Thursday, December 24, 2015

சிங்க குறியீடு



சிங்கம் ஒரு பெரிய குறியீடு நமக்கு. சிங்க நடை, சிங்க பார்வை, சிங்க வேட்டை என்று சிங்கம் சேர்ந்த அனைத்தும் நம்முடைய செயல்களின் வெற்றியின் சின்னங்கள். சிங்கத்தை நேரில் நாம் பார்த்திருக்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை. அதன் திறன்களை நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெற்றிகளை, பெருமிதங்களை, நம்பிக்கைகளை குறிக்க அந்த சிங்கம் தேவையாக இருக்கிறது. சிங்கம் சராசரியாக 180 கிலோ எடை உடையது (அதிகபட்சம் 375), மற்ற பூனைவகைகளில் சிங்கம்தான் அதிக எடை கொண்டது. சிங்கம் மற்ற இரு விலங்குளான புலி, சிறுத்தையைவிட அதிக ஒலியுடன் கர்ஜிக்க கூடியது. அதன் கர்ஜனைதான் அதன் அழகு. சில நேரங்களில் அது குகையை விட்டு வெளியே வந்து கர்ஜித்தாலே ஒளிந்திருக்கும் சில விலங்குகள் பயத்தில் அதன் முன்னால் ஓடி வந்து தெரியாமல் அதனிடம் மாட்டி இரையாகிவிடுமாம். பிடரி அதன் மற்றொரு அழகு. அதற்கு கம்பீரம் அளிப்பதே அந்த பிடரி மயிர்தான்.

இவ்வளவு இருந்தும் அதனால் சரியாக வேட்டையாட முடியாது. அதன் பிடரி முடி தூரத்தில் இருக்கும் மற்ற விலங்குகளுக்கு காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே அதன் பார்வையிலிருந்து எளிதாக தப்பித்துவிடும். மற்ற புலி சிறுத்தைகளைப்போல ஓடி அல்லது ஒளிந்து பிடிக்க தெரியாது. பெண் சிங்கள்தான் இரையை வேட்டையாடி கொடுக்கும் அது தின்றுவிட்டு மீண்டும் படுத்து தூங்கிவிடும். சிங்கம் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக குடும்பமாகத்தான் வாழ்கிறது. தனித்துவாழும் விலங்குகள் தங்களுக்கென்ற தனித்தன்மைகளைக் கொண்டும் மற்ற எந்த விலங்குகளுக்கும் அடிபணியாமல் வாழும். புலி, சிறுத்தை, கரடி, ஒருவகை கீரி போன்ற காட்டுவிலங்குகள் தனித்து வாழ்பவைகள். அவைகளை போலவே சிங்கமும் தனித்தன்மையுடன் தனித்து வாழும் திறமை பெற்றதில்லை.
இவ்வளவு குறைகளை கொண்டுள்ள சிங்கத்தை நாம் பலவகையிலும் கொண்டாடுகிறோம். ரஜினி சிங்கம் சிங்கிளாக வரும் என்றார். ஓங்கி அடிச்சா ஒன்றடன் வெயிட் என்கிறார் சூர்யா இரண்டுமே பொய்யானவைகள்.
அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ஊர் முக்கிய புள்ளிகள், மாணவர்கள் என்று தங்கள் திறமைகளை, தீரத்தை மற்றவர்களுக்கு காட்ட ப்ளக்ஸ் வைத்து அதில் சிங்கத்தின் கூடவே நடந்து வருவதுபோன்று வைப்பது வழக்கத்தில் இருக்கிறது. இதனால் அவர் திறமையை/தீரத்தை நாம் ஏற்றுக்கொண்டு விடுவோமா என்பது அவர்களுக்கு முக்கியமாக படுகிறதா தெரியவில்லை. தங்களுக்கு அதில் ஒரு தன்னம்பிக்கை அளிப்பதாக அவர்கள் நினைக்கலாம். தன் முனைப்புடன் செயல்படுவதை அவர்களே தங்களுக்கு தங்களை சேர்தவர்களுக்கு காட்டி கொள்ளலாம். எதுவானாலும் சிங்கத்தை தவிர மற்ற விலங்குகளை நாம் அப்படி ப்ளக்ஸ்/பத்திரிக்கை/போட்டோ போன்றவைகளில் வைப்பதில்லை. புலி, சிறுத்தை, யானை போன்ற எத்தனையோ விலங்குகள் இருக்க சிங்கத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பது வேடிக்கைதான். மற்ற விலங்குகளை வைத்தால் அதைவிட வேடிக்கையாக இருக்கும் என தோன்றுகிறது.
ரஜினி பேசிய சிங்க பஞ்ச் வார்த்தைகளை கிண்டல் அடித்த சத்யராஜ், சிங்கத்தை வைத்து உழமுடியுமா? பால் கரக்கமுடியுமா? அப்படி எதற்கும் உதவாத சிங்கத்தை நாம் பெருமை பேசுவது எப்படி ஞாயம் என்றார். அவர் சொன்னது ஒருவகையில் உண்மைதான் என்றாலும் அதற்காக அதனை நாம் பயன்படும் மாடு, எருமை, பன்றி போன்றவைகளை வைக்கமுடியாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அடிமைபடுத்த முடியாத விலங்கை அப்படி ஒருவர் குறியீடாக சொல்லிக் கொள்ளலாம் என்றால் சிங்கத்தை சொல்ல முடியாது. அதை சர்க்கஸில் அடிமையாக வைத்திருக்க முடிகிறது.
எதுவானாலும் சிங்கம் ஒரு குறியீடாக நமக்கு தேவையாக இருக்கிறது. ஒருவர் தோல்வியடைந்தால் கூட சிங்கம் போல் எழுந்துவருவார் என்போம். இந்திய சின்னமாக‌ நான்கு சிங்கங்கள்தான் நமக்கு இருக்கிறது. எது உண்மையாக இருந்தாலும் கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லோரையும் சிங்கம்போல வாழ்க என வாழ்த்திடுவோம்.

No comments: