Saturday, October 3, 2015

புலி குழந்தைகள் விட்டாலாச்சார்யா


சிம்பு தேவன் படம் எப்போது புதிய சிந்தனைகளோடு ஒரே மாதிரியான கதைஅம்சங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். பெரிய ஹீரோவான விஜயுடன் அவர் சேர்ந்து ஒரு படம் செய்வதும் லில்லிபுட் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டும் இருக்கிற புலி படத்தை பற்றி கேள்விப்பட்டது பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால் மகனை அழைத்துக் கொண்டு புலி படத்திற்கு செல்ல நேர்ந்து விட்டது. ஆனால் குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்கும் என்று சொல்லமுடியாத அளவிற்கு ஏதோ ஒரு நாடகம் போல செட்டை அமைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். கிராபிக்ஸ் நிறைய பயன்படுத்தப் பட்டிருந்தாலும் பாகுபலி மாதிரியான பரந்த நிலக்காட்சிகள் ஓரிரண்டை தவிர அதிகம் இல்லை. ஏன் வரலாற்றுப் படம் என்கிற ப்ரஞ்சைகூட இந்த படம் ஏற்ப்படுத்த மாட்டேன் என்கிறது.

தமிழ் சினிமாவிற்கு இவ்வளவுதான் கிரியேட்டிவிட்டியா? மிக வழக்கமான கதைகளை கொண்டுதான் படங்கள் எடுக்க முடியுமா என்கிற கேள்வியை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் கதை எங்கே எந்த காலத்தில் நடக்கிறது என்கிற விவரங்களுடன் ஆரம்பித்தாலும் இன்று உள்ளூரில் நடப்பது மாதிரி தமிழில் பேசுகிறார்கள். போததற்கு விஜய் இன்றைய கால கட்ட கட்டி அடித்திருக்கிறார். ஸ்ருதி இன்றைய பெண்களின் முடி அலங்காரத்தில் இருக்கிறார். சரி தமிழை இப்படி உச்சரிக்கிறார்கள் என்றால், திராவிட கட்சிகள் பேசிய அடுக்கு மொழியில் பஞ்ச் டயலாக் வேறு பேசுகிறார் விஜய்.


வரலாற்று கதைகளுக்கு வேண்டிய புதுமைகள் எதுவும் இல்லாமல் முதல் பகுதி முழுவதும் அவர் காதல் செய்வதை காட்டுகிறார்கள். இந்த கதைக்கு சாதாரண விட்டலாச்சார்யா படம் போல முந்தைய ஒரு காலகட்டதில் நடக்கிறது என்பதுமாதிரி எடுத்திருக்கலாம். கொஞ்சம் யோசித்தால் விட்டாலாச்சார்ய படம் போன்றே அதில் இருக்கும் அம்சங்கள்தான் இதில் இருக்கின்றன. அதே மாதிரியான இரண்டு கவர்ச்சி நாயகிகள், அதே மாதிரியான வில்லி, வில்லியை ஆட்டி வைக்கும் வில்லன், இதில் கொஞ்சம் தொழிற்நுட்பம் கூடியிருப்பதை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக சொல்ல முடியவில்லை. அந்த படங்களில் ஹீரோ தீவிரமாக இருப்பார் ஒரு கோமாளி அவர் நண்பராக இருப்பார், இதில் விஜய் கோமாளியாக இருக்கிறார். அவர் பேசுவதும் நடந்துக் கொள்வதும் சாதாரண திரைப்படங்களில் செய்யும் அதே சேட்டைகள் தான்.

இந்த படத்திற்காக புதிதாக எதையும் செய்யவில்லை, தன்னை உருமாற்றிக் கொண்டும் அவற்றிற்கு தேவையான புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு எதையும் செய்யவில்லை. விஜய் அஜித் இருவரும் முதிராத தங்களின் மேனரிசங்களால் நடித்து வெளிவரும் அதேவகை படமாக இதுவும் இருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இருவரும் இப்படி முதிராப் படங்களில் நடிப்பதும் அது கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதும் பார்க்க முந்தைய ரஜினி படங்களை போன்றே இருக்கிறது. முன்பு ரஜினி படங்கள் இப்படிதான் பெரிய வெற்றிப் படங்களாக ஓடும். இன்று அதில் ஒரு காட்சியைக் கூட பார்க்க முடிவதில்லை என்பதை இந்த இருவர்கள் அறியாமல் இருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என்கிற ஆவல் நடிகர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் பார்வையாளர்களுக்கும் கொஞ்சம் இருக்க வேண்டும்.

No comments: