Monday, January 2, 2017

விஷ்ணுபுரம் 2016 விருது விழா



விருது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் கொண்டாட்டங்களை கவனித்து வருகிறேன். எந்த அதிகார குறுக்கீடுகளும், வரம்புமீறல்களும் இல்லாமல் ஒரு விருது சின்ன கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுவதும், சந்திப்புகள் ஒரு இனிய அனுபவமாக மாறும்வகையில் நண்பர்களுக்கிடையே இணக்கமான சூழலும் அமைவதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் தூரமும், வேலையும் தடுத்தபடி இருந்தன. இந்தமுறை எனக்கு அளிக்கப்பட்ட வாசகசாலை விருது தடுத்துவிட்டது. இரண்டு நாட்கள் நடக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கு இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்வில், அதுவும் விருது அளிக்கும் நிகழ்வில், எப்படியோ கலந்துக்கொண்டுவிட்டேன்.


சனி இரவு சென்னையில் பஸ் பிடித்து ஞாயிறு காலை கோவை வந்தபோது முழுமையாக விடிந்துவிட்டிருந்தது. விஜயராகவனின் அறையில் உடைகள் மாற்றி, உணவருந்திவிட்டு வந்தபோது நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிருந்தன. சு.வேணுகோபால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார். குமுதம் வெளிநாட்டு பயணவிருது பெற்றதையும், அதை சொல்ல எழுத்தாளர் பாஸ்கர்சக்தி தன்னை காணவந்ததையும் சுவையாக சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு அவரை தஞ்சையில் வைத்து ஒரு தஞ்சை படைப்பிலக்கியவாதிகள் பற்றி பேச பார்த் கல்லூரிக்கு ஒரு மாதம் முன்புதான் வந்திருந்தார். இந்திரா பார்த்தசாரதியைப் பற்றி பேசிய அவர் தைரியமாக அவர் விரும்பும் இலக்கிய அது இல்லை என்றும் பேசிமுடித்திருந்தார். அப்போது அவரை சந்தித்து அறிமுகம் செய்திருந்தேன்.
சற்று நேரத்தில் வண்ணதாசன் கூட்டத்திற்கு வந்தார். நெடியஉருவம் கொண்டவர். முரட்டுதனமான உருவம் கொண்டிருந்தாலும் மிக மென்மையாக அழுத்தமாக பேச ஆரம்பித்தார். தனக்கு மக்களை சந்திக்க மிகவும் பிடிக்கும் என்று கூறினார். சற்று நேரத்திற்கெல்லாம் எச்.எஸ்.சிவபிரகாஷும் அவரது தோழியும் வந்தனர்.

வண்ணதாசன் பேசிமுடித்து போனபின் சிவபிரகாஷ் மேடையை எடுத்துக்கொண்டார். மிக நல்ல பேச்சாக இருந்தது. எல்லாவகை ஆக்கங்களை மொழிகளைக் கடந்து தெரிந்து வைத்திருந்தார். ஒவ்வொருவரும் கேள்விகளை கேட்க மிக சுவாரஸ்யமாகவும் மிகுந்த தன்னபிக்கையுடனும் பதிலளித்தார். அவரது தாய் மதுரை பெண்மணி ஆகவே அவருக்கு அம்மா சொன்ன சிலப்பதிகாரத்தின் மீதும் மணிமேகலைமீதும் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவைகளை அவர் சார்ந்த வீரசைவ மரபின் பிண்ணனியில் வைத்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சொல்வதுபோல சொல்லமுடிந்தது.

கடைசியாக பாவண்ணன் அவர் மொழிபெயர்த்த மதுரை காண்டம் நாடகத்தை எவ்வாறு அவர் வீட்டிற்கு சென்று அதை மொழிபெயர்க்க சிவபிரகாஷ் உதவினார் என்பதை சுவையாக எடுத்துக் கூறினார்

மதிய உணவு இடைவேளைக் குறிக்கிட்டது. முடிந்ததும் சுப்ரபாரதிமணியம், நாஞ்சில்நாடன், இரா.முருகன், தேவதேவன், பாவண்ணன் போன்றவர்கள் ஒரே மேடையில் அமர மற்றவர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். போராட்டம், நாடகம் என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நான் பாவண்ணனிடம் ரசனை மிகுந்த தமிழ்ச்சமூகம் நாடகத்துறையில் மட்டும் மேலெழ முடியாமல் போனதைப்பற்றி கேள்வியை கேட்டேன். இரண்டு மணிநேரம் ஒரு நாடகத்தை தமிழர்களால் பார்க்க முடியுமா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.

சினிமா, இலக்கியம் என்று தமிழ்ச்சமூகம் முன்னே செல்லும்போது நாடகத்தில் பின்னடைவை காண வேறுபலகாரணிகள் இருக்க முடியும் என்பது நினைப்பு. நிகழ்ச்சி முடிந்து டீ அருந்த வெளியே வந்தபோது நான், பாவண்ணன், தூயன், நிர்மால்யா, எம்.கோபாலகிருஷ்ணன் அதுகுறித்து பேசிக்கொண்டே வந்ததோம்.

விருது வழங்கும் நிகழ்வு வேறு இடத்தில் நடந்தது. மிகப்பெரிய ஹால். ஆனால் கூட்டம் நிரம்பிவழிந்தது. நின்றுகொண்டும் அமர்ந்துக் கொண்டும் மக்கள் நிகழ்வை கண்டார்கள். மிக கச்சிதமாக நிகழ்ச்சி இருந்தது. நாசர் வந்திருந்தார். அனைவரும் மேடையிலேயே அமர்ந்திருந்தார்கள். சில சம்பிரதாய பேச்சுகள் முடிந்ததும். சிவபிரகாஷ் வழங்க வண்ணதாசன் பரிசை பெற்றுக்கொண்டார். சட்டென முடிந்ததுபோல இருந்தது. ஆனால் என் பின்னால் அமர்ந்திருந்தவர் கண்கள் கலங்கிய துடைத்து கொண்டார். மனிதர்கள் பலகீனமானவர்கள் என்று தோன்றியது. சிவபிரகாஷ், ஜெயமோகன், இரா.முருகன், நாசர், சூ.சிவராமன் பேசியபோதும் எனக்கு எதுவும் தோன்றவில்லை. வண்ணதாசன் பேசியபோது நான் கண்கலங்கினேன். எஸ். சொல்வராஜ் என்பவர் எழுதிய கடிதத்தை குறித்து அவர் பேசும்போது கண்கள் கலங்கி கண்ணீர் வருவதை என்னால் நிறுத்த முடியவில்லை. மனிதன் பலகீனமானவன் தான். என்னை தொட நான் வேண்டும் என்பதில்லை என் பாத்திரத்தை தொட்டலே என்னை தொட்டதுபோலத்தான் என்றார். உணர்ச்சிகள் பொங்கிவரும் வாழ்வை மனிதர்கள் வாழ விரும்புகிறார்கள். ஆனால் நேரம்தான் அதை அளிக்க மறுக்கிறது. நடைமுறை வாழ்க்கையும், உணர்ச்சிகளை அடக்க பழவிட்டபின்னும் எங்கே நமக்கு நேரம் இருக்க போகிறது. முழுமையாக நம்மை கரைத்துக்கொள்ள இலக்கியம் தவிர இந்தமாதிரியான சந்திப்புகள்தாம் நமக்கு அளிக்கமுடியும்.
இரவு முழுவதும் தூங்காமல் ரயிலில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டே வந்தேன். தூக்கபிடிக்க வெகுநேரமானது. காலையில் தூங்க முடிந்தது. இறங்கவேண்டிய இடத்தை விட்டுவிட்டு நீடாமங்கலத்தில் கண்விழிந்த்து அவசரமாக இறங்கினேன். விடுவந்தபோது ஒன்பதரை ஆகியிருந்தது. அப்போதும் தொடுகையை உணர்ந்தபடியிருந்தேன்.

No comments: