Tuesday, March 22, 2016

பறக்கும் உணவுகள்




ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சென்று ஆர்டர் சொல்லிவிட்டு காத்திருத்தல் என்கிற வெறுமையை நாம் அடைவதை தமிழகத்தில் பார்க்க முடியாது. சாப்பாடு என்றதும் (அல்லது டோக்கன் வாங்கியதும்) உடனே இலையும் தண்ணீரும் வந்துவிடும். கழுவு முடித்து நிமிர்ந்தால் ஊறுகாயும் அப்பளமும் இருக்கும். பின் காய்கறிகள் சாத தட்டும் வந்துவிடும். நமக்கு அதிக வேலை இருக்காது. சோற்றை அள்ளி இலையில் வைத்துவிட்டால் போதும் மற்ற வேலைகளை அவர்களே செய்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்தவரை ஒருவரை அனுப்பிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
மகாராஷ்டிராவில் உள்ள புனேயில் தாலி எனப்படும் சாப்பாட்டை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தால் தம்மடிப்பவர்களாக இருந்தால் போய் தம்மடித்துவிட்டு வரலாம். சாப்பிட்டுவிட்டு தம்மடிக்க நினைப்பவர்கள் போய் வாங்கிவரலாம். யாருக்காவது சாவகாசமாக போன் செய்துவிட்டு வரவேண்டும் என்றாலும் செய்துவிட்டு வரலாம்.

உள்ளே போன சர்வர் அவரோ அல்லது மற்றொருவரோ ஒரு பெரிய தட்டை எடுப்பார் அதை ஒரு துணியால் ஈரம் இல்லாமல் நன்கு துடைக்க ஆரம்பிப்பார். அதன் மேல் வைக்க சில கின்னங்களை வைக்க நினைத்தவர் மீண்டும் நினைவிற்கு வந்தவராக தட்டை ஒரு பொட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்து வைப்பார். சில நேரங்களில் கிண்ணங்களையும் நன்கு ஒவ்வொன்றாக துடைத்து வைக்க ஆரம்பிப்பார். கிண்ணங்கள் மூன்று அல்லது நான்கு கூட இருக்கும். இரண்டு ஒரே மாதிரியும் மற்றொன்று சற்று சிறியதாகவும் இருக்கலாம். சிறியதை சரியாக தேடிக் கண்டுபிடித்து எடுத்து வைக்கவேண்டும். ஒன்றில் தால் (பருப்பு) மற்றொன்றில் எதாவது குழம்புவகை, சின்ன கிண்ணத்தில் ஊறுகாய் அல்லது ஒரு இனிப்பு அல்லது தயிர் எதாவது வைக்கலாம் அல்லது இன்னொரு சின்ன கறி இருக்கும் அது கடையை பொருத்து. பிரதான‌ கூட்டை தட்டில் வைப்பார், பின் சின்ன தட்டில் சோற்றை அளந்து வைப்பார். தட்டில் ஊறுகாயை வைத்ததும் மூன்று சப்பாத்திகளை மடித்து வைத்து ஒரு அப்பளத்தையும் வைப்பார். கடைசியாக ஓரத்தில் கொஞ்சம் உரித்த வெங்காயமும் நறுக்கிய வெள்ளரியும் வைப்பார். அப்போதும் திருப்தியடையாதவராக சுற்றுமுற்றும் பார்த்து எண்ணையில் பொரித்த கொடைமுளகாயோ அல்லது உப்பு தடவிய பச்சைபிளகாயோ எடுத்துவைப்பார். அப்போதே நமக்கு பசி ஆறியிருக்கும்.
எல்லா சாப்பாட்டு கடைகளிலும் இதே மாதிரியான செயல்கள்தான் இருக்கும். நம் பொறுமையை வேண்டுமென்றே சோதிக்கிறாரா என்று தோன்றும், ஆனால் நம‌க்கு அருகில் உட்கார்ந்திருப்பவர்கள் எந்த அவசரமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது மற்றவருடன் அரட்டை அடித்துக் கொண்டோ இருப்பார்கள்.
தட்டை அதன் அனைத்து வகைகளுடன் நம் மேசையில் வைத்ததும், அவசரமாக நாம் அப்பளத்தை எல்லாம் தள்ளி சப்பாத்தியை பிட்டு சாப்பிட பறக்கும்போது நம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மெதுவாக வெங்காயத்தையோ அல்லது வெள்ளரிக்காயயோ அல்லது அப்பளத்தையோ பிட்டு கொறித்துக்கொண்டே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். வெங்காயம், மிளகாய் என்று சிலவற்றை நாம் தோடப்போவதேயில்லை. மற்ற எல்லாவைகளையும் விலக்கி ரொட்டி சோற்றை ஒரு அசுரகதியில் முடிக்கும் அவசரத்தில்தான் இருப்போம். கடகடவென சாப்பிட்டு வெளியே வரும்போது அவர் அரை மணி நேரமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இதனால் நம‌க்கு சாப்பிட தெரியவில்லையோ என நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு சாப்பாட்டை அது அளவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதற்கென்று தேவையான நேரத்தை ஒதுக்கியே உணவை சாப்பிடவே செய்கிறார்கள்.
தென்னிந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களைவிட தமிழக‌த்தில் பல்வேறு வகைகள் கொண்ட உணவு பதார்த்தமாக இருக்கும் சாம்பார், ரசம், காரகுழம்பு, தயிர், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் ஒரு சாப்பாட்டை உண்கிறோம் என்று ஒரு பெருமிதம் நம‌க்கு உண்டு. அதை எவ்வளவு இனிய அனுபவமாக ருசித்து உண்கிறோம் என்கிற இடத்தில் நாம் நிச்சயம் கடைசியில் தான் இருப்போம் என நினைக்கிறேன். தமிழகத்தில் இருக்கும் சாப்பாட்டு கடைகளில் சாப்பிடுபவர்களை கவனித்தாலே இது புரிந்துவிடும் என நினைக்கிறேன். நீங்கள் சற்று நிதானமாக சாப்பிட்டாலே கடைகாரரும், சர்வரும் பதறியவராக, முகம் சுளிப்பவராக மாறிவிடுவார்.
வீட்டில்கூட அப்படி யாரும் சாப்பிடுவதில்லை. அதற்கான நேரம் நாம் ஒதுக்குவது என்பது விடுமுறை நாட்களில் இருக்கும். அப்போதெல்லாம் டிவியே நம்மையும் மற்றவர்களையும் ஆக்கிரமித்துவிடுகிறது. வியின் முன்னால் அமர்ந்து அதில் வரும் களேபரங்களை பார்த்து அலறி அல்லது சிரித்துக் கொட்டி சாப்பிட்டு முடித்து விடுகிறோம்.
ஒரு நல்ல தென்னிந்திய சாப்பாட்டை அதற்கு தேவையான முழுநேரத்தோடு சாப்பிட்டு பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இன்னும் வைத்திருக்கிறேன்.

2 comments:

என் செல்வராஜ் said...

I was in Goa for 10 years. What you are describing is correct.
Lunch time is 1-3 means if you order by 1pm it may take 2.30 pm to complete your lunch. In tamil nadu it is not so.

கே.ஜே.அசோக்குமார் said...

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி,
உணவு நம‌க்கு ஒரு அவசர தேவையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதன் அழகுணர்ச்சியை நாம் கவனிப்பதே இல்லை.