Friday, May 15, 2015

வயோதிகம்


நானும் என் மனைவியும் ஒருமுறை திருவான்மியூரில் இருந்த வயதானவர்கள் தங்கும் ஹோம்க்கு சென்றிருந்தோம். அவரின் அம்மாவின் நினைவுநாளுக்கு அவர்களுக்கு பண உதவி செய்ய பிரியப்பட்டிருந்தோம். மிகச்சிறிய இடம். இடத்தின் தேவைக்கு அதிகமாக தாத்தாவும் பாட்டியுமாக நிறைய பேர் அங்கு இருந்தார்கள். சிலருக்கு இரும்பு கட்டில் சிலருக்கு மடக்கு கட்டில், சிலருக்கு தரையில் பாய் என்று அங்காங்கே இருந்தார்கள். மிக நெருக்கமாக நடக்க மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. சரியான கூரை கூட இல்லை ப்ளாட்பாரம் நடையிலெல்லாம் கட்டில் போட்டு வெய்யிலில் படுத்தும் நடந்தும் கிடந்தார்கள்.

அங்கிருந்த பெண்ணிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டும் கிளம்ப நினைத்தோம். அந்த பெண் உங்களுக்கு பணம் உதவி செய்ய வந்திருக்கிறார்கள் என்று பொருவாக ஒரு அறிமுக செய்து விட்டு அவங்கிட்ட எதாவது பேசிட்டு போகனும்னா போய் பேசுங்க என்றார். சற்று தயக்கமாக இருந்தது. என்ன பேசுவது. எதுபேசினாலும் அவர்களின் வயோதிகத்தைதான் பேச வேண்டியிருக்கும். சிலர் எங்களை கவனித்தார்கள். சிலர் கண்டுகொள்ளவேயில்லை. கொடுக்க எதுவும் கொண்டுவரவில்லை. கையிலிருந்த இனிப்புகளை காட்டி சாப்பிடுவீர்களா என்றேன். ஏன் என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். சுகர் பிரச்சனை என்று லேசாக இழுத்தேன். சாப்பிடவே எதுவும் இல்லை, எங்கேந்து சுகர் வரப்போகுது என்றார் ஒரு முதியவர். சங்கடமாக போய்விட்டது. இருப்பதை கொடுத்துவிட்டு மீண்டும் இன்னும் கொஞ்சம் இனிப்புகளை வாங்கி அவர்களுக்கு அளித்தோம். அவர்களிடம் இருந்தது மகிழ்ச்சியாக, கோபமா என்பதை கடைசிவரை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.


ஆண்கள்தான் வயோதிகத்தில் சிரமப்படுகிறார்கள். ஆண்களால் இந்த வயோதிகத்தை புரிந்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று நினைக்கிறேன். பெண்கள் முன்பே அதற்கு தயாராகிவிடுகிறார்கள். மனோபாஸ் போன்ற சில பிரச்சனைகள் அவர்களுக்கு அவர்களின் வயோதிகத்தை முன்பே அறிவித்துவிடுகின்றன. ஆண்களுக்கு வயதடைவது என்பது ஒரு தோல்வியில் முடியும் கதைப்போலத்தான் நினைக்கிறார்கள்.

பொதுவெளியில், வீட்டில் இழக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களுக்கு பத்தடி அடுப்படி போதுமானதாக இருக்கிறது. தன் மகன் அல்லது மகளின் வீடுகளில் பாத்திரம் தேய்த்து தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து இருந்துவிட முடியும். ஆனால் ஆண்களால் கூடத்தில் நந்தியாக அமர்ந்து எல்லோர் கோபத்தையும், வசைகளையும் கேட்கவேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு அதுவரை இருந்த மரியாதை, மதிப்பு வயோதிகத்தில் மெதுவாக வெளியேறுவதை உணர்வதில்லை. இன்றைய அவசர உலகில், தூரஊர்களுக்கு, நாடுகளுக்கு சென்றுவிடும் பிள்ளைகள் அல்லது வைத்துக்கொண்டு சிரமப்பட விரும்பாத பிள்ளைகளைப் பிரிந்து அம்மாக்களும் இங்கே எதாவது ஒரு ஹோமில் தங்க வேண்டியிருக்கிறது.

அதுவும் வயதானபின் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனுக்கு நேரும் சிரமங்கள் மிக அதிகம். வயதான ஆண்களுக்கு இதுதேவை என்று புரிந்து செயல்படும் அவர்களின் மனைவி பிரிந்ததும், அந்த சேவைகளை செய்ய ஆட்கள் இல்லாமல் போக வெறுமையில் ஆழ்ந்துவிடுகிறார்கள் ஆண்கள். இது மாதிரி வயோதிகம் நேர்வது கொடுமைதான். ஆனால் எல்லா ஆண்களும் இப்படி சிரமப்படுவதில்லை. கலை, இலக்கியம், ஆன்மிகம் போன்ற துறைகளில் கொஞ்சமேனும் ஆர்வம் இருக்கும் ஆண்கள் இந்த மனைவியற்ற வெறுமையை கடந்துவிடுவார்கள்.

ஹோம்கள் மாதிரியான இடங்களுக்கு ஆண்கள் வந்ததும் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள். அப்போது அவர்களின் பேச்சுகளில் தெரியும் சலிப்பும், வெறுமையும் நம்மால் புரிந்துக் கொள்ளவே முடியாது. வயோதிகம் ஆகஆக தனிமையும் அதே நேரத்தில் அக்கறையும்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அக்கறை என்பது அவர்களின் தேவைகளை புரிந்துபேசும் பேச்சுகள் செய்கைகள்தான்.

நான் வீடு எடுத்து தங்கியிருந்த ஆரம்ப வேலைநாட்களில் ஒரு வயோதிகர் தினம் நான் இருக்கும் இடத்திற்குவருவார். எதாவது பேசிக்கொண்டு இருப்பார். அவரைப் பார்த்து தலையசைப்பதே அவருக்கு போதுமானதாக இருந்தது. ஏனெனில் அவருக்கு காது சரியாக கேட்காது. சட்டை அணியாமல் அவர் ஒரு குச்சியுடன் நடந்துவரும் அழகு என்றும் மறக்கமுடியாது. அவர் சொன்ன பல விஷயங்கள் தொடர்பற்று இருந்தாலும் முக்கியமானவைதான். அவற்றை எல்லாம் இழந்து மக்கள் பணத்தின் பின்னால் ஓடுவதுதான் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது.

1 comment:

துளசி கோபால் said...

உண்மைதான். அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

மனைவியை இழந்த கணவர்கள் அதிகநாட்கள் வாழ்வதில்லை. கணவனை இழந்த மனைவிகள் தன் மனோ தைரியத்தாலதிக காலம் வாழ்கின்றனர்!