Wednesday, April 22, 2015

கருத்துக்களை கருத்துகளால் வெல்லுதல்

கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுதல் வேண்டும் என்று சொல்லப்படுவதை நாம் பலசமயங்களில் பார்த்திருக்கலாம். டிவி விவாதங்களில், முகநூல் கமெண்டுகளில், தனிநபர் பேச்சுகளில் என்று பல்வேறு சமயங்களில் இப்படி ஒருவர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். தொலைக்காட்சி விவாதங்களை தினம் பார்க்கும் ஒருவருக்கு மனநோயாளியாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என பல்வேறு சூடான விவாதங்களின் போது நினைத்துப்பார்த்திருக்கிறேன்.

கருத்து என்றாலே அது பேச்சு வடிவில் இருக்கும் ஒரு கருத்தாக்கம்தான். அது பேச்சுவடிவில் மட்டும்தான் இருக்க முடியும். ஒரு கருத்தை வெல்ல மற்றொரு கருத்தால் தான் முடியும் மாறாக செயலில் செய்ய அதில் ஒன்றுமே இல்லை. பன்னெடுங்காலமாக நாம் கருத்தை கருத்தால் தான் வென்றிருக்கிறோம் அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறோம். தோல்வியை ஒப்புக்கொள்ளபடுவதை தவறாக பார்க்கப்பட்டதில்லை. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பல்வேறு விவாதங்களிலும் சரி ஆண்டுகளுக்கு முந்தைய பல விவாதங்களிலிலும் சரி இது தான் நடந்திருக்கிறது.

ஆனால் சமீபகாலமாக அப்படி நடந்திருக்கிறதா என்றால் நிச்சயமாக‌ இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உலகம் முழுக்க நடப்பதை ஒரு சப்பைகட்டாக சொல்லமுடியாது. வளர்ந்த நாடுகளில் இன்னும் பேச்சுரிமை தொடர்ந்தபடிதான் இருக்கிறது. உலகில் தொடர்ந்து சண்டை இட்டுக் கொண்டேயிருக்கும் சமூகம் இருக்கிறது தொடர்ந்து சமாதானம் செய்துக்கொள்ளும் சமூகமும் இருக்கிறது. நாம் இந்தியா முழுவதும் நம் சமூகத்தில் எப்போதும் சமாதானத்தையே விரும்புகிறது. சமாதானமற்ற ஒன்றை எப்போது நிராகரித்தே வந்திருக்கிறது..

இன்று எழுப்பிக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகள், குறுங்குழுக்களின் நிபந்தனைகள், தனிநபர் வேண்டுகோள்கள் என்று எதையும் ஆழ்ந்து கவனிக்கும்தோறும் அதில் இருக்கும் ஒரு தொணி நிச்சயம் ஒரு எச்சரிக்கையை கோடிட்டு விடப்பட்டிருக்கும். அப்படி சொல்லப்படாத எதுவும் மக்களை சென்றடையாது என்கிற எண்ணம் அவர்களிடம் இருப்பதுபோலவும் தெரியும். அதே வேளையில் மற்றொன்றையும் கவனிக்கலாம். ஒரு சின்ன எதிர்ப்பு அல்லது சரியான ஒரு மாற்று கருத்து ஒன்றை அதே எச்சரிக்கை தொணியுடன் வரும்போது அந்த முதல் குழு உடனே தன்னை சமாதான அழைப்பிற்கு வந்ததையும் அது வன்முறைக்கு இட்டுச் செல்லப்படுவதையும் கண்டித்து பேசியிருக்கும். தொடர்ந்து ஒரு படி இறங்கி மீண்டும் பேச்சுக் அழைப்பதாக் கூறியிருக்கும்.

ஏன் இந்த மாற்றம்? எதனால் இப்படி செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து செய்திகளை மட்டும் கவனிக்கும் யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். வெறும் செய்திகளாக மனதில் வைத்துக்கொண்டு தொடர்வதும் அல்லது நேற்றைய தகவல்களை புரிந்துக் கொள்ளாமல் இன்று நடக்கும் நட‌ப்புகளை கவனிப்பதென்பதும் பெரும் பாறைகளில் முட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

நடப்புகளை முக்கிய‌ செய்திகளாக்கும் உத்தியும், செய்திகளை பெரும் தகவலாக்கி கொடுக்கும் திறனும் கொண்ட இரு பெரும் கும்பல் தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் எல்லா பிரிவுகளிலும் இருக்கிறார்கள். ஒருவர் தொடங்கியதும் அதன் எதிரணியான மற்றவர்களும் பிடித்து இழுக்க‌ தயாராக இருக்கிறார்கள். இதனால் நம‌க்கு கிடைக்கும் ஒவ்வொரு செய்தியும் விஷம் தடவிய அம்பு எல்லா திசைகளிலும் பாய்ந்து வருகிறது.

ரயில் தண்டவாளம்போல் இரு கருத்துகளும் சமஅளவு தூரத்தில் மட்டுமே உள்ளன. இரண்டும் விலகாமல் ஒன்றை ஒன்று சமதூரத்தில் வைத்திருக்க விரும்புகின்றன. அதேவேளையில் நெருங்கிவர‌ எந்த குழு விரும்புவதில்லை. பல்வேறு அழுத்தங்கள் அவைகளுக்கு இருக்கலாம். இந்த கருத்தை, இந்த எதிர்வினையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது உடன்படுகிறோம் என்று சொல்லும் ஒரு குழுகூட நாம் நம் வாழ்நாளில் பார்க்கமுடியாது என நினைக்கிறேன்.

ஒரு குழுவின் வெற்றி மற்ற குழுவின் தோல்வியில்தான் இருக்கிறது. ஒரு குழு தனியாக தான் வெற்றியடைந்ததாக சொல்லிக் கொள்ளமுடியாது. சில நேரங்களில் தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வரும்போது, தன் தோல்விகளை தவிர்த்து வெற்றிகளை மட்டும் பேசுவதும், எதிர் குழுவின் வெற்றியை தவிர்த்து தோல்விகளை மட்டும் பேசுவதும் நடப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. உண்மையை சொல்வதென்றால் குழுவின் தோல்வி அதன் உறுப்பினனுக்கு தெரியாமல் இருப்பதே மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

அப்படி தோல்வியை தெரியவைக்க முயற்சிப்பதும் எதிரணியின் வெற்றியை பற்றி சொல்வதும் பெரிய ஆபத்தில் முடியும் என்பதால் மெளனமாக இருப்பது அவரவர் கெளரவத்திற்கு சிறந்தது என கொள்ளப்படுகிறது.

No comments: