Wednesday, September 30, 2015

மொழி என்னும் ஊடகம்

ஊருக்கு சென்றிருந்த போது இரு நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் உயர்கல்வி பயின்று அரசுதுறையில் நல்ல வேலையில் இருப்பவர்கள். ஒரு சயின்டிஸ்ட் மற்றவர் டாக்டர். பேச்சினுடே மஹாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலைப் பள்ளிகள் மொத்தம் 3 மணிநேரம் தான் இயங்கும் என்று கேட்டதும் ஆச்சரியப்பட்டார்கள். மிச்ச நேரம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்றார்கள். மிச்ச நேரம் நிறைய இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கராத்தே, புட்பால், இசை போன்ற எக்ஸ்ரா கரிகுலர் படிப்புகளுக்கு செல்கிறார்கள் என்றேன். அதுதாங்க சரி, அதிகமான நேரம் பள்ளிகூடம் இருக்க கூடாது எனவும் அவர்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் இருவரும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்தவர்கள். வேலை படிப்பு என்று தீவிரமான மனநிலை கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை தாண்டி வேறு எந்த விஷயங்களிலும் கவனத்தை சிதறடிக்காதவர்கள்.

அவர்களிடம் வெளிப்பட்ட சலிப்பு ஏன் என்று கொஞ்சம் பேச்சு நீண்டபோதுதான் தெரிந்தது. அவர்கள் செல்லும் செமினார்கள் இந்தியாவின் பல பெரிய நகரங்களில் இருக்கும். குறிப்பாக வடமாநிலங்களில். மும்பை, தில்லி, பெங்களூர் நகரங்களில் அவர்கள் பேசும்போதெல்லாம் அவர்களின் அறிவு/திறன் மிக குறைந்திருப்பதாகவே கண்டுவந்தார்கள். என்னால அவங்கள கம்பீட் (போட்டியிட‌) பண்ணமுடியல என்றார் ஒருவர்.
நண்பர்கள் ஆங்கில அறிவு மிக்கவர்கள். சிறந்த பேச்சாளர்கள் எல்லா இடத்திலும் சின்ன வயதிலிருந்தே பேசி பரிசுகளைப் பெற்றவர்கள். ஆனால் அவர்களே தங்களால் முடியவில்லை என்கிறார்கள். முக்கியமான காரணமாக நான் நினைப்பது, மொழி என்பதை அறிவு என்று நினைப்பதால் தான்.
நம‌க்கு புகட்டப்படுவது எதுவும் மொழியின் வழியாகத்தான். அதைக்கொண்டும் மேலும் அதை நம் சிந்தனையாக மாற்றிக் கொள்ள அந்த மொழி பயன்படுகிறது. அத்தோடு நம் அனுபவங்கள் நம‌க்கு உதவிகள் புரியவேண்டியிருக்கும். பின் அதை பேச்சாகவோ எழுத்தாகவோ வெளிப்படுத்த மீண்டும் மொழி அவசியமாகிறது.
வெறும் பாடங்களை மட்டும் படித்துவிட்டு வெளியே வந்துவிட்டவர்களுக்கு சூழலறிவும், புதிய சிந்தனைகளை புரிந்துக் கொள்ளும் திறனும் அதை விரிவாக்கிக் கொள்ளும் திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் வெளிப்படுவது நடைமுறையில் இல்லாத வெறும் சட்டக‌ங்கள் மட்டும்தான். புத்திசாலிதனம் என்கிற பாவனையை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. அது உள்ளூரில் ஒன்றுமறியா மனிதர்களிடம் செல்லுபடியாகிறது. வெளியே வேறு நகரங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு தேவையானவைகள் நிஜமான அந்ததுறை சார்ந்த அறிவும் கூடவே நடப்பு விஷயங்களைப் பற்றிய அவர்களின் புரிதலும்தான்.
இது எதுவும் இல்லாமல் வெறும் காகிதப் புலிகளாக இருப்பதனால் நமக்கான இடத்தை நாம் இழந்துக் கொண்டே இருக்கிறோம். அறிவு, படைப்பாற்றல் போன்றவைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாததனால் தொடர்ந்து தவறாக திசையிலேயே பயனிக்கிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளை 7 வயதில்தான் பள்ளியிலேயே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் இரண்டரை வயதில் இருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் திணித்துவிட வேண்டும் என்கிற வெறியில் செய்யப்படும் அராஜகம் அந்த குழந்தையை ஒரு சொன்னதை சொல்லும் இயத்திரமாக மட்டுமே மாற்ற முடிகிறது.
வயதிற்கு மீறி முன்பே சொல்லப்படும் விஷயங்கள் ஒருவித அச்சங்களாக அவர்கள் மனதில் த‌ங்கிவிடுகின்றன. இயல்பாக ஒன்றை புரிந்துக்கொள்ளாமல் முன்பே செலுத்தப்படுவதால், புரியாதவைகளை புரிந்துகொள்ள முயற்சிக்காமல் அச்சமாக மனதில் இருப்பவைகளை காலம் முழுவதும் எடுத்துச் செல்கிறார்கள்.
ஆங்கிலம் பேசும் குழந்தைகளை மிக சிறந்த குழந்தைகளாக பார்த்தாலும், குழந்தைகளின் மனதில் அது என்ன செய்தியாக இருக்கிறது என்பது தெரிவதில்லை. பாத்திரத்தை காலி செய்து காலி செய்து மீண்டும் ஒன்றை நிரப்புவதுபோல ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தங்களுக்கு கிடைப்பவைகளை நிரப்ப‌ பழையவைகளை காலி செய்கிறார்கள். அப்படி செய்யமுடியாதவைகள் சிறந்த குழந்தைகள் இல்லை என்று ஆகி, அவர்களை வெட்கப்பட வைக்கிறார்கள் அவர்களை சுற்றியுள்ள ஆசிரியர்கள், அப்பாக்கள், அம்மாக்கள்.
சூழலறிவு, வரலாற்றுணர்வு, காகிதப்புலிகள் என்று நாம் உருவாக்கும் ரோபோக்கள் அதற்கான மாற்றுவழிகளைப் பற்றி தெரியாமல், கடைசியாக கொஞ்சம் சிந்திப்பது இந்த‌ முறை சரியில்லைங்க, வெளிநாட்டுல பண்றாங்க பாருங்க அதுதான் சரி என்பது மட்டும்தான்.

No comments: