Thursday, December 1, 2016

புதுத்துணி



புதுத்துணி வாங்கி தைத்தது வந்ததும், மடிப்பு கலையாமல் இருக்கும்போதே பிரிக்காமல் அதற்கு மஞ்சளோ குங்குமமோ தடவிவிடுவார்கள். பல துவைப்புக்கு பின்னேயும் அதன் அந்த மஞ்சள்/சந்தன நிறம் மாறாமல் இருக்கும். ஒருவர் தன் காலரில் மஞ்சள் அல்லது குங்கும கறையுடன் வந்தால் அது புதுத்துணி என்று அர்த்தமாகிவிடும், அந்த சட்டை எவ்வளவு பழசாக இருந்தாலும். இன்று புதுத்துணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று நினைக்கிறேன். நேரடியாக ஆயத்த ஆடைகளை மக்கள் அணிய தொடங்கியது ஒரு காரணமாக இருக்கலாம். மிக குறைந்த விலையிலும் மக்களிடம் பணப்புலக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு 15 வருடமாக இந்த நிலை மாறிவிட்டது என நினைக்கிறேன்.

முன்பு வருடத்திற்கு அதுவும் தீபாவளி சமயத்தில் மட்டும் துணி எடுக்கும் பழக்கம் இருந்தது. துணி வாங்குவது ஒரு பெரிய படலமாக நடக்கும். துணி எடுத்தாச்சா என்கிற கேள்வி ஒருவரை ஒருவர் கேட்டபடி இருப்போம். முதலில் சிறுவர்களுக்கு இருக்கும் பின் பெரியவர்கள் என்று கடைக்கு சென்று வருவார்கள். பின் தைக்க என்று தனியாக கடைகள் இருக்கும் தெருவிற்கு சென்று வருவார்கள். சிலர் துணியை தண்ணீரில் நனைத்து காய வைத்து பின் தைக்க கொடுப்பார்கள். சுருங்குதல், சரியாக உடலில் அமராது என்று காரணங்களைச் கூறி அப்படி செய்வார்கள்.

என்னுடன் படித்த ஒரு சிறுவன் பெரிய ஆட்கள் வைத்திருப்பதுபோல், காலருக்கும் கழுத்திற்கும் இடையில் கர்சீப்பை மடித்து வைத்திருப்பான். சட்டையில் அழுக்கு ஏறாது, நீண்ட நாட்கள் துவைக்காமல் போடமுடியும், சீக்கிரம் கிழியாது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. பெல்ஸ் பேஷன் போய்விட்ட காலத்தில் வெள்ளை நிறத்தில் பேண்ட் பெல்ஸில் அணிந்திருப்பார் ஒருவர். பேண்டின் கீழே ஷிப் ஒரு பகுதி வைத்து தைக்கப்பட்டிருக்கும். தரையில் தேய்ந்து கிழியாமல் இருக்க இந்த ஏற்பாடு.

நான் சிறுவனாக இருக்கும் போது வளர்ர புள்ளங்க கொஞ்சம் நீளமா வையுங்க என்பார்கள். டைலரும் பாருங்கமா எவ்வளவு வெச்சுருக்கேன்னு என்று அளவையும் காட்டுவார். அவ்வளவும் நீளமாக வைக்கப்பட்ட சட்டை நான் பத்தாவது படிக்கும் வரை பத்துமளவிற்கு சரியாக இருக்கும். ஆனால் டைட்டாக சின்னதாக அணிந்துக் கொண்டு அலைய வேண்டியிருக்கும். புள்ள வளர்ந்துட்டாங்க என்பார்கள்.

புதுத்துணிப் பற்றிய கனவுகளுக்கு முடிவே இல்லை. ஒவ்வொரு குடும்பமும் ஒரு கடையை தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் வாங்குவதற்கு வைத்திருப்பார்கள். அந்த கடையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட மாட்டார்கள். எங்களுக்கு ராசியானதா அமையுது என்பார்கள். துணி கிழியறதே இல்லை என்பார்கள். ஆனால் இன்றைக்கு நாம் துணிகளுக்கு அளிக்கும் பணத்தின் பத்து சதவிகிதம் தான் அன்று துணிகளுக்கு செலவழிக்கப்பட்டன என தோன்றுகிறது.

இன்று உடைகளின் மீது ஒரு மோகம் வந்துவிட்டிருக்கிறது. எந்த மாதிரியான உடையை அணிகிறோம் என்பது பொருத்து நம் அந்தஸ்து இருப்பதாக நினைக்கப்படுகிறது. மிகப்பெரிய துணிக்கடையில் நாளெல்லாம் சுற்றி ஏகத்துக்கு அள்ளிச் செல்கிறார்கள். மக்களின் ரசனைக்கு தீனி போட முடியாமல் உண்மையில் கடையாளர்கள்தான் திணறுகிறார்கள். எட்டுவிதமாக அணிக்கூடிய உடையை 3000க்கு மேல் கொடுத்து குழந்தைகளுக்கு வாங்கிச் செல்கிறார்கள். போதாதற்கு டிரஸ் காம்படிசன் என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அணிவித்து பள்ளிக்கு அணுப்ப ஏகத்து செலவழிக்கிறார்கள்.

ஒரே வகையான உடைகள் இன்று இல்லை. விதவிதமான உடைகள் அதுவும் சர்வதேச தரம், அளவு, விலை என்று இருக்கிறது. ஆண்கள் பெண்களுக்கு தங்கள் தகுதிக்கு, அவர்கள் வேலைசெய்யும் இடத்தைப் பொருத்து உடைகளை மிக உயர்ந்த விலையில் வாங்க வேண்டியிருக்கிறது. லேசாக கிழிந்தது தூர எறிவதை தவிர வேறுவழியில்லை. இன்றைய தேதியில் உடைகள் யூஸ் அன்டு த்ரோவாகத்தான் உள்ளன.

புதுத்துணி அணிவதை கொண்டாட்டமாக இன்று நாம் பார்க்கவில்லை. புதுத்துணி அணிவதால் ஏற்படும் சந்தோஷம், நிறைவு எல்லாம் இன்று இல்லை ஆனால் கவுரவம் இன்னும் இருக்கிறது.

No comments: