Friday, February 12, 2016

ஏழாம் உலகத்தின் கதை




படித்து முடித்ததும் உடனே ஒரு விமர்சனம் எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது நாவலின் தாக்கம் இருக்கும் வரை அது முடியாது என்று.
நாம் நிஜவாழ்வில் காணும் மக்கள் ஏதோ ஒருவகையில் தங்களை ஒரு பண்பாட்டு சூழலுக்குள் கலாச்சாரம் என்று சொல்லகூடிய இதுவரை கண்டவைகளை கொண்டு உருவாக்கி வைத்திருப்பவைகளைத் தாண்டி அவர்கள் செல்வதில்லை என்பதை நமக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் இவைகளின் சுவடுகள் இல்லாத மக்களிடம் எந்த நம்பிக்கையில் பழகவோ உறவுவைத்துக் கொள்ளவோ முடியும். அந்த மனிதர்களை கண்டதும் நாம் பயந்து ஓடுவதும் இதற்காகத் தான். அவர்களை ஆன்மா இல்லா மனிதர்கள் என்று சர்வசாதாரணமாக விளித்து ஒதுக்கிவைக்க நினைக்கும் மனிதர்கள் அந்த சக்தியில் இருந்து வந்தவர்கள்தான். தங்களை தூய்மையானவனாக காட்டி அவர்களை சுரட்டி பிழைக்கும் இம்மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் அது எல்லாம் அவனுக்க செயலாக்கும்.

எவ்வளவு நல்ல மனிதர்களிடமும் தீமைகள் நிறைந்த ஒரு பக்கம் இருக்கும். அவைகள் வெளியே தெரிவது மிக அரிதான காலங்களில்தான். அதிதீவிரமான பக்தியுள்ள மனிதர்கள், தீவிர ஒழுக்கவாதியாக காட்டும் முகங்களை கொண்டவர்கள், மற்றவைகள் மேல் அக்கறையற்று எந்நேரமும் ஒரேவிஷயத்தை செய்பவர்கள், என்று நிறைய சொல்லலாம், அம்மாதிரியான மனிதர்களில் பெரும்பாலோரின் அகவாழ்வில் மிகுந்த கொடுரங்களையும், சுயநலமிகளாக‌ இருப்பவர்கள்.
கொஞ்சம் இளகிய மனம் கொண்டவர்கள் இந்நாவலை அதன் வட்டார மொழியை புரிந்து மேல் செல்பவர்களாக இருந்தால் நிச்சயம் அழுதுவிடுவார்கள். மனஅமைதியை இழப்பார்கள்.
ஒருமுறை ஓட்டலில் வேலைசெய்யும் கடைநிலை ஆட்களுடன் ஒரு குருப்பாக தங்கும் நிலை வந்தபோது, என்மேல் மதிப்புவைத்திருந்த இருநண்பர்கள் என் உடைமைகளை மற்ற ஆட்களிடமிருந்து காப்பாற்ற எத்தனை பாடுபட்டார்கள் என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
முக்கிய பாத்திரமான பண்டாரம் எல்லா நேரங்களிலும் முருகா முருகா என்று புலம்புவதையும் சந்தர்பங்களில் சினிமா பாடல்கள் மனதில் எழுவதையும் மிக நுண்ணிய அவதானிப்பாக கொள்ளவேண்டும். ஹோட்டல்களில் தங்கும் சமயம் முருகனை மறந்தவர் அறைக்கு யாராவது வந்திருப்பார்களா என்று ஆணுறையை எண்ணுவது என்று மிக சாதாரணமாக அவர் இயல்பை சொல்லமுடிகிறது.
கொண்டு செல்லப்பட்ட உருப்படியை தேடி போலீஸ் ஸ்டேசன் செல்லும்போது மிக பக்திபழமாக சென்று அடிவாங்கி அவமானபடுத்தப்பட்டு பணமெல்லாம் கொடுத்து வெளிவந்து மீண்டும் அதே முதலாளிதனத்துடன் வாழ்வை தொடர்கிறார்.
அவரின் மனைவி, மூன்று குழந்தைகளை இந்த விஷயங்களை எதிலும் கவனம் பெறாமல் இருக்க அதிக பிரயத்தனத்துடன் இருக்கிறார். மூன்று பெண் பிள்ளைகள் அவரின் செல்லபிள்ளைகளாக வாழ்ந்தாலும் இரண்டாமவள் முதல் பெண்ணின் நகைகளோடு ஓடிப்போயி வேசியாகிறாள், இரண்டாமவளுக்கு நல்ல டிசையின் நகை எனக்கு சுமாரா என்று முதலாமவள் கல்யாணத்தில் அழுவது எப்படி புரிந்துக் கொள்வது என்று தெரியவில்லை. மாமியாரின் வசைகள், மருமகனின் சின்ன வேலை, உறவினர்களின் சீண்டல் என்று எல்லாவற்றையும் தாண்டி மிக சிரமத்துடன் தாலி ஏறினால் போதும் என்று இருக்கும் பண்டாரத்திற்கு இந்த பிரச்சனையை எப்படி எதிர்க் கொண்டார் என்பதை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.
உருப்படிகளை தன் மகள்களாக அவரால் காணமுடியாதபோது, தன் மகள்களை உருப்படிகளாக அவரால் காணமுடியுமா? சிறந்த அப்பாவாக இருக்க நினைக்கும் அவர் தன் சுயநலத்தால் சிறந்த மனிதராக இருக்க முடிவதில்லை. அது அவர் குடும்பத்தையே பாதிக்கும். எல்லா மனிதர்களும் அப்படிதானா? அவருக்கு அவர் மகளின் மாமியார் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. உறவினர்கள் எத்தனை அவரை சீண்டினாலும் காயப்படுத்தினாலும் அவரால் சிரிக்க முடிகிறது ஏனெனில் அவர்கள் உருப்படிகள் மேல் செலுத்தும் அதிகாரம், வன்முறை அத‌ற்கும் மேலானவைகள், கொடூரமானவைகள்.
அவருக்கும் உதவும் நாயர், நாயக்கர், போத்தியும் வெளியில் நல்லவர்களாக தெரிந்தாலும் அவர்கள் மனமும் அழுக்கும் வெறுப்பும் கொண்டவைகள். பண்டாரம் அதை அறிந்தே இருக்கிறார் அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் அறிந்துக் கொள்கிறார்.
நாயக்கர் நேரில் நன்றாக பேசி அவருக்கு உருப்படிகளை விற்க உதவுகிறார். அதே வேளையில் அவரின் ஆட்களிடம் அவரிடம் இருக்கும் பணத்தை அடிக்க சொல்லி தருக்கிறார். அதை அறிந்து அவர் ஒரு ஹொட்டலில் அந்த நபரிடமே பேசுவதும் அவர் எப்படியோ தப்பிச்சிட்டிங்க என்று கூறுவதும், இருவர் சேர்ந்தே உணவருந்தும் என வாழ்வில் எல்லாமே நடக்கிறது. பின் அவர் ஒரு இடம் அழைத்துச் சென்று குழந்தை உருப்படிகளை காட்டுகிறார். ஆசிட் ஊற்றப்பட்ட கண்கள் குருடாக்கப்பட்ட ஜீவன்களைக் கண்டு பதறி ஓடிவருகிறார்.
அவரையே பதறவைக்கும் வாழ்வை பார்த்தாலும் அவர் உருப்படிகளை வைத்து பிழைக்கும் பிழைப்பை விடுவதில்லை. ஒருவகையில் சந்தோஷமாக வாழ்வை கழிப்பது உருப்படிகள்தாம். அவர்களின் மகிழ்ச்சி நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. எத்தனையோ கஷ்டங்களையும் கண்டபின்னும் மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். எருக்கு போலீஸ்காரர்களால் சிதைக்கப்பட்டபின் மருத்துவனையில் இருந்து மனைவி என்று மறைவாக கட்டிய தாலியும் பீ வண்டியில் போட்டு தூக்கி வரப்படுவதும், வந்தபின் அதை நினைத்து வெட்கமாக இருப்பதும், இது பொய் என்று தெரிந்தாலும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்குவதும் என்று அவள் வாழ்க்கை போகிறது. குய்யனின் ஒரு நாள் பாயச சாப்பாடும், நிரபராதி வார்த்தையும் போதுமானதாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு பிள்ளைப் பெற்று அதை வெளியே விற்க‌படும்போது கதறுவதும், கடைசியில் ஒற்றைவிரல் சிறுவனைக் கொண்டு புணரவைக்கும்போது அது தன் மகன் என அறிந்து வேண்டாம் என கதறுவதும் நடக்கிறது. அதன்பின் அவள் எப்போதும்போல இருக்கதான் போகிறாள்.
எல்லாவற்றிற்கும் காரணமான பண்டாரம் எயிட்ஸில் சாகப்போகிறாரா அல்லது அவர் குடும்பம் சிதையபோகிறதா தெரியவில்லை.
உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்க நாம் கவனிக்காமல் இருப்பதுமட்டும் காரணமல்ல. நமக்கு அளிக்கப்படுபவைகளில் சிறந்தது எது என்ற தேர்வும் ஒரு காரணமல்ல, எல்லாம் அவனுக்க செயலாக்கும்.













No comments: