Wednesday, March 23, 2016

மூட்டைப்பூச்சியை கொல்வது எப்படி?



எப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. ஆனால் எப்படி மூட்டைப் பூச்சியை கொல்வது என்று சொல்லப்படும் வழிமுறைகள் சாத்தியமற்றவைகள் என்று என்னால் நிச்சயம் சொல்லமுடியும்.
மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல உன்னை நசுக்கிவிடுவேன் என்று யாராவது நம்மை மிரட்டினால் அதில் உண்மை இல்லை என்று நாம் நம்பலாம். சொல்லப்போனால் அவர் நம்மை எதுவும் செய்யப்போவதில்லை என்றுதான் அர்த்தம். ஏனெனில் கடித்த ஒரு மூட்டைப் பூச்சியையே நம்மால் சரியாக கண்டுபிடித்து அதை நசுக்க முடியாது. ஒருவேளை வேறு ஒரு பூச்சியை நாம் கண்டுபிடித்தாலும் அதை எளிதில் கொன்றுவிட முடியாது. அதை நசுக்கி ரத்தம் வெளியேறினால் பல பூச்சிகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. ஒன்று அதை நெருப்புடன் சுட்டுக் கொல்வது அல்லது தண்ணீரில் போட்டு கொல்வது, அந்த ராத்திரியில் ஒருவர் இதையெல்லாம் தேடிக் கொண்டிருக்கவும் முடியாது.
எங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி அதிகமானபோது பெஸ்ட் கண்ரோல் ஆளை அழைத்திருந்தோம். ஒரு சின்ன இடம் விடாமல், எல்லா பொருட்களையும் தூக்கி வெளியே போட்டு, அடித்துவிட்டு எங்களை 5 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வர சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

திரும்பி வந்தபோது வீடுமுழுவதும் பரவியிருந்த மருந்தின் நாற்றத்தை பொருக்க முடியாமல் இருந்தது. ஆனால் மூட்டைப் பூச்சியின் தொல்லையிலிருந்து தப்பித்ததை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தது. அன்றைய நாள் முழுவதும் எல்லா பொருட்களையும் மீண்டும் சரிபடுத்தவே நேரம் சரியாக இருந்தது. சிலந்தி, கண்ணுபூச்சி, கொசு, கரப்பான், என்று வீட்டில் இருந்த எல்லா பூச்சிகளும் செத்துக் கிடந்தன. ஏன் வீட்டில் இருந்த பல்லிகள் இரண்டும் கூட கால்கள் ஆகாசத்தை நோக்கிய மல்லாக்க படுத்து செத்துக்கிடந்தன. ரொம்ப நாள் வரை மேற்சொன்ன பூச்சிகள் எதுவும் வீட்டில் அண்டவே இல்லை. ஆனால் நாளே நாளில் மீண்டும் மூட்டைப் பூச்சிகள் வலம் வர தொடங்கிவிட்டன. அதன் பின் கெமிக்கல், ஹெர்பல் என்று சிலவகை மருந்துகளையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன். சிலர் சொன்னார்கள் என்று புதினாவை வீட்டின் சில இடங்களில் வைத்துப் பார்த்துவிட்டேன். கற்பூரத்தை நசுக்கி அங்காங்கே தூவிப் பார்த்துவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மந்திரவாதியாக மாறிவருகிறேன் என்று மனைவி சொன்னதும் நிஜமாக பயந்துபோனேன்.
மூட்டைப்பூச்சிகளை எளிதாக கொல்லமுடியாது என்பதை அறிந்துக்கொள்ள நமக்கு அதிக காலம் பிடிக்காது. உலகம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிற‌து. மூட்டைப்பூச்சிகளை எவ்வாறு கொல்வது, எப்படி அதன் கடிகளிலிருந்து தப்பிப்பது என்பதைப் பற்றிய விவாதங்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றது. அதனால் நமக்கு பெரிய வியாதிகள் எதுவும் பரவாது என்றாலும் சிலருக்கு அலர்ஜி தூக்கமின்மை போன்றவைகள் ஏற்படுகின்றன. டிஎன்டி என்கிற மருந்து தடை செய்யப்பட்டதும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் மூட்டைப் பூச்சியின் ஆதிக்கம் தொடர தொடக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
குளிர்பிரதேசங்கள் அவைகளுக்கு பிடித்தமான இடங்கள். மலை நகரங்கள், சூரிய வெளிச்சம் அதிகம் படாத வீடுகள், வீடுகளில் அதிகம் குளிராக இருக்கும் அறைகள், என்று மூட்டைப்பூச்சிகளுக்கு பிடித்தமான இடங்கள் என்று சொல்லலாம். பொதுவாக எந்த மருந்திற்கும் அவைகள் இறப்பதில்லை. மூட்டைப்பூச்சிகள் மிக கடுமையான சில மருந்துகளுக்கு இறந்தாலும் அதன் முட்டைகள் எதுவும் ஆவதில்லை. சின்னச்சின்ன ஓட்டைகளில் முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிடுவதாலும் அந்த முட்டைகள் மேல் சின்ன லேயராக பரவியிருக்கும் பிசின் போன்றபொருட்களால் அவைகள் எந்த மருந்துகளிலிருந்தும் பாதுகாக்கப் படுகின்றன.
ஒரேமுறை மருந்து அடித்து அவைகளை வெற்றிக்கொண்டுவிட முடியாது. தொடர்ச்சியாக அடிக்கும் மருந்துகளால் பெருமளவில் அவைகளை கட்டுபடுத்தமுடியும். ஆனால் அந்த மருந்துகளால் அங்கு இருக்கும் மனிதர்களுக்குதான் தீங்குகள் அதிகம் ஏற்படும். சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் வீரிய மருந்துகளை பயன்படுத்த முடியாது. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக மருந்துகளால் அடுத்தடுத்த அவைகளின் பிறப்புகளில் அதிகம் பலம் கொண்டவைகளாக மாறிவிடுகின்றன. அதன் குரோமோசோம்களில் அந்த மருந்தை தற்காத்துக் கொள்ளும் பண்புகள் வளர்ந்துவிடுகின்றன.
பின் எப்படிதான் மூட்டைப்பூச்சிகளை அழிப்பது என்கிறீர்களா? அதுதான் தெரியவில்லை. குறைந்தது மனிதர்களை மிரட்டும்போது உன்னை மூட்டைப் பூச்சியை நசுக்குவதுபோல்... என்று சொல்லாமலாவது இருப்போம். மூட்டைப் பூச்சிகள் மனிதர்களைவிட பெரியவைகள்.

2 comments:

ஹேமா (HVL) said...

உண்மை, அவற்றை ஒழிக்க எங்களுக்கு ஆறு மாதங்கள் ஆனது.

கே.ஜே.அசோக்குமார் said...

அதுதரும் தூக்கமின்மையும், மனஉலைச்சலும் சொல்லி மாளாது. :)