Saturday, June 6, 2015

பின் தொடரும் முதுமை


படிப்பிற்காக தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து போர்சனில் இருந்த 50 வயது நபர் காலையில் எழுந்ததும் பல்விளக்கிவிட்டு முதலில் செய்யும் வேலை முகத்துக்கு சேவிங்கும் தலைக்கு டையும் அடிப்பதுதான். ஒரு நாள் தவறாமல் செய்வார். அவருக்கு அதில் எந்த அலுப்போ சங்கடமோ இருந்ததாக ஞாபகமில்லை. ஏன் தினமும் செய்கிறீர்கள் என்றால், இல்லன்னா பார்க்க அசிங்கமா இருக்குமே என்பார். ஒரு அவருக்கு தீவிரமாக உடல்நிலை சரியில்லாதபோதுதான் தெரிந்தது நிஜமாக எவ்வளவு பயங்கரமாக இருக்கிறார் என்று. இரு நாட்களில் எல்லா தலை தாடை முடிகளும் வெள்ளையாகி வேறுநபர் போலவே இருந்தார். தோற்றத்தில் தெரிந்த முதுமையை விரட்ட எவ்வளவு பாடுபடுகிறார் என்று தெரிந்தது.

எல்லோருக்கும் முதுமை குறித்து ஒரு பயம் இருப்பதாக நினைக்கிறேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது அந்த முகத்தில் தெரிவது சந்தேகத்தின் ரேகைகள்தாம். நான் ஒன்றும் வயதானவனாக/ளாக தெரியவில்லையே கேட்டுக்கொள்ளும் வினாதான் அந்த பார்வை. கண்ணாடி மறந்து இரண்டு நாள் அலைச்சலில் இருந்துவிட்டு மீண்டும் பார்க்கும் எவருக்கும் ஏற்படும் பீதியை தவிர்க்க முடிவதில்லை. சலூன் கடைகளில் மாறாத கண்களோடு நம்மைக் கண்டு முடிவெட்டிக் கொள்ளாத நபர்களே இல்லை என்று ஒரு முறை அனுபவ கட்டுரைகளில் சுஜாதா சொல்லியிருந்தார். நம் முகத்தில் தெரியும் - நாம் நினைத்த - அழகும் அதன் வசீகரமும் இன்னும் தொடர்கிறதா என்கிற பயம்தான் அது என நினைக்கிறேன்.

என் தெருவில் இருக்கும் ஒரு நபர் காலையில் இன்-செய்த நல்ல உடைகளும் வழுக்கையை மறைக்க உயர்ந்த வகை தொப்பியும் அணிந்து சாலையில் செல்வார். நாள் மாறினாலும் இந்த இமேஜை மாற்றாமல் தினமும் அவர் தொடர்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் நாளுக்கு நாள் வருடாவருடம் அவர் முகத்திலும் நடையிலும் முதிர்ச்சியும் தள்ளாட்டமும் வெளிப்படுவதை, அவர் அறியாவிட்டாலும், அவரால் தடுக்க முடியவில்லை. அவர் செய்வது அந்த வயதிற்கு சற்று அதிகம் என்று தோன்றினாலும், இப்படிதான் இளமையிலிருந்து பயிற்றுவிக்க ப்படுகிறோம் என தோன்றுகிறது. உற்சாகமாக மனதை வைத்துக்கொள்ள நல்ல உடைகளை அணிவதும் இளமை தோற்றத்துடன் எப்போது காட்சியளிப்பது அவசியம் என்றும் வழியுறுத்துகிறோம்.


எல்லோரிடமும் ஏதோ ஒரு வகையில் இது இருக்கதான் செய்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவரின் சரியான வயதை பொதுஇடத்தில் சொல்லமாட்டார் மாறாக குறைந்த வயதை எப்போதும் சொல்லிவைப்பார். ஆனால் அவரின் பேச்சுகளின் மூலம் அவரது வயதை கணிக்க முடியும், அத்தோடு அவர் வயதைவிட எந்த அளவிற்கு முதுமையான சிந்தனையில் இருக்கிறார் என்பது தெரிந்துவிடும். அதேபோல் வயதின் காரணமாக வருகின்ற நோய்களைப் பற்றி பொதுவாக மக்கள் மறைப்பதில்லை. எனக்கு சுகர் இருக்கு, பிபீ இருக்கு என்று சாதாரணமாக மகிழ்ச்சியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். இளம்வயதில் சக்கரையா என்ற கேள்வியை மிக எளிதாக ஒரு அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுவதுபோலத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மனதில் உடலில் இருக்கும் முதுமையைவிட தோற்றத்தில் இருக்கும் முதுமை எல்லோரையும் பாதிக்கிறது. நீங்கள் வயதானவராக தெரிகிறீர்கள் என்று சொல்லிப் பாருங்கள் அவர்களின் முகம் எப்படி மாறுபடுகிறது என்பதை நேரடியாக பார்த்துவிடமுடியும் அதற்குப்பின் நம்மிடம் மீண்டும் பேசுவது சந்தேகம்தான். எல்லோரும் அப்படி அல்ல என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் அனைவருக்கும் வந்துமறையும் ஒருவகை சின்ன'வியாதி'தான் இது.

No comments: