Monday, December 28, 2015

பசங்க 2




கேளிக்கை திரைப்படங்களுக்கு மத்தியில் சில யதார்த்தப் படங்களும் வெளிவரவேண்டிய அவசியம் தமிழ் சினிமாவிற்கு இருக்கிறது. ஆனால் மிக அபூர்வமாதத்தான் நல்ல படங்கள் அதுவும் பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்று வெளிவருகிறது. சூர்யா சற்று மெனக்கெட்டு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். மற்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற படங்களில் கவனம் கொள்ளத‌போது இதை செய்ததற்காகவே பாராட்டலாம்.
குழந்தைகள் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன, ஆங்கிலம் அதும் கார்ட்டூன் படங்களாக வருகின்றன. தொலைக்காட்சியை தாண்டி சில கார்ட்டூன் படங்கள் மக்களை கவர்ந்துக் கொண்டும் இருக்கின்றன. பசங்க 2 அதுமாதிரியான ஒரு குழந்தைகள் படம். ஆனால் குழந்தைகளை வைத்திருக்கும் பெரியவர்களுக்கான படம் என்று சொல்லலாம்.

குழந்தைகளில் விளையாட்டு, படிப்பு, கதை கேட்டல் போன்றவைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டன. முன்பு ஒரு குழந்தை எதை இப்போது செய்ய வேண்டும் என்கிற‌ சுதந்திரமாவது இருந்தது. இப்போது மற்ற சிறுவர்களுடன் விளையாட போகிறேன், பாட்டி தாத்தாவிடம் கதை கேட்கபோகிறேன், அல்லது தூங்கப்போகிறேன் என்கிற மாதிரியான செயல்களை செய்ய அவர்கள் முடிவெடுக்க முடிந்தது.
இன்று நாலிலிருந்து ஐந்துவரை க‌ராத்தே, ஐந்திலிருந்து ஆறுவரை செஸ் ஏழிலிருந்து எட்டு வரை வீட்டுபாடம், எட்டிலிருந்து ஒன்பதுக்குள் சாப்பாடு என்று ஒரு கால அட்டவணை உருவாக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே இருக்கும். ஒருநாள் கராத்தே என்றால் அடுத்த நாள் ஸ்கேட்டிங். இன்னும் கொஞ்ச நாளில் குழந்தை என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் அவர்கள்தான் சிந்திப்பார்கள் என்று தெரிகிறது. பசங்க 2 படம் பெரியவர்களை வேறுவகையில் சிந்திக்க அழைக்கிறது. குழந்தைகளின் குறும்புதனத்திற்கு அவர்களில் இயல்பில் இருக்கும் பண்பு, அதை தடுப்பதால் நமக்கு வேறு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல வரும் திரைப்படம். சற்று நாடகத்தனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனக்கு அப்படி தெரியவில்லை.
கவின், நயனா என்ற இரு குழந்தைகள் அதீத குறும்பு தனத்துடன் இருக்கிறார்கள். எந்த பள்ளியிலும் ஒரு வருடத்திற்கு மேல் இருப்பதில்லை. அவர்களின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக துயரத்திற்கு ஆளாகும் இந்த பெற்றோர்கள் ஒரு அபார்ட்மெண்டிற்கு வருகிறார்கள். அங்கு இருக்கும் மற்ற குடும்பத்தின் அழுத்தத்தால் ஹாஸ்டலுக்கு அனுப்ப படுகிறார்கள். கொஞ்ச நாளில் இருவருக்கும் மனது மாறி குடும்பத்துடன் சேர்கிறார்கள். ஒரு குழந்தை மருத்துவரின் வழிகாட்டுதலால் குழந்தைகளை புரிந்துக் கொள்கிறார்கள் பெற்றொர்கள்.
ஐநூறு ஸ்கர்ஃபீடில் இருக்கும் குழந்தைகள் எந்த விளையாட்டு தனங்கள் இல்லாமல் பெரியவர்களைப்போல் நடந்துக் கொள்ளவேண்டும் என நினைப்பது அநாகரிகதான். அதை சரியான விதத்தில் புரிய வைத்திருக்கிறார்கள் இந்த படத்தின் மூலம் என்று நினைக்கிறேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ப்ளாட்களில் வளர்க்கப்படும் சில நாய்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நான் பிறவிகுணங்களை எல்லாம் மறந்து வாழ்கிறது. அதே போல மனிதர்களும் தங்கள் குணங்களை எல்லாம் இழந்து ஒரு விலங்கைபோல வாழவேண்டும் என நினைக்கிறார்கள்.
எதுவானாலும் குழந்தைகளை குழந்தையாக பாருங்கள் என்பதுதான் பசங்க 2. இயக்குனர் பாண்டிராஜையும் சூர்யாவையும் இப்படத்தின் முயற்சிக்காக தாராளமாக‌ பாராட்டலாம்.

No comments: