Saturday, June 11, 2016

முன்னுரை: சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு



எழுதுவதைத்தவிர வேறு கதியில்லை என்று வந்தபோதுதான் எழுத ஆரம்பித்தேன். அதுவும் எழுதி என்ன ஆகபோகிறது என்கிற‌ பெரும்தயக்கதோடு. இத்தனைக்கும் என் சிறுவயது லட்சியம் எழுத்தாளன் ஆவதாகத்தான் இருந்தது. சிறுவயதில் என் வீட்டை சுற்றியுள்ள என் வயதொத்த சிறுவர்களுக்கு இட்டுக்கட்டி கதைகளைகூறி சந்தோஷப்படுத்திய‌ இடமான‌ சித்தி விநாயகர் கோவிலில் அமர்ந்து வேண்டிக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. மேஜைமுன் அமர்ந்து பேனா பிடித்து வடக்கே பார்த்து யோசிக்கும் என் சித்திரம் அப்போதிருந்தே என்மனதில் இருக்கிறது. படிப்பு, வேலை, அலைச்சல்க‌ள், என்று தேவையற்ற வேலைகளில் நான் ஈடுபடுவேன் என்று இன்றுவரை நினைத்ததில்லை. எழுத்தாளனுக்கு தேவையான அகங்காரமும், எந்த வேலையும் சரியாக செய்ய தெரியாமையும் எப்போதும் என் வாழ்வில் தொடர்ந்து வருவதை அவதானித்து இருக்கிறேன். என் சிறுவயதில் என் அம்மா ஒளித்துவைத்து பென்சிலால் பேப்பரில் இருபக்கங்களிலும் கதை எழுதுவதை கவனித்திருக்கிறேன். ரொம்பநாள் வரை கதையெழுதி பிரசுரிக்க அனுப்பியிருக்கிறார். இதுவரை ஒரு கதையும் வந்ததில்லை. இந்த ஒற்றை ஆதாரத்தைத் தவிர என் குடும்பவகையில் எழுத்தாளர் என்று யாருமில்லை. என் அம்மாவின் ஆசை, அவர் மனதோடு கூறிய ஆசிகள் என்னிடம் வந்துவிட்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இத்தொகுப்பு அவர் கைகளில் வரும் நாளில் நிச்சயம் அவர் கண்களைப் பனிக்கச் செய்யும்.

எழுத்தாளன் ஆகாமல் சாகும் நிலைக்கு வராமல் என்னை செய்தது வேலைக்காக வந்து சேர்ந்த புனே நகரம்தான். கொஞ்சம் பணமும் நிறைய நேரமும் என் லெளகீக கவலைகளை மறைத்து என்னை எழுத்தாளனாக்க‌ உதவி செய்தது. சில கதைகளைதவிர மற்றகதைகள் இலக்கியதரத்துடம் அமைந்திருப்பதாகவே நினைக்கிறேன். கூடவே இனிவரும் காலங்களில் இதைவிட சிறந்த கதைகளை எழுதுவேன் என்கிற இலக்கிய கர்வம் வேறு கொண்டிருக்கிறேன் என்பதால் இத்தொகுப்பை தைரியமாக வெளியிட செய்கிறேன்..
முதல் கதை உயிர்எழுத்திலும், இரண்டாவது கதை வார்த்தையிலும் வந்தது (இரண்டாம், முதலாக மாறிவெளியானது), மேலும் சில கதைகள் அவைகளில் வெளியானபின், சொல்வனம், ஜெயமோகன்.இன், மலைகள்.காம். போன்றவற்றில் மற்றகதைகள் வெளியாயின. சொல்வனத்தில் வெளியான அப்ரஞ்சி சிறுகதை வம்சி இணைய சிறுகதைப் போட்டியில் (2011) தேர்தெடுக்கப்ப‌ட்டு, வம்சி வெளியிட்ட தொகுப்பில் இடம்பிடித்தது. சொல்வனத்தில் வெளியான சாமத்தில் முனகும் கதவு என்கிற கதை அதன் ஆசிரியர் குழுவின் ஒருவரான எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்கள் சிலாகித்து சாமத்தில் முனகும் கதவு சிறுகதை குறித்து என்று ஒரு விமர்சனக் கட்டுரையை அடுத்த இதழில் எழுதியிருந்தார். இதே கதையை எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா, அவர் தொகுத்த 2000க்கு பின்னான‌ 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு ‘21ஆம் நூற்றாண்டின் சிறுகதைகள் என்று ஆழிபதிப்பகத்தால் ஆசிரியர்களின் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. ஜெயமோகன்.இன்னில் புதியவர்களின் ஆக்கங்கள் வந்தபோது வாசலில் நின்ற உருவம் கதை 12 சிறந்த‌ சிறுகதைகளின் ஒன்றாக தேர்வானது. ஜெயமோகனின் தொகுப்பில் புதியவாசல் என்ற பெயரில் ஜெயமோகனின் குறிப்புகளோடு நற்றினைப் பதிப்பாக வெளியானது. இந்த‌ முதல் தொகுப்பு வெளியாவதற்கு முன்பே மற்றவர்கள் தொகுத்த தொகுப்பில் என் கதைகள் இடம்பெறும் பாக்கியம் பெற்றவனானேன்.
எழுத்தாளர்கள் பாவண்ணன், ஜெயமோகன், வ.ஸ்ரீநிவாசன் போன்றவர்கள் தொடர்ச்சியாக என் எழுத்தின் மீது கவனமும் நம்பிக்கையும் கொண்டு மேம்படுத்த நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியிருக்கிறார்கள். பாவண்ணன் அணிந்துரையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன், கூடவே அவர்களுக்கு இத்தொகுப்பை சமர்பிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
எழுத்தாள நண்பர்கள் அ.ராமசாமி, போகன், ராமையா அரியா, ரா.கிரிதரன், புதியவன் (ஷாஜஹான்), ந.பாஸ்கரன் (நட்பாஸ்), கோவை வெ.சுரேஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, ப்ரகாஷ் சங்கரன், கணேஷ் வெங்கட் போன்றவர்கள் தொடர்ந்து என் கதைகள் குறித்து கூறிய கருத்துக்கள் வெளியான சமயங்களில் மிகப் பயனுள்ளதாக இருந்தன. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்கதையை வெளியிட்டு பின் அடுத்து சில‌ கதைகளையும் வெளியிட்ட உயிர்எழுத்து சுதிர் செந்தில், வார்த்தை இதழ், சொல்வனம், ஜெயமோகன்.இன், மலைகள்.காம் சிபிசெல்வன் ஆகியோர்களை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.
இத்தனை விரைவில் தொகுப்பாக வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன் அவர்களை இக்கதைகளை வெளியிட முன்வந்ததற்கு அவருக்கு என் நன்றிகள். ந.பாஸ்கரன் இந்தொகுப்பை செப்பனிட்டு தேவையான மாற்றங்களைச் செய்துக் கொடுத்திருக்கிறார், அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.
ஒவ்வொரு கதையும் வெளிவரும்போது பெரும் உவகை கொள்ளும் என் முதல்வாசகி ஸ்ரீதேவிக்கு தொடர்ந்தளிக்கு உற்சாகத்திற்கும் என்றென்றும் என் அன்பு.

அன்புடன்,
கே.ஜே.அசோக்குமார்

புனே

No comments: