Tuesday, December 6, 2016

ஜெயலலிதா என்னும் மனுஷி

இரண்டாம் முறை ஆட்சியை பிடிப்பவர் இறந்துவிடுவார் என்கிற வாட்ஸ்ஸப் வதந்தி இன்று உண்மையாகிவிட்டது. எம்ஜியார் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததும் (நடுவில் ஒருமுறை கவர்னர் ஆட்சிவந்தது) அவர் இறந்தார். பல்வேறு உடல் பிரச்சனைகள் எம்ஜியாரைப்போலவே ஜெ.வுக்கு ஏற்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் மரணம் எதிர்பாராத மிக அசாதாரமான சூழலில் நடந்திருக்கிறது. அவருக்கென்று வாரிசுகள் யாரையும் காட்டாமல் அவர் இறந்திருக்கிறார். ஜெயலலிதா எப்படி எம்ஜியாரின் இறப்பிற்கு பின்னே உருவாகி வந்தாரோ அப்படி யாராவது உருவாகி வரவேண்டும்.

ஜெயலலிதா கட்சியை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் ஏற்பட்ட சிரமங்களை போலவே எதிர்கட்சியினரை சமாளிக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. 89ல் சின்ன கட்சியாக அவர் சட்டமன்றத்தின் உள்ளே வந்தபோதே மக்களாலும், அரசியலார்களாலும் அத்தனை வெறுப்புடன் பார்க்கப்பட்டார். சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார். முழுமையாக விரட்டப்படவேண்டும் என்கிற வெறியில் எழுந்த பல்வேறு அவதூறுகளால் தொடர்ந்து வசைப்பாடபட்டார். இந்த ஒன்றே அவரை தொடர்ந்து அரசியலில் இருக்க செய்துவிட்டது.

பெண்களுக்கு கண்ணியத்தையும் கவுரவத்தையும் அளிக்கும் தமிழகத்தின் அரசியலில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அவற்றில் எதையும் துளிக்கூட அளிக்க தயங்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்தன. கீழ்மைகளை என் அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன் என்று ஒரு முறை ஜெயகாந்தான் சொல்லியிருகிறார். கீழ்மைகளை காண்பவர்கள் சகிக்கமுடியாமல் அவர்கள் அகங்காரம்தான் முதலில் வெளிப்படுகிறது போலும். அவர் தொடர்ந்து அப்படிதான் போராடவேண்டியிருந்தது. இன்று நினைக்கும்போது அப்படி அல்லாமல் வேறுவகையில் அவரால் வாழ்ந்திருக்க முடியாது என்கிற நிலைக்குதான் வரவேண்டியிருக்கிறது. மம்தா பேனர்ஜி, சோனியா காந்தி, மாயாவதி போன்றவர்கள் இன்று இதையேதான் செய்கிறார்கள். தொலைக்காட்சியில் பேசும்போது ஒருவர் சோனியாவின் வீட்டில் இந்திராவுடன் இருக்கும் ஜெயலலிதாவின் பெரிய படம் இருக்கிறது என்றார். அரசியலில் இரு துருவங்களாக கொஞ்சமும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத இருவர் என்றால் அது ஜெவும் சோனியாவும்தான். அப்படியான சோனியாவின் வீட்டில் ஜெயலலிதாவின் படம். அந்த அளவிற்கு அவரின் ஆளுமை சோனியாவிற்கு பிடித்திருக்க வேண்டும்.

ஜெயலலிதா உண்மையில் வெற்றி பெறுவது எம்ஜியாரின் வாக்குகளால் தான். ஆனால் திமுகவின் கொடுத்த நெருக்கசியாலும் கருணாநிதியின் தொடர் அரசியலாலும் ஜெயலலிதா முன்னிலை படுத்தப்பட்டார் என்றால் மிகையல்ல. உண்மையில் தமிழக மக்களுக்கு கருணாநிதி அவர் சார்ந்த திமுகவின் மேல் இருக்கும் ஒவ்வாமை ஜெயலலிதாவை அரசியலிருந்து விலக்காமல் இருந்திருக்கிறது. ஜெயலலிதா செய்த தவறுகள் கருணாநிதிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ஆனால் திமுகவின் ஒவ்வொரு அங்கத்தினர்களும் செய்யும் தவறுகள் ஜெயலலிதாவிற்கு சாதகமாக மாறியிருப்பதுதான் ஆச்சரியம்.

சாதாரணமாக கிராமங்களின் பெண்களிடம் பேச்சுக் கொடுத்தால் அவர்கள் திமுகவினர்கள் மிக மோசமானவர்கள் என்கிற பிம்பத்தை வைத்திருக்கிறார் என்கிற உண்மை விளங்கும். இந்த பிம்பம் யாரோ உருவாக்கியதல்ல. திமுகவினரே உருவாக்கிக் கொண்டார்கள். பொதுக்கூட்டங்கள் எதிரிகளின் அந்தரங்க வாழ்க்கை என்று செய்திகளுடன் சில கற்பனைகளையும் புணைந்து ஒரு குறிப்பிட்ட சாரார்களை மகிழ்விக்க செய்தவைகள் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

தன் அரசியலை ஜெயலலிதா வெறும் எதிரிகளை சமாளிக்க மட்டுமே பயன்படுத்தவில்லை. ஆக்கபூர்வமான மற்றவர்கள் செய்ய தயங்கும் சிலவற்றை மிக துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார். 2003 வாக்கில் அரசு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த போராட்டங்களை கொஞ்சமும் பயப்படாமல் அவர்களை வேலையிலிருந்து நீக்கினார். அப்படி செய்வது எளிதான காரியமாக இன்றுவரை எந்த முதலமைச்சரும் மற்ற மாநிலங்களில் செய்ததில்லை.

காவிரி பிரச்சனையையும்,  முல்லைப்பெரியாறு பிரச்சனையை நீதிமன்றத்தில் மூலமாக முழுவதும் வெற்றிக்கொண்டார் என்பது மிக எளிதாக ஒருவர் செய்துவிடமுடியாது என்றே நினைக்கிறேன். அவர் ஆட்சியில் சாதிப்பிரச்ச்னைகள் தலைதூக்குவதில்லை என்பதை அவரின் புத்திசாலித்தனமான அரசியலே காரணம்.
அம்மா என்கிற பெயரில் பல தொலைநோக்குடைய தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் தொடர்ந்து செய்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் பல்வேறு விமர்சனங்கள் அவர்மேல் இருக்கிறது, இருந்தாலும் அவர் நேசிக்கப்பட்டார். முக்கியமான இருகாரணிகள் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒன்று, எம்ஜியாரின் மேல் உள்ள மக்களின் அன்பு, அதிமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தியிருப்பது.
இரண்டு, திமுகவின் அரசியியல். அவர்களின் மேல் மக்களுக்கு தோன்றும் ஒவ்வாமை அதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பும், ஜெயலலிதா வரவேண்டும் என்கிற நினைப்பும்.

மக்கள் நினைப்பதுபோல் அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

No comments: