Friday, December 4, 2015

பேரிடர் உண‌ர்த்துவது



ஆபத்தில் நண்பர்களை புரிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். இந்த சென்னை வெள்ள பேரிடர் நம்முடைய நண்பர்கள் யார் யார் என்பதை உணர்த்திவிட்டது. ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலைதான் சற்று அதிகம்.
சென்னை மாதிரியான நகரம் இப்படி வெள்ளத்தில் மாட்டும் என நாம் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் நல்ல மழைகூட இங்கு பெய்வதில்லை. எல்லா காலங்களிலும் வெய்யில் தான். ஆனால் காலம் எப்போது போலவே இருப்பதில்லை. காலம் மாறும்போது நாமும் மாறவேண்டியிருக்கிறது.
இந்த மாதிரியான பேரிடர்களில் பணம் நமக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை. தினப்படி உணவுகள், உறங்க இடம்தான் வேண்டியதாக இருக்கிறது. உண்ண உறங்க இடம் இல்லாமல் இருக்கும் சேரிமக்களும் நல்ல இடமும் உணவும் இருந்த நடுத்தர, மேட்டுக்குடி மக்களும் ஒன்றாக கலந்துவிட்டார்கள். இப்போது இவர்களுக்கு தேவையானவைகள் பணமும் அந்தஸ்தும் இருக்க முடியாது. இந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடமிருந்து நாம் எதிர்ப்பார்ப்பது உதவியையும் தன்னலமற்ற சேவையையும்தான்.

ஒரு சமயத்தில் நடிகர்கள் சேவை செய்யவேண்டியதில்லை மற்றவர்களுக்கு பணம் அளிக்க தேவையில்லை என்று நினைத்திருந்தேன். அவர்களின் வேலை நடிப்பு மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் அதில் வில‌க்கு அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். தமிழகமக்கள் தங்கள் தலைவர்களுக்காக உயிரையும் தர தயாராக இருக்கிறார்கள். நடிகர்களின் உயர்வு தன் வாழ்வை தருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சங்கடம், சிரமம் வரும்போது அந்த நடிகர்கள் நிச்சயம் உதவி செய்யவேண்டும் என மற்ற நபர்கள் நினைப்பது தவறில்லை. வெறும் நடிகர்கள் இல்லை அவர்கள். அதற்கும் மேலேயே அவர்களை கொண்டாடுகிறார்கள் தமிழர்கள். இந்தியாவில் எந்த பிறமொழி நடிகர்களுக்கும் இவ்வளவு சம்பளம் அளிக்கப்படுவதில்லை என்பதை வைத்தே இதை புரிந்துக் கொள்ளலாம்.
பேரிடர் செய்தி வந்தது சூர்யா மட்டும் முதலில் ஆரம்பித்தார். பின் ராகவா லாரன்ஸ் உதவியை அறிவித்தார்கள். ஆனால் அதற்குபின்னால் தமிழகத்தை சேர்ந்த எந்த நடிகரும் பணம் அளிக்க முன்வரவில்லை. தமிழகத்தில் தெலுகு தேச நடிகர்கள் படங்களுக்கு அவ்வளவு வரவேற்ப்பில்லை அவர்கள்கூட வாரி வழங்க ஆரம்பித்தும் எந்த தமிழ நடிகர்கள் பணம் அளிக்கவில்லை. கர்நாடக அரசு 5 கோடியும் அம்மக்கள் வீதிவீதியா சென்று பணம் சேகரிக்க ஆரம்பித்தும், கேரள நடிகர்கள், நடிகைகள் பணம் அனுப்ப ஆரம்பித்தும் எந்த தமிழ் நடிகர்களும் பணம் அல்லது உதவிகளை செய்ய முன்வரவில்லை. நடிகர் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி, போன்றவர்கள் மட்டுமே இறங்கி வந்து வேலை செய்தார்கள்.
அதற்கு மாறாக அரசு வரிப்பணம் என்னானது என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெ. அரசு மீது நடிகர்களுக்கு கோபம் இருக்கலாம், ஆனால் பயன் அடைவது அவர் இல்லை.
இரவு தொலைக்காட்சியில் தொடர்ந்து தங்களது கருத்துகளை வைத்து எந்த சமரசத்திற்கு அடிபணியாதவர்களாக தெரியும் சில அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை நாம் ஆச்சரியத்தோடு நோக்காமல் இருக்க முடியாது. அவர்களின் கருத்துகளில் சில நமக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலும் அவர்களின் முக்கியத்துவதை நாம் மறுக்க முடியாது. சீமானின் கருத்துகளில் எது நமக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லமுடியும், ஐங்கரன், வேல்முருகன் காந்தி, அருணன், ஞாநி, போன்றவர்களின் கருத்துகளை நாம் நிச்சயம் மதிக்கதான் வேண்டியிருக்கிறது.
முள்ளிவாக்காலில் மாட்டிய தமிழர்களுக்கு இவர்கள் கொடுத்த அழுத்தத்தில் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அந்த குண்டு மழையிலும் சென்று மக்களை காத்திருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் வெள்ளபெருக்கிற்கு மாட்டிய சொந்தஊர் தமிழ் மக்களை காண அல்லது முடிந்த உதவிகளை செய்ய இவர்கள் முயன்றது என்ன என்றே தெரியவில்லை. இவர்களால் வெறுக்கப்பட்ட சிங்கள, கன்னட, மலையாள, தெலுகு மக்களேல்லாம் உதவியபோது இவர்கள் எதுவுமே செய்யாதது இவர்களின் இடம் என்ன என்பதை காட்டிவிட்டது என்றே நினைக்கிறேன்.
பிறமொழி நடிகர்கள் உதவி செய்தபோது நம் நடிகர்கள் சும்மா இருந்ததும், பிறமொழி மக்கள் உதவி செய்தபோது நம் அரசியல்வாதிகள் சும்மா இருந்ததும் பெரியதாக வித்தியாசம் இல்லை தான். அரசியல் தலைவர்களில் ஸ்டாலின், திருமா, வைகோ போன்றவர்கள் எங்குமே காணமுடியாதது நம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். அவர்களின் வருகையாக எதுவும் நல்லது நடந்துவிட்டால் மீண்டும் நாம் இதைவைத்து எதுவும் அரசியல் பண்ண முடியாமல் போய்விடும் என்கிற பயத்தை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
டிடி டிவியை பார்த்தபோது தான் தெரிந்தது மற்ற சேனல்களில் காட்டப்படுபவைகள் வெறும் அரசியல் என்று. எங்கே இடர்கள் நடக்கிறதோ அங்கே செல்கிறார்கள், எங்கே உதவிகள் செய்யப்பட்டனவோ அதை எளிதாக மறைத்தார்கள். மத்திய பேரிடர் குழு செய்த முழுமையாக காட்டப்படவேயில்லை. இதனால் அவர்கள் அடைவது மேலும் மக்களை அச்சத்தில் வைத்து அதன் மூலம் நமக்கு ஓட்டுகள் கிடைக்கும் என்கிற ஆசைதான்.
அரசு முழுமையாக செயல்பட்டதா என்றால் இல்லைதான் ஆனால் அத‌ற்கு வெறும் எதிர்மறை விஷயங்களை சொல்வதில் உள்ள அநாகரிகத்தை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலே சொன்ன சமூக ஆர்வலர்கள் மீண்டும் தொலைகாட்சியில் தோன்றுவார்கள், எல்லா முடிந்துபின் இந்த மாதிரியெல்லாம் அரசு செயல்படவில்லை என்று சொல்வதற்கு. அதற்காகவே அவர்கள் எந்த உதவியையும் மற்றவர்களுக்கு கிடைக்க முயற்சி செய்யவில்லை என்பதை எளிதாக மறைத்துவிட்டு.
இங்கே சில இயக்கங்களை பற்றியும் அவர்களின் சேவையைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆர்எஸ்எஸ், த‌முமுக, மமக போன்ற அமைப்புகளை நிச்சயம் பாராட்டவேண்டும். முதலாவது இந்து அமைப்பும் மற்ற இரண்டும் முஸ்ஸீம் அமைப்புகள். இந்த அமைப்புகளை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும் அவர்கள் சேவையில் குறைந்தவர்கள் இல்லை என்று நிருபித்திருக்கிறார்கள். மற்றொருன்று சீக்கிய மக்கள் குழு இவர்களும் தொடர்ந்து களப்பணியாற்றுகிறார்கள்.
பேரிடர் நம‌க்கு உணர்த்துவது ஒரு எளிய விஷயத்தை தான். எந்த லட்சியவாதமும் மனிதாபிமானத்திற்கு முன்னால் ஒன்றுமில்லை.

No comments: