Tuesday, January 24, 2017

சென்னை புத்தகக் கண்காட்சி 2017



ஒரு சம்பிரதாய நிகழ்வாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறிவிட்டது. புத்தக வெளியீடு, புத்தக கலந்துரையாடல், புகைப்படம் எடுத்தல் என்று நிகழ்வுகள், மனிதர்கள் மாறினாலும், மாறுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வெளியீடுகளில் பெரிய சுணக்கம் இருந்தது. புனைவுகள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வெளியிட மறுத்த பதிப்பகங்கள் அதிகம். சில ஆண்டுகளாக பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று புத்தகங்களை வெளியிட பதிப்பகங்கள் போட்டிபோடும் நிலை வந்திருக்கிறது. புனைவுகளில் கவிதையை போலவே சிறுகதைகள், நாவல்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மற்ற ஆண்டுகளைவிட 2016-17ல் வெளியான சிறுகதை, நாவல்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன



குமுதம், விகடன், மணிமேகலை போன்ற பதிப்பகங்கள் ஒருபக்கமும், ஆன்மீகம், மருத்துவம், குழந்தைகள், கல்வி சார்ந்து வெளியிடும் பதிப்பகங்கள் ஒரு பக்கம் தீவிரமாக புத்தகங்கள் பெரியளவில் வெளியிடுவது எல்லா ஆண்டு போல இந்தாண்டும் நடந்தது. அவர்களின் முக்கியமான இலக்கு அபுனைவுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான். தீவிர இலக்கிய பதிப்பகங்கள் மற்றொரு பக்கம் பல்வேறு வகை புனைவுகளை, மொழிபெயர்ப்பு புனைவுகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டுகின்றன.

இந்த ஆண்டு வெளியான புத்தகங்கள் என்பது 2016 மத்தியிலும், கடைசியிலும், பின் 2017 புத்தகக் காட்சிவரை வெளியானவைகளை கணக்கில் கொள்ளவேண்டும். யாவரும், வாசகசாலை, ஜீவா, மாற்று என்று புதிய பதிப்பகங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் புதிய முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான திட்டமிடல்கள் இல்லாமல் பிழைகளுடன் அவசரமாக பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களாக அவற்றில் சில இருந்தாலும் நேர்த்தியான வடிவமைப்பு ஆச்சரியத்தை தூண்டிவிடுகின்றன. யாவரும் பதிப்பகத்தில் இந்தாண்டு வெளியான துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை (பாலசுப்ரமணியம் பொ), ட்ரங்க் பெட்டிக் கதைகள் (ஜீவ கரிகாலன்), மோகினி (.கீரா), குலேபகாவலி (ஆத்மார்த்தி), இருமுனை (தூயன்), சாத்தானின் சதை துணுக்கு (கிருஷ்ணமூர்த்தி) போன்ற தொகுப்புகள் முக்கியமானவைகள். வாசகசாலை பதிப்பத்தின் தஞ்சை பிரகாஷின் மிஷன் தெரு குறுநாவலும், ஜீவா படைப்புலகத்தின் எனும்போதும் உனக்கு நன்றி (விஷால் ராஜா) என்கிற சிறுகதை தொகுப்பும் துவக்கமாக இருக்கின்றன. மாற்று பதிப்பகத்தின் புதிய சில புத்தகங்கள் வந்திருகின்றன.

கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, டிஸ்கவரி புக் பேலஸ், பதிப்பகங்கள் எப்போதும்போல இந்தாண்டும் புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செய்திருக்கிறார்கள்.
டிஸ்கவரியின் முஸ்தபாவைக் சுட்டுக் கொன்ற ஓரிரவு (அகரமுதல்வன்), சாமத்தில் முனகும் கதவு (கே.ஜே.அசோக்குமார்), ஒற்றைப் பல் (கரன் கார்க்கி), முயல் தோப்பு (பாஸ்கர் சக்தி) போன்ற சிறுகதை தொகுப்புகளும், நாவல்களில் கரமுண்டார் வூடு (தஞ்சை ப்ரகாஷ்), சிறார் நாவல்களில் உலகின் மிகச்சிறிய தவளை (எஸ்.ரா) மீசையில்லாத ஆப்பிள் (எஸ்.ரா) போன்றவைகள் அதிகம் பேசப்படுகின்றன.

கிழக்கு பதிப்பகம் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிடுவதில்லை என்பதை தளர்த்தி அனைத்தும் வெளியிட முன்வந்திருக்கிறார்கள். அதில் போகனின் போகப் புத்தகம் முக்கியமானது. ஜெயமோகனின் மகாபாரத வரிசை நூல்களான வெண்முரசு நூல்கள் அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தில் தொடர்ந்து வெளியாகின்றன. உயிர்மையின் அஜ்வா (சரவணன் சந்திரன்), நீருக்கடியில் சில குரல்கள் (பிரபு காளிதாஸ்) அதிக கவனம் பெற்றிருக்கின்றன.

காலச்சுவடில் விடம்பனம் (சீனிவாசன் நடராஜன்), கறுப்பு வெள்ளை கடவுள் (தேவிபாரதி), டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் (கணேஷ் வெங்கட்ராமன்), மொழிபெயர்ப்பில் புரட்சியாளன் (அல்பொ கமுய்), ஆய்வு நூலில் அ.கா.பெருமாளின் முதலியார் ஓலைகள் போன்ற ஆக்கங்கள் முக்கியமானவைகள். சிறுகதைகளில் பெருமாள் முருகனின் முழுதொகுப்பும் அம்பையின் முழுதொகுப்பும் காலச்சுவட்டில் வெளியாகியிருக்கின்றன.

க்ரியாவின் நறுமணம் (இமையம்) காற்று, மணல், நட்சத்திரங்கள் (செந்த் எச்சுபெரி) முக்கிய ஆக்கங்கள். அடையாளம் வெளியீட்டில் சோ.தர்மனின் சூல் முக்கிய ஆக்கம் வெளியாகியிருக்கிறது. மாற்று வெளியீட்டில் 1084ன் அம்மா (மகாஸ்வேதா தேவி), பதேர் பாஞ்சாலி (விபூதிபூசன்) முக்கிய ஆக்கங்கள். பொன்னுலகத்தின் முகிலினி (இரா.முருகவேள்), தமிழினியின் அழகிய மரம் (தரம்பால்), நியூ செஞ்சுரி புக் ஹவுசின் சோமநாதர் (ரொமிலா தாப்பர்) போன்றவைகள் கவனிக்க வைத்த ஆக்கங்கள். வண்ணதாசனின் சாகித்ய அகாடமி விருது சந்தியா பதிப்பகத்தில் இருக்கும் அவரது படைப்புகளுக்கு பெரிய கவனம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக அவரது ஒரு சிறு இசை.

வெளி அரங்குகளில் முன்பே புத்தகங்கள் வெளியிடப்பட்டாலும் புத்தகக் கண்காட்சியில் புதியவைகளை மீண்டும் ஒருமுறை சில ஆளுமைகளைக் கொண்டு வெளியிடுவது மரபாகிவிட்டது. கண்காட்சியில் அது முக்கியமாக கவனிக்கப்படும் என்பதும் ஒரு காரணம். இந்தாண்டு சிறுகதையின் நூற்றாண்டு என்பதால் டிஸ்கவரியின் வேடியப்பன் வருகைதரும் சிறுகதையாசிரியர்களை வெள்ளை போர்டில் கையெழுத்திடும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். அதேப்போல் தீபச்செல்வனின் பேரினவாதத்தீ என்ற புத்தகத்தை நாஞ்சில் நாடன் வெளியிட அகரமுதல்வன் பெற்றுக்கொள்ளும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன். பெருமாள் முருகனுடன் ஆ.இரா.வெங்கடாசலபதி மீண்டும் எழுதும் சூழல் குறித்த அதிமுக்கியமான சுவாரஸ்யமான விவாதமும் நடந்தது. இம்மாதிரியான நிகழ்வுகள் முகநூலில் பகிரப்பட்டு கவனம் பெறுவது இயல்பாக நடந்துவிடுகிறது.

தி இந்து தமிழ் பதிப்பில் ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா 2017 என்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு அதில் புத்தகங்களின் பரிந்துரைகள், புத்தகங்கள் குறித்த எழுத்தாளர்கள், வாசகர்களின் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. சமீபத்திய முக்கிய நகர்வு. வாசிப்பு சூழல் முக்கியம் என அறிந்திருக்கும் சமூக அடையாளங்கள்.

ஐம்பது சதவிததிற்கும் மேற்பட்டோர் வெறும் கேளிக்கைக்காக வருகிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனாலும் பதினான்கு நாட்கள் நடக்கும் நிகழ்வுகள் படைப்பாளிகளுக்கும், வாசகர்களும் அந்த ஆண்டு முழுவதும் உற்சாகத்தை அளிக்கும் நிகழ்வுகளாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில் சென்னை புத்தகக் கண்காட்சி எப்போது நிறைவையே அளிக்கிறது.

(இலங்கை தினகரன் இதழில் 22-01-17 அன்று பிரதிபிம்பம் பகுதியில் வெளியான கட்டுரை)

No comments: