Friday, December 2, 2016

விளையாட்டுல என்ன இருக்கு



நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டருகே இருந்த பெண்மணியின் முகம் இன்றும் நினைவிருக்கிறது. ஒடுங்கிய கன்னம், துருத்திய கண்களுடன் இருக்கும் அவரின் செய்கைகள் எப்போதும் விசித்திரமாக இருந்ததே அதற்கு காரணம் என நினைக்கிறேன். அவரின் பிள்ளைகளை வெளியே எப்போது விளையாட அனுமதிப்பதில்லை. மாலையானதும் வீட்டில் வைத்து பூட்டிவைத்துவிடுவார் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடி தன் குழந்தைகள் கெட்டுவிடும் என்பதுதான் அவர் சொல்லும் காரணம். விளையாட்டுல என்ன இருக்கு, படிப்புலதான் எல்லாம் இருக்கும் என்பார். ஆனால் எப்போதாவது அந்த குழந்தைகள் விளையாட வரும்போது அதிக விளையாட்டு தனத்துடன் நடந்துக்கொள்வதைப் பார்க்க வயதிற்குரிய புத்திசாலிதனம் இல்லாமல் இருப்பதாக தோன்றும். கால்நூற்றாண்டாக விளையாட்டை புறக்கணித்த குழந்தைகள் வளர்ந்து இப்போது இருக்கும் இன்றைய தமிழகத்து மனிதர்கள் அந்த 'புத்திசாலிதனம்' இல்லாமல் இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.

பல காலமாக நம் சமூகத்தில் விளையாட அனுமதிக்காமல் இருக்கிறோம். விளையாட்டின் மீது நமக்கிருக்கும் வெறுப்பு அளவிடமுடியாதது. கொஞ்சம் விளையாட்டு தனமாக இருக்கும் குழந்தையை கண்டு அந்த குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அடையும் பீதி கொஞ்சமல்ல. அவன்/அவள் எதிர்காலம் வறுமையில் வாடப்போவதாகவும், எந்த வேலையும் செய்ய தெரியாமல் கஷ்டப்படப்போவதாகவும் பேச்சுக்கள் எழும்.

பெரியவர்கள் சொன்ன உடனே அந்த குழந்தை தன் சுட்டிதனத்தை, விளையாடும் எண்ணத்தை விட்டுவிட்டு படிப்பையோ அல்லது பேசாமல் ஒரு இடத்தில் அமர்வதையோ செய்ய வேண்டும் என எதிரிப்பார்ப்பார்கள். அப்படி செய்யாதபோது அதற்கு சாபங்கள் வேறு இடப்படும்.

கொஞ்சம் வளர்ந்ததும், விளையாட செல்ல நினைக்கும் சிறுவன்/சிறுமி முன் அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிட வேண்டும். படிப்பை தவிர வேறு எதையும் நாம் குழந்தைகள்/சிறுவர்கள் செய்யவேண்டியதில்லை என்கிற எண்ணம் எல்லா பெரியவர்களிடமும் இருக்கிறது. கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள தொலைக்காட்சியை பார்ப்பதை அனுமதிப்பார்கள். பாடபுத்தகமல்லாத வேறு புத்தகங்கள் படிப்பது இன்றும் பெரிய குற்றாமாகவே பார்க்கப்படுகிறது.

விளையாடும் குழந்தைகள்/சிறுவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனமும், வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல உதவகூடியதும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நேர்மாறாக விளையாட்டு அதிகமானால் படிப்பில் கவனம் குறையும் என்கிற எண்ணமே நமக்கு அதிகமாக இருக்கிறது.

விளையாட்டுத்துறையில் அதிக பணம் செலவிட அரசு தயாராக இருக்கிறது. மனம், உடல், சிந்தனை போன்றவற்றை வலுப்பெற உதவக்கூடியது விளையாட்டு. இப்போது இளவயதிலேயே தோன்றிவிடும் பல்வேறு வியாதிகள் எல்லாம் விளையாட்டில் காணாமல் போகக்கூடியது. இவ்வளவு இருந்தும் நாம் சமூகம் விளையாட்டை இரண்டாம் பட்சமாக கருதுகிறது. விளையாட்டு துறையில் சாதித்த/வெற்றிப் பெற்றவர்களை எந்த வகையிலும் முன்னுதாரணமாக கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

அறிவியல், இசை, இலக்கியம், கணிதம் போல விளையாட்டும் ஒரு துறை. அதை லட்சியமாக கொள்ள நினைக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை நம் சமூகம் ஒவ்வொரு நாளும் கொன்றுகொண்டு இருக்கிறது. ஆனால் ஆசிய விளையாட்டு, ஒலிப்பில் இந்தியா பதக்கம் வெல்லாதபோது வருத்தபட்டு இளைஞர்களை திட்டுவது இதே சமூகம்தான்.
பிற்காலத்தில் விளையாட்டில் மிளிர சிறுவர் பருவம் தான் சரியான தருணம். சிறுவர் பருவத்தில் விளையாட்டை ஒதுக்கிவைக்க சொல்லிவிட்டு பெரியவர்களானது விளையாட வற்புறுத்துகிறது நம் சமூகம்.

விளையாட்டு என்று சொல்லும்போது அது முறைப்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு களமாக கிரிக்கெட், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகள் இருக்கவேண்டும் என்பது இல்லை. சாதாரணமாக கபடி, ஓடிபிடிச்சு, கல்லாமண்ணா போன்ற விளையாட்டுகளை விளையாட அவர்களை அனுமதிக்க வேண்டும். சில பள்ளிகளில் கட்டாயமாக பிடி வகுப்புகள் இருக்கின்றன. அப்படி இல்லாத சிறுவர்களை தினமும் ஒரு மணிநேரமாகவது விளையாட விடவேண்டும். படிப்பு பாரமற்ற ஒரு மணிநேரம் அவர்கள் வாழ்வில் பொன்னான நாட்களாக இருக்கட்டுமே.

No comments: