Sunday, August 2, 2015

ஓடிப்போனவர்கள்


மின்சார ரயிலில் ஒரு நாள் பயணம் செய்தாலே எத்தனை விதமான காதலர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். விதவிதமான எல்லா வயது காதலர்கள் இருப்பதை காணமுடியும். 15 வயது முதல் 30 வரை என்று சொல்லலாம். திருமணமானவர்களை நாம் எதுவும் சொல்வதில்லை. கண்டதும் காதல், தெய்வீக காதல் போன்று எதாவது இருக்கும் காதலர்கள் இப்படி வெளியே சுற்றுவதில்லை என தோன்றுகிறது. ஆனால் வெளியே சுற்றும் இந்த காதலர்களில் ஒரு பொதுதன்மை உண்டு என்பதை நாம் கவனிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரே வயதினராக இருப்பார்கள், பொருளாதார முறையில் ஒரே இடத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள். ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஒரே தெருவில், ஒரே சேரியில், ஒரே பேட்டையில் இருப்பவர்களாக இருப்பார்கள். ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் என்பதை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக இவர்களை நாம் எதுவும் சொல்வதில்லை. இவர்களை இப்படி சுற்றுவது அவர்களின் சுதந்திரமாகவும், தங்கள் முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்ளும் தைரியத்தை பெற்றவர்களாகவும், இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். எந்த வகையிலும் நாம் இடையூறாக இருப்பதில்லை.

சில ஜோடிகளுக்கு நாம் இடையூறாக இருப்பதாக தோன்றுகிறது. படிக்காத ஏழை மனிதன் ஒரு பணக்கார காதலியுடனும், ஏழைப் பெண் பணக்கார காதலனுடனும், ஒரு வயது வந்த பள்ளி மாணவி/மாணவன் ஒரு சாதாரணமான ஒருவருடனும் இப்படி சிலவர்கள் சென்றால் நாம் கொதித்துப் போகிறோம். இதெல்லாம் எங்கே உருப்பட போகிறது என்கிறோம். இந்திய சூழல் குறித்தும், குடும்ப அமைப்பு குறித்தும் கவலைக் கொள்கிறோம். எதாவது செய்ய வேண்டும் என துடிதுடிக்கிறோம்.

எனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் இருந்த படித்த பெண் அவர்கள் கடையில் வேலைப்பார்த்த ஒரு பையனுடன் காதல் கொண்டு ஓடிப்போனாள். ஊர் ஸ்தம்பித்துபோல் ஆகிவிட்டது. சின்ன மில் வைத்திருந்த ஒருவரின் மகன் அந்த மில்லில் வேலைபார்த்த பெண்ணுக்கு திடீரென தாலி கட்டினார். இப்போதும் ஸ்தம்பித்துவிட்டது.

இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மக்கள் ஏற்கவில்லை என நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளைக் குறித்து நாளெல்லாம் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒத்த வயது, வேலை, பொருளாதார இடம், சாதி போன்றவைகள் இருக்கும்போதும் நாம் எதுவும் பேசாதது குறித்து நாம் எதுவும் ஆச்சரியப்படுவதில்லை.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட காதல் மிகப்பெரிய அளவில் மக்கள் முன்னால் பேசப்படுகிறது. உயர்சாதி ஆணுக்கு குறைந்த சாதிப் பெண் அமைந்தால் பெரியதாக அலட்டிக்கொள்ளாத சமூகம் குறைந்த சாதி ஆணுக்கு உயர்சாதி பெண் அமையும்போது சங்கடமாகத்தான் உணர்கிறார்கள். இது கொஞ்சம் படித்த, சிறு, பெரு நகரங்களில் நடப்பவைகள். ஆனால் அவ்வளவாக படிக்காத கிராம, சிறுநகரங்களில் பெரிய கலவரமாகத்தான் முடிகிறது.
 
பெருநகரங்களில் ஒத்த பொருளாதர நிலையில் இருக்கும் ஆண் பெண்கள் சாதி மாறியிருந்தாலும் அவர்கள் திருமணங்களுக்கு தடைகள் இருப்பதில்லை. ஆனால் கிராமங்களில்/நகரங்களில் வேறு சாதிகளில் (சில நேரங்களில் ஒரே சாதியிலோ) பொருளாதார நிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் பெரிய கலவரமாக, கொலைகள் நடக்கும் வரையும் செல்வதும் உண்டு. சமீபத்தில் ஓடிப்போன இரண்டு வேறுசாதிக் காதலர்களை தமிழகமே துரத்தி வாழவிடாமல் சாகடித்தது.

ஓடிப்போனவர்களை அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று வைத்தே மதிப்பிடுகிறார்கள். தொடர்ந்து வாழாமல் பிரிகிறார்களா? பொருளாதார இடத்தில் உயர்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். பொதுவாக வாழவும் விடுவதில்லை, அவர்கள்க்கு முறையாக நேரவேண்டிய சொத்தை, பங்கு பணத்தை, சபைகளின் மரியாதையை அளிக்க மறுக்கிறார்கள் அவர்களின் குடும்பத்து நபர்கள். இதையெல்லாம தாண்டி அவர்கள் சமூகத்தில் ஒரு இடத்தை அடையவேண்டியிருப்பது மிகக் கடினமான விஷயம்தான். கூடவே அந்த ஆண் பெண் இருவருக்கு நல்லபுரிதல் இல்லை என்றால் முற்றிலும் பாழ்தான். அதையும் தாண்டி வெற்றியடைந்தால் பாவம் இந்த குடும்பம் என்கிறது இந்த உலகம்.

No comments: