Monday, November 23, 2015

வார்த்தைகள், சொற்கள், தமிழ்



தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்ச‌மில்லை. மிகப் பெரிய சொற்களஞ்சியம் தமிழுக்கு உண்டு. எந்த ஒரு வார்த்தைக்கும் அதன் வேர்சொல் வரை சென்று ஆராய்ந்து பார்க்கமுடியும். தமிழுக்கு உரிய பல பெருமைகளில் ஒன்று ஒரு வார்த்தையின் வேர் தமிழிலேயே இருப்பதுதான். மற்ற இந்திய‌மொழிகளில் அது சமஸ்கிரதமாகவோ அல்லது தமிழாகவோ வந்து முடியும். ஆனால் ஒரு சினிமா தலைப்பு அல்லது புத்தகத்தின் தலைப்பு அல்லது ஒரு சினிமா பாடலுக்குள் இருக்கும் வார்த்தைகள் அல்லது தமிழில் தொடங்கப்படும் ஒரு நிறுவனத்தின் தலைப்புகள் அல்லது ஏன் நாம் தினம் பேசும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட சொல்லகராதிக்குள் அடங்கிவிடும். ஒரு புத்தகத்தலைப்பு மட்டுமல்ல அதன் உள்ளடக்கத்தில் உள்ள சொற்கள் நாம் எளிதாக வகைப்படுத்திவிட முடியும்.
வெகுஜன எழுத்துக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தைகள் தான் உண்டு. அதைதாண்டி நாம் எழுதிவிடமுடியாது. அதெல்லாம் போட்டா அவர்களுக்கு புரியாதுங்க என்று சொல்லப்படும். ஒரு சினிமா பாடலுக்கும் சரி ஒரு நவீன கவிதைக்கும் சரி இன்னென்ன வார்த்தைகள்தான் வேண்டும் என்கிற நிலை தொடர்வதாகத்தான் நினைக்கிறேன். சினிமா பாடலில் கையாளப்படும் வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதே சூழ்நிலைக்கு வேறு ஒரு பாடலாக எழுதிவிடலாம். (அப்படிதான் எழுதப்படுகின்றன என சொல்லப்பட்டிருகிறது)
சினிமா பாடலுக்குள் இருக்கும் வார்த்தைகள் நாம் பழகிய வகையில் மிக எளிதாக சொன்னதையே திருப்ப சொல்வதாக‌ இருக்கும். அதே வேளையில் அது அந்த காட்சியையும் விவரிக்க வேண்டியதாக இருக்கும். மிக நல்ல மெட்டுகளுக்கு எளிதாக அதேவேளையில் நல்ல வார்த்தைகளைக் கொண்டும் பேசுவதுபோல் சொல்லப்பட்டிருப்பவைகள் கேட்க எப்போதும் புதியவனாக இருக்கும். ஆனால் காதல், சோகம் என்று இருநிலையை விவரிக்க ஒரே டெம்லெட் வரிகள் பாடல்களில் கையாளப்படுகின்றன. கண்ணதாசனைத் தவிர மற்ற எல்லோரும் ஒரே டெம்ளேட்டைதான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு சிறுகதைக்கு ஒரு நாவலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே இருப்பதை காணலாம். இதை நாம் தினம் பேசும் பேச்சிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். ஒரு அலுவலகத்தில் பேசப்படும் அலுவலக குறிப்புகள் எப்படி ஒரே மாதிரி எந்த மாற்றங்கள் இல்லாமல் சொல்லப்படுகிறதோ அதே போலதான் நாம் நம் அன்றாட பேச்சுகளின் வார்த்தைகளும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. நாம் படிக்கும் வார்த்தைகள் நம் மனதில் இருப்பதுவும் உண்டு ஆனால் பேசும்பொது அது வெளிப்படுவது நம் சூழலுக்கு தேவையான அளவுமட்டும்தான்.
ஒருமுறை விழுப்புரத்தில் ஒரு குழாயடி சண்டையை நின்று கவனித்துக் கொண்டிருந்தோம். அடித்துக்கொள்ளும் இரு பெண்கள் அவர்களின் சண்டையின் நடுவில் 'பின்னென்னா பின்ன' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்ற வார்த்தைகளை மற்ற ஏச்சுகளை கேட்டுக்கொண்டிருந்தாலும் அந்த கவனிக்கபடாமலேயே இருந்ததாக தோன்றியது. 'பிற‌கு என்ன பிறகு' என்று அதை தூயதமிழில் சொல்லலாம். பின்னென்னா பின்ன என்று வேகமாக சொல்லும் போது ஒரு அழகு அதில் வந்துவிடுகிறது. ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் இருவருமே அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த வார்த்தை இல்லை என்றால் அங்கு சண்டையே இருக்காது அல்லது சண்டைக்கான காரணமே இருக்காது என்பதுபோல தோன்றியது. சண்டைக்கான வார்தை கிடைக்காத போது இந்த வார்த்தை அங்கு வந்து சொல்லவந்த வார்த்தை அல்லது மறந்துவிட்ட வார்த்தையை நிரப்புவதுபோல் இருந்தது.
நமக்கு எவ்வளவுதான் வார்த்தைகள் இருந்தாலும் தேவையானவைகள் மிகக் குறைவுதான். தினப்படி பேச்சுகளில் பேசப்படுபவைகள் அதனினும் குறைவானவைகளே நாம் பயன்படுத்துகிறோம். தினம் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சற்று அதிகமான எழுத்துக்கள் பயன்படலாம். தினம் படிக்கும் ஒரு பல்துறை வாசகருக்கு இன்னும் சற்று அதிகமான சொற்கள் தேவைப்படலாம், ஆனால் இரண்டு வெவ்வெறு துறை சார்த்தவர்கள் சந்திக்கும்போது அவர்களுக்கு இடையே இருக்கும் வார்த்தை பாலங்கள் நாம் கடக்க முடியாதவைகள். ஆங்கிலத்தில் முன்னூறு வார்த்தைகள மட்டுமே தெரிந்து வைத்துக்குகொண்டு பீலாவிடும் இந்தியர்களை நாம் பெருமையாக நினைப்பதுபோல் நாம் நம் துறை வல்லுநர்களுக்கு தெரிந்திருப்பவைகள் மிகக் கொஞ்சம் தான். அதுவும் தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் இருக்கும்.
இரண்டு ரெயில்வே துறை சேர்ந்த ஆட்கள் நான் பயணித்த வண்டியில் பார்க்க முடிந்தது. அவர்கள் பேசும் பேச்சுகளில் இருந்த வார்த்தைகள்/சொற்கள் மிக அன்னியமாக இருந்தன. தனியார் துறையில் இருக்கும் என்னைவிட ஒரு விவசாயி அல்லது ஒரு மளிகை கடைக்காரக்கும் மிகவும் அன்னியமாக இருக்கும்.
நம்மிடையே உள்ள சொற்களைக் கொண்டு ஒரு சின்ன வட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் வாழ்வது ஒரு மீன் தன் தொட்டியை தானே வடிவமைத்துக் கொள்வதுபோலதான். இந்த சின்ன தொட்டியை வடிவமைத்துக் கொண்டு நாம் உலகத்தை அளக்கிறோம் வெறும் வார்த்தைகளால்.

No comments: