Thursday, April 23, 2015

சுஜாதா விருதுகள் 2015

ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா விருதுகள் வெளியிடப்படுகின்றன. வந்த மற்ற ஆண்டுகளில் அவ்விருதுகளைப் பற்றியும் பெற்றவர்களைப் பற்றியும் பாராட்டி அல்லது விமர்சித்து எதுவும் எழுதியதில்லை. இந்த ஆண்டு அப்படி விடமுடியவில்லை. எதாவது சொல்லிவைப்போமே என்று தோன்றுகிறது. முக்கிய காரணம் நான் விரும்பும் எழுத்தாளர்களான பாவண்ணன், போகன், சமஸ் போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது ஒருகாரணம். மற்றவர்களை விரும்புவதில்லை என்று சொல்லமுடியாது. நான் சரியாக கவனித்ததில்லை. சுரேஷ் கண்ணன், சந்தோஷ் நாராயணன் இருவரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அல்லது கடந்துபோயிருக்கிறேன். சுரேஷை சினிமாவை எழுதுவதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சந்தோஷின் எழுத்துக்களை விகடனை பிரதிபலிப்பதால் விட்டிருக்கலாம். இப்போது இருவரின் எழுத்துகளை பார்க்கும்போது இளமையாகவும் புதுமையாகவும் இருந்து ஆச்சரியப்படுத்துகிறது. இதற்காகவே விருதுகளை அளிக்கலாம் போலும்.


பாவண்ணன் நெடுநாளாக எழுதிவரும் எழுத்தாளர். எந்த எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் அவரது எழுத்துகளை வாசிப்பது முதிர்ந்த நல்ல மனிதரிடம் கதை கேட்பது போன்றது. காமம், வன்மம் போன்ற எதுவும் இல்லாமல் எழுத்தில் தெரியும் முதிர்ச்சியும் அவரது அனுபவங்களும் வாசிப்பு தளமும், தமிழ் எழுத்துலகம் அவரை சரியாக கவனிக்கவில்லை என்பது புரியும். பச்சைக்கிளிகள் தொகுப்பில் உள்ள அற்புதமான பலகதைகளை வாசித்திருக்கிறேன்.

போகன் என் நெருங்கிய நண்பர் அவரின் கவிதையில் தெரியும் அங்கதமும், காமம் குறித்த அவரது பார்வையும், பரந்த வாசிப்பில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் எனக்கு எப்போதும் வியப்பு கொள்ள செய்பவைகள். எல்லா கவிதைகள் ஒரே மாதிரியானவை போன்று தெரிந்தாலும், நீண்ட கவிதைகளிலும் சரி, மிக சிறிய கவிதையிலும் சரி அவரின் தனித்துவம் குறைந்து விடாமல் எழுதுகிறார். எரிவதும் அணைவதும் ஒன்றே தொகுப்பிற்கு கிடைக்கும் இரண்டாவது விருது என்று நினைக்கிறேன்.

சமஸின் கட்டுரைகள் உடனே கவனத்தை கவர்வதும் வேறு ஒரு கோணத்தில் நம்மை சிந்திக்க செய்வதும் இயல்பாக நடப்பது போன்று தோன்றும். அடுத்த கட்டுரையைப் படிக்கும்போது அதே எண்ணத்தை நம் மனதில் முதலிலேயே விதைத்துவிடும்.

வினாயகமுருகன் எழுதும் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன், ஆனால் சென்னைக்கு மிக அருகில் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வேடிக்கையான ஒரு சிறுவனின் மனநிலையில் எதையும் யோசிப்பது போன்றே எழுதப்பட்டிருக்கும் அவரது சிறுகதைகள். அழகான எழுத்துநடை அவருக்கு வாய்த்திருப்பது நல்ல விஷயம். முதல் நாவலைவிட இந்த நாவலை நன்றாகவே எழுதியிருப்பதாக இணையத்தின் மூலம் அறியமுடிகிறது.

சுஜாதா விருதுகள் பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்


No comments: