Saturday, January 14, 2017

வாசிப்புசூழலும் தேவையும்



வாசிப்பு தனிநபர்களின் அடையாளம் என்று உணர கொஞ்சகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மிககுறைவான சதவிகிதத்தினர் என்றாலும் இன்று வாசிப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகத்தை பரிசளிப்பது இன்று ஒவ்வொருவரிடையே தொடங்கியிருக்கிறது. புத்தகம் குறித்து பேசும் பேச்சரங்கங்கள், கூடல்கள் எல்லா ஊர்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன. வயதானவர்கள் பழந்தமிழ், பக்தி இலக்கியங்களை கூடி பேசுவது எல்லா ஊர்களிலும் இருப்பதைபோல நவீன தமிழ் இலக்கியத்திற்கும் கவிதை, சிறுகதை, நாவல்கள் குறித்து பேசுபவர்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது முகநூல், வாட்ஸப் மூலமாக அறியமுடிகிறது. அதேபோல இந்திய/தமிழக வரலாறு குறித்த பார்வைகள் விரிவடைந்திருக்கின்றன. கோயில் கல்வெட்டுகள், குகைப்பயணங்கள் போன்றவைகளை எல்லா தரப்பினருமே முன்னெடுத்து செல்கிறார்கள்.


கூர்ந்து கவனித்தால் இவையெல்லாம் வீட்டிற்கு வெளியே பொதுஇடங்களில் நடக்கக்கூடியவைகள். வீட்டில் அதுமாதிரியான மாற்றங்கள் நடக்கின்றவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கும். பெரும்தொகையினர் இன்னும் வாசிப்பு பழக்கத்திற்கு வராமல்தான் இருக்கிறார்கள். ஒன்றிரண்டைதவிர வாசிக்கும் சூழல் உடைய வீடுகள் நம் தெருவில் காணமுடியவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் முன்னறையின் முகப்பில் வீட்டின் மிக முக்கிய பொருள்போல பொம்மைகள், அழகுப் பொருட்கள் சூழ்ந்து இருக்க நடுவில் தொலைக்காட்சி பெட்டி தான் இருக்கும்.

சில வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அந்தஸ்தை சொல்ல, பெரியவர்களுக்கு என்று முன்னறையில் பெரிய தொலைக்காட்சி பெட்டி இருக்கும். படுக்கையறையில் ஒரு தொலைக்காட்சி, பின் சிறுவர்கள் கார்ட்டூன் பார்க்கவென்று தனியான ஒன்று இருக்கும். இலவசமாக கிடைத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டி எல்லோர் வீடுகளிலும் உண்டு. ஒரு அறை மட்டும் கொண்ட வீடுகளிலும் கண்டிப்பாக தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது.

சினிமாவையும் தொலைக்காட்சியையும் வாழ்வின் அங்கங்களாக ஏற்றுக்கொண்டிருக்கும் சமூகத்திற்கு புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை. பலவீடுகளில் வேறு புத்தகங்களை படிக்கும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்க வைப்பார்கள். வீட்டில் நாளெல்லாம் ஓடும் தொலைக்காட்சியின் முன்னால் ஒரு குழந்தைக்கு புத்தகங்கள் மேல் ஆசை எப்படி கொள்ள முடியும்.

ஆனாலும் இன்று புத்தக வாசிப்பு குறித்து மக்களிடையே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏதாவது ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என உணர்ந்திருக்கிறார்கள். வாங்கும் திறம் அதிகரித்திருப்பதும் ஒரு காரணம்.

ஆகவே வீட்டின் மாற்றங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசிக்கலாம். வீட்டில் வாசிக்கவென்று தனியறை இருக்கவேண்டும். குடும்பத்தினர் அங்கு அமர்ந்து வாசிக்கவும், புத்தகங்களை வைக்கவும் ஒரு நூலகம்போல் அதை மாற் றிக்கொள்ளலாம். தொலைக்காட்சி அந்த அறையில் இல்லாமல் இருப்பது நல்லது.
மேலைநாடுகளில் சிறுவர் இலக்கியம், பதின்பருவ இலக்கியம் என்கிற பிரிவுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இது எனக்கு பிடித்த புத்தகம் என்று ஒன்று இருக்கும். வயதிற்கு தகுந்த புத்தகங்களை வாங்கி கொடுக்கும்போது அவர்களுக்கு தனக்கு பிடித்த புத்தகம் என்று ஒன்று உருவாக்கியிருப்பார்கள்.

வாசித்தவைகளை குறித்து குடும்ப உறுப்பினர்கள் வாரம் ஒருமுறை ஒரு உரையாடலை உருவாக்கலாம். தனக்குப் பிடித்த புத்தகங்களை குறித்து சிறுவர்கள் பெரியவர்கள் பேசும்போது வாசிப்பு பற்றிய புரிதல்கள் அவர்களுக்கு உருவாகும்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒருவருக்கொருவர் புத்தகங்களை பரிசாக பரிமாறிக்கொள்ளலாம். சிறுவர்கள்/சிறுமிகளின் பிறந்தநாளில் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன. அவற்றில் புத்தகங்களும் இருக்கலாம். பிறந்தநாட்களுடன் மற்ற பண்டிகைகளிலும் புத்தகங்களை வாங்கி பரிசளிக்கலாம். புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் வாசிப்பின் மகிழ்ச்சியும் கூடும்.

பன்னிரெண்டாம் வகுப்புவரை வேறு எதையும் படிக்காமல் வளர்ந்த ஒரு சமூகம், திடீரென இணையம் மூலம் புத்தகங்களும், கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பார்க்கும்போது மலைத்துப் போகிறார்கள். இதைதவிர்க்க மிக இளம் வயதில் வாசிப்பை தொடங்கிவிடுவதே நல்லது. எதைப் படிப்பது எதை தவிர்க்க வேண்டும் என்கிற புரிதல் இயல்பாக வந்துவிடும். எந்த ஜானர் புத்தகங்கள் தனக்கு சரியானது என்று கணிக்க இளம்வயது வாசிப்புதான் பயன்படும்.

பாடப்புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை சற்று விலக்கி நூலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் என்று அழைத்துச் செல்வது மிக அவசியம். புத்தகங்களை அவர்களே தேர்வுசெய்ய அது பயன்படும்.

பாடநூல்கள் ஒரு பொதுத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டவைகள். சில அடிப்படைகளை புரிந்துக் கொள்வதற்காக அப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் ஒரளவிற்கு இளம்வாசகர்களை கவரக்கூடியவைகள். அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களுக்கு அதில் தெரிந்துக்கொள்ள எதுவும் இல்லை. மதிப்பெண்கள் வாங்க பயன்படலாம். தொடர் வாசிப்பின் மூலம் மட்டுமே ‘நிஜமான’ அறிவைப் பெறமுடியும். பாடப்புத்தகங்களைவிட இன்றைய மிக முக்கியமான தேவை வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதுதான்.

No comments: