Tuesday, October 13, 2015

உறக்கம் எப்படி இருக்க வேண்டும்

எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை இருப்பதாக எப்போது சொல்லிக் கொண்டிருப்பார். நான் தூங்கும்போது என் அறைக்கு வந்து சில டிப்ஸ்களை கேட்டுச் செல்வார். நான் நன்றாக தூங்குவதாகவும் எந்த பிரச்சனையும் இன்றி ஆழ்ந்த உறக்கம் கொள்வதாகவும் பொறாமைகூட‌ படுவார். அப்போது ஒரு சின்ன வேலையில் இருந்தேன். என் அறைக்கு பக்கத்தில் வேலைத் தேடிக்கொண்டிருந்த அவர் இருக்கும் அறை இருந்தது. மாலை ஆறு மணிக்கு டீ அருந்துவதை நிறுத்த சொன்னேன். இன்னிக்கு பரவாயில்லை கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அடுத்த நாள் வரும்போது கால்களை நனைத்துவிட்டு தூங்க சொன்னேன். இன்னிக்கும் கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். சாப்பாட்டை முன்பே முடிக்க சொன்னேன். அதையும் செய்து கொஞ்சம் தூக்கம் வந்தது என்பார். அவர் விரும்புவது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை. ஒரு நாள் வந்தபோது உங்கள் தினப்படி வேலைகளை கூறுங்கள் என்றேன். காலையில் எழுந்தது டீ, பின் பத்திரிக்கை படித்தல், பின் சிற்றூண்டி, படித்த பத்திரிக்கையிலிருந்து அழைத்திருந்த வேலைக்கு செல்லுதல் பின் மதியம் உணவு பின் அறைவந்து ஒரு தூக்கம் போடுவது என்றார். அதற்குபின்? அதற்கு பின் எங்கே செல்வது அப்போதே மாலை வந்துவிடும் வெளியே செல்லமுடியாது என்றார். விளையாட்டாக சொன்னாரா சீரியசாக சொன்னாரா தெரியவில்லை ஆனால் மதியம் நான்கு மணிநேரம் தூங்கும் ஒருவர் எப்படி இரவில் தூக்கமுடியும் என யோசிக்கவில்லை.

சரியான தூக்கம் இல்லாது போனால் நாம் அதை முக்கியமான பிரச்சனையாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். அடுத்த நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் தூங்கிவிடுவோம் அல்லது கீழே விழுந்துவிடுவோம் அல்லது வேலையில் கவனம் செலுத்த முடியாது என்பது போன்றவைகளை சொல்லலாம். நாம் வேலை நாட்களில் அதிகம் தூங்குவது விடுமுறை நாட்களில் விரைவில் எழுந்து கொள்வதையும் இதனுடன் சேர்ந்து புரிந்துக் கொள்ள முடியும். குப்பறபடுத்து கால்களை மடக்கிக் கொண்டு தலையனையை அணைத்தபடி தூங்கும் ஒரு நண்பர் உண்டு. குப்புறபடுத்து பின்பக்கத்தை தூக்கியபடி 10 வயது வரை தூங்கிய ஒரு பெண்ணும் உண்டு. ஒரு பக்கமாக படுத்து கால்களை மடக்கி கைகளை நடுவில் வைத்து தூங்குபவர்களும் உண்டு. ஆனால் உறக்கம் இப்படிதான் இருக்கவேண்டும் என சொல்லமுடியாது.
ஆழ்ந்த உறக்கம் எல்லா நாட்களிலும் சாத்தியம் இல்லை என்பதுதான் உணமை. ஒரு நபருக்கு உணவு, வேலை (உழைப்பு), உறக்கம், நம் எண்ணங்கள் (இதை கவலை அல்ல‌து பிரச்சனை என்று விளக்கிகொள்ளலாம்) என்ற நான்கும் முக்கியமானவைகள். இந்த நான்கும் ஒரு குறிப்பிட்ட அளவில் இல்லாது போனால் ஒன்று மற்றவைகளை பாதிக்க ஆரம்பிக்கும். நான்கு குண்டுகளை கொண்ட பெண்டுலம் அசைவதுபோன்றதுதான் இது. ஒன்று மற்றதை தாக்கும் வேகத்தில் அது மற்றதை இடித்து ஊசலாடும். உழைப்பு அதிகம் இருந்தால் உறக்கம் அதிகமாகி உணவும், எண்ணங்களும் குறைந்திருக்கும். உறக்கம் இல்லாது போனால் வேலை குறைந்து உணவும் குறையும். அதிக எண்ண‌ங்கள், கவலைகள் அதிகரிக்கும்போது நம் உறக்கமும் குறைந்து உணவும் குறைந்துவிடும்.
ஆனால் மற்ற மூன்றைவிட உறக்கம் வரவில்லை என்றால் அதிகம் கவலை கொண்டுவிடுவோம். பொதுவாக உறக்கம் எப்படி இருக்கவேண்டும் என்கிற கட்டுரைகளும் செய்திகளும் நிறைய பார்க்கலாம். இடது பக்கமாக படுக்கவேண்டும், அது செரிமானத்திற்கு சரியாக இருக்கும் என்று ஒரு செய்தி வந்தால், வலது பக்கமாக படுக்க வேண்டும் அது இதயத்தை அழுத்தாது என்று ஒரு செய்தியும் வரும். சிலர் படுத்தமேனியே படுத்து அப்படியே எழுவேன் என்பார்கள். ஆனால் அது உடலுக்கு உகந்தது அல்ல. ரோகி மட்டுமே அப்படி செய்யமுடியும் ஆரோக்கியமான ஒரு மனிதன் ஒவ்வொரு கால இடைவெளியில் பல்வேறு நிலைகளில் புரண்டு படுத்துதான் காலையில் எழுவார்.
உறக்கம் என்பதே மேல்மனதை ரத்து செய்வதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் நம் ஆழ்மனம் மட்டுமே விழித்திருக்கும். அந்த வேளையில் நாம் என்ன நம் மனதில் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு காட்டுபவை. ஆகவே உறக்கத்தை விட்டுவிட்டு மற்ற மூன்றையும் (உழைப்பு, எண்ணங்கள், உண‌வு) நாம் பெற்றுவிடமுடியாது. ஆனால் உறக்கத்தை கட்டுபாட்டில் வைக்காமல் மற்ற மூற்றின் சிறப்பானவைகளை பெற்றுவிடமுடியாது.
நல்ல உறக்கம் இல்லை என்று சொல்பவர்கள் மற்ற மூன்றையும் முதலில் கவனித்து ஒரு சமநிலைக்கு அவைகளை கொண்டுவரவேண்டும். அதிக பிரச்சனைகள், கவலைகளை கொண்டிருப்பவர் தனக்கு உறக்கம் வரவில்லை என புலம்புவது சரியாக இருக்கமுடியாது. முதலில் அவரின் பிரச்சனைகளை தீர்த்துவிட்டாலே உறக்கமும் கூடவே உணவும், உழைப்பும் ஒருநிலைப்பட்டுவிடும்.

மரணப்படுக்கையில் கிடந்த மனைவியின் பக்கத்திலிலேயே அவர் கணவர் உறங்காமல் மூன்று இருந்து பணிவிடைகளை செய்தார். மூன்றாம் நாள் இறந்ததும் மனைவியை விட்டுவிட்டு உறங்க சென்றுவிட்டார் கணவர். ஈமசடங்கிற்கு தேவையான வேலைகளை மற்றவர்களே பார்த்தார்கள். கடைசியில் எறியூட்டும்போது விழித்துக்கொண்டார். நம் உடலுக்கு உறக்கம் கண்டிப்பாக தேவை. சில உறக்க வியாதிகளை தவிர மற்றவர்களுக்கு 6 முதல் 8 மணிவரை உறங்கவேண்டும். அதே வேளையில் எல்லா நாளும் உறங்கமுடியாது அதை நாம் கட்டுபாட்டில் வைக்க கொஞ்சம் பிரயதனப்பட்டுதான் ஆகவேண்டும்.

No comments: