய்துவிடுவான் என முதலில் தோன்றியது. அவன் சொன்னதுபோல் பாண்டிச்சேரியில் ஒரு வேலை இருப்பதாகவும், பத்து முதல் பட்டதாரி வரை தகுதி என்றும் மேலும் மூன்று நண்பர்கள் வருவதாகவும், நீயும் நாளை கும்பகோணம் வந்துவிடென்று கூறியிருந்தான்.


பாண்டி என்றதும் தயக்கமாக இருந்தது. உள்ளூர் என்றால் பரவாயில்லை, இத்தனை தூரம் சென்று வேலை கிடைக்கவில்லையெனில் வீண்செலவுதானே என யோசித்தான். அத்தனை பணமும் கைவசமில்லை. பக்கத்தில் மற்றொரு வேலை வரும்போது சென்று கொள்ளலாம், என இதை தவிர்க்கும் விதமாக பாண்டியில் ஒரு சித்தி மட்டுமே இருக்கிறார், வேறுயாரும் தெரியாது என கூறிப்பார்த்தான். தங்குவதற்கும், கம்பெனி பார்த்துக் கொள்ளும், மறக்காமல் வந்துவிடு என்று கூறிவிட்டான். தட்டமுடியவில்லை.
 முதலாளியிடம் லீவு கேட்பது அத்தனை எளிதான காரியமல்ல. பேசும் போது ஊடுருவித் துளைக்கும் கண்களைப் பார்ப்பது அச்சம் தரக்கூடியது. இல்லையென்று கூறிவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்ற தைரியத்தில், பெரியப்பாவிற்கு அறுபது, விசேஷம், இரண்டு நாள் லீவு என்று மெதுவாக கேட்டதும், நீண்ட யோசனையில் இருப்பவர் மாதிரி இருந்தவர் தீடீரென ‘சரி போய்வா,’ என்றார். பொதுவாக அப்படி சொல்பவரல்ல, கேள்விமேல் கேள்வி கேட்பார். பொய் சொல்லி மாட்டிக் கொண்டால் ‘சரி நீ வீட்டிலேபோய் இருந்துக்கோ,’ என்று அனுப்பிவிடக்கூடியவர். அவனும் அப்பாவும் சம்பாதிக்கும் சொற்ப பணம்தான் குடும்பத்தை தாங்குகிறது. அம்மா, தங்கை, ரெண்டு தம்பிகள் - ‍கடைசி தம்பி கொஞ்சம் புத்திசுவாதீன‌மில்லாதவன் - என்று குடும்பம் பெரியது.

அப்பாவிற்குப் பயந்து, அம்மாவிடம் மட்டுமே விசயத்தை சொல்லிவிட்டு, மறுநாள் விடியற்காலையில் கும்பகோணம் வந்து, மகேஷைக் காணும்வரை முதலாளி பற்றிய, வேலைக்கு வேறு ஆளை பார்த்திருப்பாரோ என்ற, அந்த அச்சம் இருந்து கொண்டேயிருந்தது. ‌அவனுக்கு, மகேஷுடன் வந்திருந்த மூன்று நண்பர்களின் உற்சாகம் மெல்லத் தொற்றிக்கொண்டது. இதுநாள் வரை ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாகவே எண்ணினான். அறிமுகப்படுத்தப்பட்ட மூவரில் - பாலா, முருகேசன், மணி‍ - பாலா மகேஷின் உதவியாளனாகவே செயல்பட்டான். மகேஷ் ஏதாவது கூறும்போது அடிக்கடி ‘மாப்ள, நீ சொன்னா சரியாதான்டா இருக்கு,’ என்றான். மகேஷ் அனைவரையும் வழிநடத்திச் சென்றான. எல்லா விசயங்களும் அவனுக்கு தெரிந்திருந்தன. கடலூரில் இறங்கி, சாப்பிட்டுவிட்டு பாண்டிக்கு பஸ் ஏறினர்.


மூன்றாண்டுகள் பங்கைவிட்டு எங்கும் செல்லாமல் இருந்ததால், எல்லா இடங்களும் புதியதாக, அப்போதுதான் பார்ப்பது போலிருந்தன தியாகுவிற்கு. பாண்டிச்சேரி வரும்வரை மற்றவர்களுடன் எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்களுக்கு இருந்த வேகம், மற்றவர்களுடன் சகஜமாகப் பழகும்முறை எல்லாம் தனக்கு மட்டுப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பாண்டியில் இறங்கி ஒரு டவுன் பஸ்ஸில் ஏறியபோதுதான் ஒரு சந்தேகமாக‌ புதிய வேலையைப் பற்றி மகேஷிடம் கேட்க ஆரம்பித்தான்.


அவன் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த நபர்களுக்குத் தகுந்த வேலையிருப்பதாக வந்த பத்திரிக்கை விளம்பரத்‌தை காண்பித்தான். அதில் சொல்லப்பட்டதிலிருந்து அது ஒரு சிமெண்ட் ஃபேக்டரி என் புரிந்தது. வேலை நிச்சயம், பயப்படதேவையில்லை என்று தைரியப்படுத்தினான் மகேஷ்.


பஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில வீடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகைத் தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் ஃபேக்டரி வந்தது. கடற்கரைக்குச் சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.


அந்த பகுதி ஊரிலிருந்து மிகவும் தள்ளியிருப்பதாகப்பட்டது. வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் பேசி நேரம் குறித்துக்கொண்டான் மகேஷ். இவர்களை தவிர வேறுசிலரும் நேர்காணலுக்காக அந்த அறையில் இருந்தார்கள். இம்மாதிரி இடங்களுக்கு வருவது தியாகுவிற்கு முதல் முறை. அழகான கட்டமைப்பில் இருந்தது அந்த அறை. மெத்தென்று இருக்கும் பெரிய சோபாக்கள், சேர்கள், அலங்காரப் பொருட்கள் என்று அறை முழுவதும் நிறைந்திருந்தது. சிறிய செயற்கை நீருற்று நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வண்ணங்கள் மாறுபடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். மிக சங்கோஜமாகக் கைகால்களை எங்கே வைத்துக் கொள்வது என்று திணறியபடி இருந்தான். ஆனால் சந்தோஷமாக இருந்தது.


ஒவ்வொருவராக உள்ளே அழைத்துப் பேசினார் மேலாளர். தனக்கு வேலை கிடக்க போவதில்லை என தோன்றியது. சற்று நேரத்தில் வெளியே வந்த மேலாளர் வந்திருந்தவர்களை அழைத்து வலித்து சேர்க்கப்பட்ட ஒரு உற்சாகத்துடன் இந்தியாவில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்று எனவும், இதை முதல் பத்து இடத்திற்கு கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை எனவும், ஆகவே உங்கள் அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகப் பேசி முடித்தார். சிலருக்கு நாலாயிரமும், சிலருக்கு மூவாயிரமும் அவர்களின் தகுதிப்படி அறிவித்தார். செய்யும் வேலைகளைப் பொருத்து அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்தப் பணம் தியாகுவிற்கு மிக அதிகம், அவன் நினைத்தும் பார்க்காதது, அத்தோடு யாரும் இத்தனை உற்சாகமாக அவனுடன் பேசியதில்லை‌ மகிழ்ச்சியில் திளைத்தான்.


அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் கட்டிடத்திலிருந்து வெளியே உள்ளடங்கி அமைந்திருந்தது. சிறிய கட்டிடம் ஆனால் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தது. அறைகளின் நடுவே ஹாலில் தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, சேர், உடற்பயிற்சி உபகரணங்கள் என அனைவரும் பயன்படுதுமாறு வைக்கப்பட்டிருந்தன, சிலர் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டும், சிலர் அரட்டை அடித்துக்கொண்டுமிருந்தனர்.


பொருட்களை வைத்தபின் அங்கு வந்த ஒருவர், அனைவரையும் அழைத்துச் சென்று தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பித்தார். வரவேற்பறையிலிருந்து சற்று தள்ளி தனியே பிரிந்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே, இத்தனை மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றிருந்தது. மகேஷ் போன்றவர்களுக்கு வேதியியல் படித்திருந்ததால் லேபில் வேலை, சிலருக்கு குடோனில் வேலை, தியாகுவிற்கு உதவியாளனாக இயந்திரத்திலிருந்து வரும் சிமெண்டை பைகளில் பிடித்து அடுக்கி வைக்கும் வேலை. அதிக சிரமமில்லை. அங்கிருந்தவர்கள் அவனை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினர். ஐந்தரை மணிக்கெல்லாம் டாணென்று அனுப்பிவிட்டனர். ஒருமாதத்திற்கு பிற்கு ஷிஃப்ட்முறை கொடுக்கப்படும்.
 
அறைவந்து கண்ணாடியை பார்த்தபோது தான் வயதானவனாகிவிட்டதாக தோன்றியது. தியாகுவின் தலைமுடி, மீசையில் படிந்திருந்த சிமெண்ட் அப்படிஒரு தோற்றத்தை அளித்தது. மூக்கு துவாரத்துக்குள்ளும் சிமெண்ட்துகள்கள் இருந்தன‌. குளித்துவிட்டு வெளியே வந்தபோது மற்ற நண்பர்கள் வந்திருந்தனர். தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூர்தர்ஷன் மட்டும் தெரியும் அந்த‌ தொலைகாட்சிப் பெட்டியில் ஒரு ஆவண்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது.


அது சிமெண்ட் தொழிற்சாலையை பற்றியது. ஒவ்வொருவரும் சிரிப்புடன் மற்றவர்களை பார்த்துக்கொண்டு கவனித்தனர். அரைமணி நேரம் ஓடிய அந்தப்படம் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் கண், நுரையீரல் கோளாறுகளை பற்றியும், கான்சர் போன்ற் வியாதிகளைப் பற்றியும் விரிவாகக் கூறியது. எதிர்பாராத கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிபோல, அந்த நிகழ்ச்சி முடிந்தபோது நீண்ட மெளனம் நிலவியது. முதலில் பேசியது மகேஷ்தான். ‘என்னடா இது’ என்றான். மற்றவர்கள் அவனின் அடுத்த பேச்சுக்காக காத்திருந்தனர்.


‘வேணாம்னு நினைக்கிறேன்டா, கிளம்பிடலாம் என்ன சொல்றீங்க,’ என்றான் சட்டென்று. சிறிய அமைதிக்குபின் பாலா, ‘நீ சொன்னா சரியாதான்டா இருக்கும் மாப்ள,’ என்றான். ’என்னடா சொல்றீங்க’ என்றான் மற்றவர்களைப் பார்த்து, தியாகுவிற்கு மேகமூட்டமாக இருப்பது போலிருந்தது. வந்த சந்தோஷம் வடிந்ததில் குழப்பமாக இருந்தது. ஒவ்வொருவராக பேசி, விவாதித்து தெளிவு பெற்றார்கள், வியாதியைவிட வேலையின்மையே தற்போது நல்லது என நினைத்தனர். பெட்ரோல் பங்கில் வேலை செய்வது உடலுக்கு தீங்கு என்று ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்‌தது. ஆனால் இது அதைவிட மோசமாக இருக்கிறதே.


‘நாளை சனிக்கிழமை, வேலை முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா கிள‌ம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுவோம், அங்க சரக்கு அடிச்சுட்டு கிளம்பிடலாம்,’ என்று மகேஷ் திட்டத்தை கூறியது முதலில் தலையசைத்தான் தியாகு, அதுவே சரியென்றும் தோன்றியது. யாரும் இதைப்பற்றி இங்கு பேசிக்கொள்ளகூடாது என்று உடன்பாடு.


அன்றிரவு ஏதேதோ நினைவுகளுடனும் கனவுகளுடனும் தூங்கினான். இரவு முழுவதும் தன் வாழ்க்கை பற்றிய யோசனையாக இருந்தது. தன் வயது ஒத்தவர்கள் மேலே சென்றுக் கொண்டிருக்கும்போது தான் மட்டும் ஒரு படிகூட முன் செல்ல முடியாமல் தன் வாழ்வு முழுவதும் இப்படியே செல்ல வேண்டியிருக்குமோ என‌ தோன்றியது. ஏதோ ஒன்று பாரமாக நெஞ்சை அழுத்தியது. இன்று தூங்கவே முடியாதா என்று நினைப்பு இரவு முழுவது தொடர்ந்தது.


மறுநாள் முழுவதும் இருநாளாக இல்லாத வீட்டின் நினைப்புடன் இருந்தான். வேலையை முடித்து மாலை அறைக்கு வந்ததுமே குளித்துவிட்டு பெட்டியுடன் ஒவ்வொருவராக கன்னூரில் பஸ் பிடித்து பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர். அனைவரும் கூடியதுமே மீண்டும் ஒரு உற்சாகம் வந்துவிட்டது. முருகேசன் அவனுக்கு தெரிந்த பாருக்கு அனைவரையும் அழைத்துசென்றான். ஐவர் அமரும் சேரில் ஓரமாக அமர்ந்துகொண்டான் தியாகு. உற்சாகம், ஊளைச் சத்தமாக, காட்டுக் கத்தலாக வெளிப்பட்டது மற்றவர்களிடம். சரக்கு அடிப்பதில்லை என்று சொல்ல பயந்து ஒரு பியர் மட்டும் சொன்னான் தியாகு. சைட்-டிஷ், மது என்று ஏகப்பட்டது சொன்னார்கள், ஒரு ரவுண்ட் வந்த‌துமே, ‘தம்பி சரக்கு அடிக்கக் கத்துக்க, சும்மா இந்தமாரி நக்கிகிட்டெல்லாம் இருக்கப்படாது, என்று மாறிமாறி தொடர் அறிவுரைகள் அனைவரும் கூற ஆரம்பித்தனர். புன்சிரிப்போடு தலையசைத்து கேட்டுக்கொண்டான். ஒரே வயதினர் என்றாலும் தம்பி என்று விளிக்குமளவிற்கு தாழ்ந்துவிட்டது அவனுக்கு கவலையளித்தது. பாலா பேசிக்கொண்டேயிருக்கும் போது போதையில் தலை தொங்க ஆரம்பித்தது.


முடிந்ததும் நடந்து, இருட்டில் மின்னிக்கொண்டிருந்த, பேருந்து நிலையம் சென்று கும்பகோணம் பேருந்தை தேடியபோது, சட்டென உறுதியுடன் ஞாபகம் பெற்றவனாக மகேஷைப் பார்த்து ‘ஏ எங்கம்மா ஊறுகா கொடுத்துவிட்டுருக்குடா, இங்க சித்திக்கிட்ட கொடுக்கணும், நாம அங்கயே இருக்கபோறம்ற தைரியத்துல‌ அப்புறம் கொடுத்துகலாம்னு இருந்துட்டேன், இல்லன்னா எங்கம்மா திட்டும், நா கொடுத்துட்டு வ‌ந்துறேன்’.


‘அப்படியா இடம் தெரியுமா, போயிறுவியா’.


‘அதெல்லாம் நா போயிருவேன், நீங்க கிளம்புங்க, நாளைக்கு நாம கும்மோணத்துல பாப்போம்’.


‘வேணும்னா துணைக்கு பாலா வரட்டுமா’


‘இல்லல்ல, நா ச‌ரியாப் போயிடுவேன். நாளைக்கு பாப்போம், வாரேன் எல்லோருக்கும்,’ என்று கூறியபடி கிளம்பினான் எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அவசரஅவச‌ரமாக‌ நிலையத்தின் பின்பக்கமாக ஓடில் கிளம்பி நகர்ந்து கொண்டிருந்த கன்னனூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டான் தியாகு.