Thursday, December 10, 2015

வெள்ளை யானை - ஜெயமோகன்



வரலாற்று நாவல்கள் நூல்களை படிக்கையில் அபரிதமான உற்சாகம் வந்துவிடுகிறது. பழமையின் பெருமையை கேட்பதிலும் நேற்றை இன்றோடு இணைத்து மகிழ்ச்சி கொள்வதிலும் கரைந்துவிடுகிறது. ஆனால் வெள்ளையானை அப்படி பட்டதல்ல அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் முதன்முதலாக ஒரு வரலாற்று நாவலுக்கு இருக்கும் அபரிதமான வேகமும் உற்சாகமும் இல்லாமல் ஒரு சமூக நாவலைப்போல் நேரடியான காட்சியமைப்பில் சொல்லப்படுவதுதான் இதில் நடந்திருக்கிறது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் நாவலின் இடம் தான் இதிலும். ஆனால் வெள்ளையானை  நாவலின் அதீத விவரனைகளும், தகவல்களும் நம்மை முழுமையாக நம்பச் செய்கிறது. ரத்தம் ஒரே நிறம் நாவல் ஒரு கற்பனை கதாபாத்திரம் இங்கிருந்து சிப்பாய் கலவரம் நடக்கும் வடநாட்டிற்கு செல்வதாக வரும், வெள்ளையானை ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் பார்வையில் அவர் அடைந்ததாக சொல்லும் நீதியுணர்ச்சியின் மீது நின்று மொத்த நாவலும் நகர்த்துகிறது. ப‌ல பாத்திரங்கள் கற்பனையாக இருந்தாலும் வெள்ளையானை நிஜமாக நடந்துமுடிந்த ஒரு நிகழ்வை டாக்குமெண்டரி படம் காண்பதுபோல மனதில் விரிகிறது.

ஒரு வரலாற்று நாவலை எழுதும் ஒரு ஆசிரியனுக்கு இருக்கும் சங்கடம் வாசகனுக்கு இருக்காது என நினைக்கிறேன்.. நிஜமானதில் எதை எழுதுவது எதை விடுவது என்கிற குழப்பம் ஆசிரியனுக்கு இருந்தே தீரும். ஏன் சிலவற்றை எழுதவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது. ஜெயமோகன் இந்த நாவலுக்காக பல ஆண்டுகள் காத்திருந்ததாக சொல்லவதை வைத்து இதை புரிந்துக் கொள்ளலாம்.
ஏய்டன் கட‌ற்கரையில் காலையில் குதிரையின் மேல் ஏறி வருகையில் இரு மனிதர்களை ஒரு கங்கானி சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறான். அதை காணும் அவன் துணுக்குற்று ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறான். அவர்கள் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார். இதிலிருந்தே கதை முன்னும் பின்னுமாக நகர்கிறது. ஒரு ஐரிஸ்காரனாக ஆங்கில ஆட்சியின் கீழ் ஆங்கிலேயர்களால் கேவலமாக பார்க்கபடும் ஏய்டன் இந்தியாவில் நடக்கும் சாதிக் கொடுமைகளை எதிர்க்க நினைக்கிறார். அது அவருக்கு தெரியாமல் நிகழ்கிறது. அல்லது தன் இயல்புக்கு மாறானதாக நினைத்து அதில் மற்ற வெள்ளை அதிகாரிகள் இறங்காத போது இறங்குகிறார். கடைசியில் அவர் அடைவது தோல்விதான் என்றாலும் அவருடைய நீதியுணர்ச்சிக்கு பதிலளிக்க அவர் செய்யும் ஒவ்வொன்றும் நம் சமூகம் எவ்வளவு சிக்கலாக இருக்கிறது என புரிந்துவிடுகிறது..
காத்தவராயன் முக்கியமான கதாப்பாத்திரம். அவர் வைணவத்தை பின்பற்றும் தலித் என்பது ஆச்சரியம். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் நம் சமூக மாற்றத்தை தெரிந்துக் கொள்ள அல்லது விரிவாக புரிந்துக்கொள்ள மற்ற நூல்களை வாசிக்க வேண்டும். இதில் பஞ்சம் பற்றிய விவரணைகள் தொடர்ந்து வருகின்றன. 1875 சமயத்தில் வந்த பஞ்சம் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் நாம் அறிந்தது மிக சொற்பமே. நேர கட்டுபாடு, ஊழலற்ற ஆட்சி என்று அனைத்திற்கும் ஆங்கில ஆட்சி சிறந்தது என்று சொல்லும் ஒரு சாராரை நான் என் சின்ன வயதிலிருந்து கண்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் அப்படி ஒரு கருத்தை தம் வாழ்நாளில் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் உண்மையில் ஆங்கில அரசின் முக்கிய நோக்கமே இங்கு சமூக மாற்றத்தை அல்லது நல்வாழ்வை அளிக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்ததில்லை என்பதை புரிந்துக் கொள்ள பல்வேறு புத்தகங்களின் வாயிலாக நாம் விவாதித்துக் கொண்டாலும் இந்திய மக்களில் ஒரு சாரார் ஆங்கிலேயர்களின் மீதான நம்பிக்கையை விட்டுவிட தயாராக இருந்ததில்லை.
ஆங்கில அதிகாரிகளின் முதல் ஆணையே இந்திய மக்களை புரிந்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அவர்களுக்கு தேவையானதை மட்டும் கொடுங்கள் என்பதுதான். ஆங்கிலேயர்களுக்கு தேவையானவைகள் இங்கிருக்கும் செல்வங்களும் உழைப்புகளும்தான். அதற்காக அமைக்கப்பட்ட ரயில்வேகள், பாலங்களை நாம் பெரிதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஏய்டன் சந்திக்கும் மனிதர்களால் தன் கையாளாகததனம் வெளிப்படுவதையே ஒவ்வொரு சமயமும் உணர்ந்து வருகிறார். அவர் பார்வையில் நாவல் விரிந்து புத்திசாலிதனமான ஒன்று.
வரலாற்றை வெவ்வேறு பார்வைகளில் பார்க்க வேண்டும். அதேவேளையில் வரலாற்றை மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் எழுதமுடியும் என்பது அதன் சிறப்பு.

No comments: