Wednesday, September 23, 2015

நகைச்சுவை

நகைச்சுவை எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை. நகைச்சுவையை செய்பவரும் அதை கவனிப்பவருக்கும் இடையே ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழியை புரிந்தவர்களுக்கு மட்டுமே இடையே இருக்கும் புரிதலை புரிந்துக் கொள்ளமுடியும் என நினைக்கிறேன். மேடையில் செய்யப்படும் நகைச்சுவைகளைப் பற்றி சொல்லவில்லை. ஒரு பார்வையாளர்களை வைத்துக்கொண்டு இன்ன மாதிரி நகைச்சுவைகள், இது காலத்தில் இருக்கும் நகைச்சுவைகள் என்று சொல்லபடுவதை நம்முடைய சொந்த கவலைகளை மறைக்க நாம் கொள்ளும் ஒரு உத்தி என்று தான் சொல்லவேண்டும்.
நான் சொல்லவருவது நகைச்சுவை தங்கள் தினப்படி செயல்களில் ஒன்றாக செய்பவர்களைப் பற்றியது. நகைச்சுவை உணர்வுள்ளவர்கள் அதை செய்கிறேன் என்கிற ப்ரஞ்சை அற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக அது இருக்கும். வாழ்க்கையில் அதிகம் அடிப்பட்டவர்கள், துன்பங்களை அதிகம் சந்தித்தவர்களுக்கு சின்ன நகைச்சுவைகூட பெரியதாக இருப்பதை கவனிக்கலாம். ஒவ்வொரு நிமிடத்தையும் நகைச்சுவையால் நிரப்ப விருப்புபவர்களாக இருப்பார்கள். தங்களை தாழ்த்திக் கொண்டும் நகைச்சுவையை வெளிப்படுத்துவதை ஒரு உத்தியாகதான் செய்கிறார்கள். ஆனால் நகைச்சுவையை வெளிப்படுத்துபவர்கள், ஜோக்கடிப்பவர்கள் இவர்களெல்லாம் சற்று அசடு என்னும்படியான தோற்றத்தைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சட்டென ஒரு நகைச்சுவையால அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்கள்.

பொதுவாக அப்படியான நகைச்சுவையாளர்களை கொஞ்சம் பொறுப்பற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். சில நிஜமாகவே அப்படி இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவை வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள் மிகுந்த ஞானம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் இந்த நகைச்சுவையுணர்வு அவர்களை சீரியஸ் அற்றவர்களாக காட்டுகிறது.
பொதுவாக நமக்கு நகைச்சுவை என்பதே சினிமாவின் நகைச்சுவைதான். சினிமாவில் செய்யப்படும் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் எப்போதாவது திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பவைகளாக இருக்கும். அடுத்து டிவியில் 'இதை செய்யப்போவது யாரு' என்பதுமாதிரி அதன் நகல்கள் வெளிவந்து அவைகளை மீண்டும் அசைப்போடுகிறோம். அத்தோடு பல்வேறு டிவி ஷோக்கள் சினிமாவை காப்பி அடித்தும், அவைகளை போன்று நகல் செய்வதுமாக இருக்கின்றன.
தினப்படி ஜோக் அடிப்பவர்கள், நகைச்சுவையை வெளிப்படுத்துபவர்களுக்கு வாழ்க்கைப் பற்றிய புரிதல் இல்லாமல் அதை செய்யமுடியாது. ஒரு வயதான நண்பர் ஒருவர் என் ஊரில் இருந்தார், அவரைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். கல்யாண வீடு, டீ குடிக்கும் நேரம், இரவு தூங்கச் செல்வதற்கு முன் என்று சில இடங்களில் கூடுபவர்களாக இருப்பார்கள். அந்த வயதான நபர் கல்யாண விருந்தொன்றில் பேச ஆரம்பிக்க தன் சக நண்பன் எப்படி சாப்பாடு கேட்பான், எப்படி சாம்பார் ஊற்ற சொல்லுவான் என்று சின்ன மிமிக்ரி மாதிரி செய்து காட்ட அனைவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது. நகைச்சுவை உணர்வுள்ளவர்களால் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருக்க முடியும். அந்த இடத்தை விட்டு அகன்றது இன்னும் சற்று நேரம் அவர் இருந்திருக்ககூடாதா என்று தோன்றும்.
உண்மையான நகைச்சுவை சிரிப்பை வரவழைக்க வேண்டும் என உருவாக்கப்படுவதில்லை. ஒரு இடத்தில் சிரிப்பு வருகிறது என்பதற்காக எல்லா இடத்திலும் சொல்லப்படுபவையும் அல்ல. இயல்பாக அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் கேட்பவரின் ரசிக்கும் திறனுக்கு தகுந்தபடி வெளிவந்துவிடுகின்றன.
என் பெரியப்பா ஒருவர் இருந்தார். அவர் ஒரு இடத்தில் இருந்தாலே எல்லோருக்கும் பேச்சில் ஒரு சுவாரஸ்யம் கூடிவிடும். அந்த இடத்தில் பேசாமல் இருப்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவையை புரிந்துக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். ஏற்பு இல்லாமல் அடுத்தவரின் தாழ்த்தி கிண்டல் அல்லது மட்டம் தட்டப்படுவது போன்ற நகைச்சுவைகள் அவரிடமிருந்து வராது.
இப்படி நகைச்சுவை செய்பவர்களுக்கு ஆகவேண்டிய காரியம் எதுவும் இல்லை என்றாலும் அடுத்தவரை பேச்சினால் வென்றது ஒன்றே அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயமாக கொள்ளலாம். அதைத்தவிர மற்றொன்றும் இருக்கிறது அடுத்தவர்களுக்கு தங்களால் ஆன மகிழ்ச்சியை அளிக்கிறார்கள்.

No comments: