Wednesday, October 12, 2016

சிறுகதை: முகங்கள்




சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும் ஒரளவிற்கு கவனித்தேன் என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நிச்சயம் இந்த அளவிற்கு மோசமாக இருக்காது என நினைக்கிறேன்.. முகங்களை கவனிப்பதென்பது வெறுமனே கவனிப்பது மட்டுமல்ல. நான் நினைப்பது அதன் வளர்ச்சியின்/வளர்ச்சியின்மையின் பரிமாணங்களை பற்றி நம் அபிப்ராயங்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கின்றன என்பதை கவனிப்பதுதான்.

மனித முகங்கள்மேல் இருக்கும் வசீகரம் வேறொன்றின்மேல் இல்லை என்று சொல்லலாம் எனக்கு. முகங்களை வட்டமுகம், நீளமுகம், சதுரமுகம் என்று வகைப்படுத்தி ஒரு வரிசை ஒன்றைமனதிற்குள் வைத்துக்கொள்கிறேன்.. அதன் தொடர்ச்சியாகசந்திக்கும் முகங்களை அந்தவகைமைக்குள் பொருத்தி மாதிரிகளை உருவாக்கி கொள்கிறேன். இந்த வகைகளை தாண்டி முன்பு எப்படி இருந்திருக்கும், இப்போது எப்படி மாறியிருக்கிறது என்பதுவரை ஆராய்ச்சியும் செய்து கொள்கிறேன். இதை இத்தனை சிரமபடுத்தி அதை புரிந்துகொள்ளவேண்டாம் என நினைக்கிறேன். அது எளிதானதுதான். ஆனால் எனக்கும் சரியாக விளங்குவதில்லை எந்த இடத்தில் இதை நான் செய்கிறேன் என்று. இதெல்லாம் என்னை அறியாமல் தானாக நடந்துவிடும்தான், இதைக்கூட பின்னாலில் இருண்ட வானத்தில் சட்டென தோன்றி மறைந்துவிடும் சின்ன ஒளிக்கீற்று போலதான்தெரிந்துகொண்டேன். பலவருடங்கள் முன்பு ஒரு கணநேரத்தில் கண்ட நபரைகூடஅவர் முகஅடையாளங்களைக் கொண்டு அவர் பெயரைச் சொல்லி சரியாக அந்தநபர் இவர் என்று கணித்திருக்கிறேன். ஆனால் முகங்களைப் படிப்பதினால்என் தினப்படி வாழ்வின் சுவாரஸ்யங்களைத் தவிரபெரியதாக எதுவும் என் வாழ்வில் நான் அடைந்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை.
மற்றவர்களுக்கு கிடைக்காத இந்த விஷயம் நான் ஓவியனாக இருப்பதனால் அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். தனியார் துறையில் முதன்நிலை பொறியாளராக இருந்தாலும் ஓவியங்கள் வரைவதில்தான் அதிக ஆர்வம். சிறுவயதில் இருந்தே வரைய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் ஓவியத்தை ஒரு பிற்சேர்க்கையாகதான் வைத்திருக்கிறேன் என்பதை யாராலும் நம்பமுடிவதில்லை.. என் மனைவிகூட ஓவிய ஆர்வத்தை தீவிரமாக செய்திருந்தால் இந்நேரம் பெரிய ஓவிய கலைஞனாகஆகியிருக்கமுடியும் என்று கூறியிருக்கிறாள். சிலநேரங்களில் நான் அலுவலகவேலையில் அதிக கவனம் கொள்ளவில்லை என்ற ஆதங்கத்திலும், அநேக நேரங்களில் அவள் சாமான்கள் வைக்க இடம்விடாமல் வீடுமுழுவதும் நான் ஒட்டியிருக்கும் படங்களின் மேலுள்ளவெறுப்பினாலும், சிலநேரங்களில் நிஜ அக்கறையுடனும்  கூட சொல்லியிருக்கலாம்.
நிலகாட்சிகள், விலங்குகள், பறவைகள் என்று பலவகை ஓவியங்களை இதற்கு முன்னால் வரைந்துகொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக முகங்கள் மட்டுமே என்று சுருங்கிபோனது. தூசு விழுந்ததால் கையால் முகம்சுருங்க துடைக்கும் முகம், சிரிக்கும் வயதடைந்த கிழவன் முகம், இரவில் பேயை கண்டு அலறிய முகம், வெட்கப்படும் குழந்தையின் முகம் என்று பலவகை முகங்கள் மட்டுமே கொண்ட ஒரு தொகுப்பு ஒன்று என்னிடம் உண்டு.. ஆயில் பெயிண்ட் போன்ற அதீத வகைகளுக்கும் இப்போது செல்வதில்லை, முழுவதும் பென்சில் கோட்டோவியங்கள் தான். அவைகள்தாம் அழகான நாம் விரும்பும் அந்த உணர்ச்சிகளை அளிக்கமுடியும் என நினைக்கிறேன்.
முகஓவியங்கள் வரையமுகங்களைப் பற்றிய சிலநுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒருவரின் கைசாண் அளவே அவரின் முகம் இருக்கும். அவர் உடம்பின் எட்டில் ஒரு பகுதியே அவரின் முகம். இடது கன்னத்தின் அளவைவிட ஒருவரின் வலது கன்னத்தின் அளவு பொதுவாக சற்று பெரியதாக இருக்கும். சிலருக்கு இடது பெரியதாக இருக்கும். இது அவரின் உணவு பழக்கத்தால் ஏற்பட்டது.
முகங்கள் அவற்றின் மாற்றங்களைப் ற்றி கூறும்போது என் முகத்தின்  மாற்றங்களையும் நான் கவனிக்க  தவறியதில்லை. முதலில் வாயின் இருபக்கங்களிலும் கோடுகள் விழ ஆரம்பிக்கின்றன். உதடுகள் கருத்து சற்று உள்ளடங்கிவிடும். கண்கள் கீழே கருவளையங்களும், சிரிக்கும்போதும் கண்களை சுருக்கும்போதும் கண் ஒரங்களில் பூனையின் மீசைபோல கோடுகள் விழ ஆரம்பிக்கும். முகத்தின் தாடைகள் பெரிதாகி காதுகளை சற்று பிள்தள்ளியதுபோல் ஆகிவிடும். குறிப்பாக மற்றொன்றையும் சொல்லவேண்டும் ஆற்றின் இருகரைகள்போல புருவங்களின் மத்தியில் இருகோடுகள் வளந்து நிற்க ஆரம்பிக்கும். இதில் மற்றொன்று கருத்தில் ஊர்வனவின் தோல் அடுக்குகள் போல் கருமைகோடுகள் தெரிய ஆரம்பிக்கும்.
இந்த கவனிக்கும் பழக்கம்  என்னோடு இருக்கும்வரை பெரிய பிரச்சனைகள் வருவதில்லை மற்றவர்களையும் அவர்களின் முகநுணுக்கங்களை கவனித்து சொல்வது, என்னை அறியாமல் நடந்துவிடுவதாக இருந்தாலும், சமயங்களில் எனக்கு சங்கடமானதாகவே முடிந்திருக்கிறது. நண்பர்கள், உறவினர்களை ஒரு பெரிய இடைவெளிவிட்டு சந்திக்கும் போது அவர்களின் முகத்தில், தலையில் ஏற்படும் மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது பொதுவாக அவர்கள் நான் மிக நன்றாக கவனிப்பதாகவும், நுட்பங்களை அறிந்திருக்கும் திறன் கொண்டவனாக இருப்பதாகவும் எச்சிலை விழுங்கி கொண்டே கூறினாலும் மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் சட்டென விலகிசெல்வது நடந்திருக்கிறது.
இந்த முகங்களை வகைப்படுத்தும் முறையால் தான் முகஓவியங்கள் சாத்தியமாகும். முகங்களை ஏன் வரைய வேண்டும். ஏனெனில் அவைகளில்தான் நாம் தேடும் அத்தனை பாவங்களை நாம் பார்த்துவிட முடியும். உடல்மொழியில் தெரியாத வார்த்தைகளில் தெரியாத ஒரு பாவத்தை ஒரு கண்ணசைவில் அல்லது உதட்டு நெளிவில் நாம் கண்டுவிடமுடியும்.
சிலரைப் பற்றி  அப்படி நேரடியாக எதையும் சொல்லிவிடமுடியாது என்பதையும் சொல்லியாக வேண்டும். உடன் வேலைப்பார்த்த சகஊழியர், ஒருவருக்கு கழுத்து இல்லாம தலை தோளோடு சேர்ந்தது போலிருக்கும், ஊரில் இருக்கும் ஒரு நண்பருக்கு ஒரு கண் மட்டும் நேர்கோட்டிலிருந்து சற்றுவிலகி சாய்ந்திருக்கும், மற்றொருவருக்கு வாய் ஒருபக்கம் தள்ளியது போலிருக்கும். முன்பக்க நெற்றிபுடைத்த காதுகள் படர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்களை மறைமுகமாக கூறுவதுகூட அவர்களை அவமதிப்பது போலாகிவிடும். கஷ்டப்பட்டேனும் அச்சமயங்களில் நாவை அடக்கி கொள்வேன். ஆனால் சிலர் சற்றும் மாறாமல் அதே புன்னகையோடு அதே முகத்துடன் இருக்கும் நபர்களை காணும்போது ஆச்சரியம் ஏற்படுவது தவிர்க்க முடிவதில்லை. ஒருவகையில் மாற்றமில்லாததை மனித மனம் விரும்பிகொண்டுதான் இருக்கிறது.
முன்பு ஒரு அலுவலத்தில் இருந்தபோது என்னுடன் வேலைப் பார்த்த ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்தபோது அவள் உடலும் முகமும் சுத்தமாக மாறியிருக்கிறது என்பதை என் கண்களை கொண்டே அவள் புரிந்துகொண்டு இரண்டு வார்த்தை மட்டும் பேசிவிட்டு வெட்கமடைந்தபடி ஓடியது நினைவிருக்கிறது.
கல்லூரி நன்பன் ஒருவனை கொஞ்சநாள் முன்பு சந்தித்தேன். மிக ஒழுக்கவாதியாக அப்போது அறியப்பட்டவன் குடியும் கும்மாளமுமாக தொப்பை சரிந்து ஆளே மாறியிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த சோர்வு ஆச்சரியம் அளித்தது. நிஜமாகவே அது அவன்தானா என எண்ண தோன்றியது. ஏனெனில் அத்தனை உற்சாகமானமாணவனாகஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் பழகியவன். பாட புத்தகத்தையும் தேர்வையும் தவிர வேறு ஒன்றை அவன் பேசியதாக நினைவில்லை. இன்று அவனின் பேச்சுகள் முழுவதும் குடி, போதை, பேதை என்று சுற்றிசுற்றியே வந்தது. இப்போதெல்லாம் தினம் விஸ்கி இல்லாமல் இருக்க முடியாது என்றான். அதேபோல் குடிகாரனாக இருந்த ஒரு கல்லூரி நண்பன் திருமணத்திற்குபின் மிக நல்லவனாக மாறியிருந்தான். ஆனால் பின்னதைவிட முன்னதே அதிகம் ஆச்சரியம் அளிக்கிறது.
என் பள்ளிகால தோழன்  ஒருவன் இணையம் வழியாக என்னை  அறிந்தபோது இதுவும் முந்தைய அனுபவங்கள் போன்றதாக இருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக இருந்தது. நான் எதிர்பார்த்ததைவிட வேறு மாதிரியாக ஆச்சரியமாக இருந்தது. அறிவியல் பயன்பாடு நம்மை சுருக்கியிருந்தாலும் இன்னமாதிரியான நன்மைகளை பயப்பது ஏற்புடையதாகதான் இருக்கிறது.
மடப்புரத்தில் ஆறிலிருந்து  ஒன்பதாவது வரை அவனுடன் படித்த நாட்கள் மறக்க முடியாதவை. என் அருகில் அமர்ந்திருந்தான். அவன் பெயர் கண்ணன், ஆனால் நாங்கள் அழைத்ததோ பூனைக்கண்ணா என்று. பூனைக் கண்களில் தெரியும் சிநேகிதம் நெகிழ்ச்சி அடையசெய்வது. அடர்ந்தியானமுடி, உருண்டைமுகம், வேகமாக நடந்துவரும் அவனின் மெனரிசங்கள் எப்போதும் கேலிக்குள்ளாயின‌. நண்பர்கள் வட்டதில் அவன் மேல் எப்போது பாசம் உண்டு. தொட்டதெற்கெல்லாம் கோபப்படுவான். அதுவே அவன் குணமாக எடுத்து சிரித்திருக்கிறோம். அவனுடன் எப்போது நட்பாக இருப்பதால் நான் ரொம்ப யதார்த்தமாக இருப்பதாக கூறுவான். பின் மாற்றலாகி வேறு ஊர் வந்தபோது கண்ணீர் விட்டு அழுதான்.
கல்லூரி படிப்பு, வேலை என்று வேறுவேறு ஊர் வந்து புனே வந்தடைந்தேன். கடைசியில் அவன் மனைவி, குழந்தைகளுடன் புனேயில் இருக்கிறான் என்பதை அறிந்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தேன். இருவரும் அவரவர் நிலைகளை பற்றிப் பேசி சந்தோஷம் அடைந்து கொண்டோம்.
முதலில் தொலைப்பேசியில் என்னை தொடர்ப்பு கொண்டபோது சற்று சிலிர்ப்பாகவே இருந்தது. இந்த தொழிற்நுட்பம் எவ்வளவுதூரம் ம்மை இணைத்துவிடுகிறது. அவரின் பேச்சுகள் தொடர்ந்து கேட்கவேண்டும்போல வசீகரமாக இருந்தது. அவரின் இரு குழந்தைகள் அமெரிக்க பள்ளியில் படிப்பதாக கூறினார். ஆப்சோரிங் எனப்படும் உள்நாட்டு வேலைக்காக ஒருவருடமாக இங்கிருப்பதாக கூறினார். இந்த வாரத்தில் போய்விடுவதாகவும் கூறினார். அதற்குள் தன்னை வந்து பார்த்துவிடுமாறும் கூறியிருந்தார்.
நானும் அவர் அளித்த முகவரியில் அந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் திரும்பபோகும் ஒருநாளுக்கு முந்தினம் கிளம்பிவிட்டேன். ஊரெல்லாம் சுற்றி பல புதிய பாதைகளை இந்த நகரத்தில் இருப்பதை அறிந்து கொண்டே பயணித்தேன். பயணம் என்னவோ சுளுவாகத்தான் இருந்தது. கண்ணனை எப்படி எதிர்கொள்ளபோகிறேன் என்று காணப்போகும் அந்த முகத்தை மனக்கண்ணில் கண்டு நான் இதற்குமுன்பு அறியாத ஒரு சின்ன பதற்றத்துடனே சென்றேன்.
வயது ஏறஏற முகங்கள் விகாரமடைகின்றன, சிலருக்கு கனிவடைகிறது அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதால் இருக்கலாம். எதைப்பற்றிய அகவினா என்பதைப் பொருத்து முகங்கள் மாறுதல் அடையலாம். நான் சின்ன வயதில் படித்த ஒரு கதையில், பலநாள் அலைச்சலுக்குபின் சாத்தானுக்காகஒரு ஓவிய மாடலை தேர்ந்தெடுப்பார் பின்பே தெரிந்துகொள்வார் சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை ஏசுவிற்கு மாடலாகநின்றவரும் அவரே என்று.
வெறும் முகமாற்றம்தான் வாழ்க்கையா எனஓவியம் வரையும் ஒவ்வொரு சமயமும் யோசித்திருக்கிறேன். உடல்மொழியைவிட முகமொழி விசேஷ குணங்கள் கொண்டவை என நினைக்கிறேன். உடல்மொழியை மெனக்கெட்டால் மாற்றிக் கொண்டுவிட முடியும், ஆனால் முகமொழியை என்ன செய்தும் மாற்றமுடிவதில்லை.
இது மேற்குபுனே பகுதி  புதியதாக வளர்ந்துவரும்  பகுதிகள். ஆகவே யாருக்கும் முகவரி சரியாக தெரிந்திருக்கவில்லைசவுக்கி என்று கூறப்படும் நாற்சந்திப்பை ஒவ்வொன்றாக கடந்து வந்தேன். பேட் என்று கூறப்படும் பல பெயர்களின் குழப்பத்தால் சுற்றிசுற்றி வரவேண்டியிருந்தது. மாலை இருட்டு வேறு அது பனிக்காலம் என்பதால் வேகமாக இருட்டு சூழ ஆரம்பித்திருந்தது. மேப் எடுத்து வந்திருக்கலாம், பல தெருக்கள் ஒரே மாதிரி இருந்தன.
ஒரு கடையில் நின்று வடபாவும் டீயும் குடித்து கொண்டேன்கடைகாரரிடம் கேட்டபோது சரியான இடத்திற்கு வந்திருப்பது தெரிந்தது. அவர் குறிப்பிட்டந்த எதிர்சாரியில் சென்றால் இடப்புறம் அவன் இருக்கும் சொசைட்டி வந்துவிடும்.
ஆனால் நேரெதிர் திசையில் திருப்பி வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்.


[இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலைகள்.காம் இதழில் வெளியான கதை]

No comments: