Tuesday, February 23, 2016

கழிவறை மனோபாவம்



மாலையில் என்றும் இல்லாமல் டிபன் வகைகள் சாப்பிட்டுவிட்டு ஒரு காபி குடித்தபின் கொஞ்ச தூரம் நடந்து சென்று ஒரு ரிக்ஷாவில் ஏறி தெரிந்தவர்களின் வீட்டிற்கு என் அம்மா அப்பாவோடு சென்று இறங்கியதும் என் வயறு கலங்கிவிட்டது. என்றுமில்லா மாலைநேர அதீத உணவு என் வயிற்றை பதம் பார்த்துவிட்டது. எனக்கு ரெண்டுக்கு வருது என்றதும், அப்பா அம்மா, தங்கையோடு வந்த எனக்கு அந்த நண்பர்களின் வீட்டு மனிதர்கள் முன்னால் இரண்டு பக்கத்திலிருந்து திட்டு தான் முதலில் கிடைத்தது. இவன் எப்பையுமே இப்படிதான் என்பது மாதிரியான திட்டுகள். நண்பர்களின் குடும்பத்தினர்களையும் சேர்த்து எல்லோருக்கும் பெரும் சங்கடங்களை நான் விளைவித்துவிட்டதாக நினைத்தார்கள். இயற்கையின் அழைப்பு என்று ஆங்கிலத்தில் சொல்லும் இதற்கு நாம் பெரிய சங்கடம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறோம். அதன் பின்னால் நான் எங்கு சென்றாலும் மிக கவனமாக இருக்க ஆரம்பித்தேன் என நினைக்கிறேன்.

இரவில் ஊரிலிருந்து சென்னை வருவது எனக்கு பெரும் அவஸ்தையாக இருக்கும். காலையில் இறங்கியது எங்கு செல்வது என்கிற குழப்பம். ஆகவே அப்போதெல்லாம் குறைவாக உணவு உண்ண ஆரம்பித்தேன். டீ காபிகளை பயணங்களில் தவிர்த்தேன்.
ஆனால் பெருநகரங்களில் சிறுநீர் கழிப்பதுகூட சிரமமான காரியம்தான். சிறுநீர் கழிப்பிடங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை போன்று ஒன்று தமிழ‌கத்தில் இல்லை. இதில் கட்டாய பணவசூல், அதுவும் அதீதமாகவே இருக்கும்.
ஆண்கள் மட்டுமே கொண்ட நான் முதலில் சேர்ந்த சின்ன வேலையிடத்தில் கழிவறைகள் இல்லை. மொட்டைமாடியில் சென்று நடுதரைதளத்தில் இருந்துவிட்டு வருவோம். ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இருந்தது. இதேபோன்ற எல்லா பணியிடங்களிலும் கழிவறைகளே கிடையாது என்று அறிந்தபோதுதான் ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் உள்ள சின்ன அலுவலகங்கள் எதிலும் கழிவறைகள் இருக்காது. அரசு அலுவலகங்கள் சிலவற்றில் கழிவறைகள் இருந்தாலும், தூய்மையானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது.
தமிழகத்தில் உள்ள கடைகளில் வேலை செய்யும் நபர்களுக்கு அந்த கடையில் எந்த கழிவறையும் கிடையாது. மிக பரபரப்பான கடைத்தெருக்களில் இருக்கும் கடைகளில் கழிவறைகள் அந்த தெருவிற்கே இல்லாமல் அங்கு வேலை செய்யும் மனிதர்கள் எங்கே செல்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்களாக இருக்கும் அவர்களுக்கு ஒரு சாதாரண கழிப்பறைகூட கிடையாது. எல்லோரும் மறைவாக சில கடைக்குபின்னால் அல்லது கடையிலிருந்து வெளியே வந்து சற்று தொலைவில் இருக்கும் வேறு ஒரு மறைவிடத்திற்கு செல்வார்கள்.
இயற்கையின் அழைப்பு என்று நாம் அதை அழைத்தாலும் செயற்கையாக அதை உருவாக்கி கொண்டதாக நினைத்துக் கொள்கிறோம். நிறைய தின்று நாம்தான் அதை வேண்டுமென்றே தேடிக் கொள்வதாக நினைப்பவர்கள் அதிகம். அதிக தின்பவரை 'கொட்டிக்கொண்டதாக' கழிப்பறைக்கு செல்பவரை 'பேண்டுவைப்பவராக' பார்க்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கு இருக்கும் கழிப்பறைகளை பயன்படுத்த பயந்து அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும். பல பள்ளிகளில் கழிகறைகள் தனியாக கிடையாது. திறந்தவெளியில்தான் இருக்கவேண்டும். பெண்பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு தடுப்பு சுவர் இருக்கும். ஆனால் நகரப் பள்ளிகளில் மிக மோசமாக பராமரிக்கபடுபவைகளாக இருக்கும். இது குறித்து பெற்றோருக்கு எந்த அக்கறையும் இருந்ததாக நான் பார்த்ததில்லை.
சென்னை மற்றும் வேறு சில நகரங்களைத் தவிர மற்ற ஊர் வீடுகளில் கழிவறை எங்கே இருக்கிறது என தேடவேண்டியிருக்கும். கழிவறை செல்லவேண்டும் என்றால், அதோ அங்கே இருக்கு பாருங்க என்று வீட்டின் பின்புறத்தை காண்பிப்பார்கள். வீட்டின் மிகக் கடைசியில் ஏதோ ஒரு கோடவுன் போல அமைக்கப்பட்டிருக்கும். விளக்குகளற்ற அந்த அறை இருட்டில் வந்தால் தடுக்கி விழவேண்டியிருக்கும்.
பல ஊர்களில் நீண்ட கட்டுகளைக் கொண்ட வீடுகளுக்கு ஒரே கழிவறை இருக்கும். அங்கு எல்லா மலங்களும் சேர்ந்து தொதித்து காணப்படும். அதை எடுக்கவருபவர்கள் ஒருநாள் வரவில்லை என்றால் அவ்வளவுதான்.
நம் மனநிலையிலேயே ஒன்று பதிந்திருக்கிறது. இவைகள் அசிங்கமானவைகள், நாம் இதில் கலந்துக் கொள்ளகூடாது என்பது மாதிரி. ஆகவே பொதுக் கழிப்பிடங்கள் மிக அசிங்கமான இருக்கின்றன. அங்கு வருபவர்கள் அடுத்து வருபவர்களுக்கு பயன்படுவகையில் தூய்மைக் கூட செய்யாமல், இருந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். இந்த சமூகம் திருந்தாது என்று அலுப்பவர்களும் அவர்கள்தான்.

1 comment:

ஹேமா (HVL) said...

உண்மை, தற்போது சென்னையில் mall களின் புண்ணியத்தில் சுத்தமான கழிப்பறையைப் பார்க்க முடிகிறது.