Thursday, January 19, 2017

படிப்பு விஷயம்



புதிய பள்ளிக்கூடம் எங்கள் ஊரில் திறக்க இருக்கிறார்கள். அது சாதாரண பள்ளி இல்லை. சென்னையில் இருக்கும் மிகப் பிரபல்யமான பண்ணாட்டு பள்ளி. அதற்கான பிரம்மாண்ட விளம்பரங்கள், பதாகைகள் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தினசரிகளின் நடுவில் பளபளக்கும் விளம்பர காகிதம் சொருகப்பட்டு வந்தன. உடனே மக்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது கண்கூடாக தெரிந்தது. என் மகன் படிக்கும் பள்ளியில் படிக்கும் மகனின் தந்தை என்னிடம் 'கொஞ்சம் செலவு ஆனாலும் அந்த பள்ளிகூடத்துல சேர்த்துலாம்னு இருக்கேங்க' என்றார். நூலகத்தில் இருந்த நூலகர் 'எவ்வளவு செலவாகும்' என்றார். பணம் கொடுத்து மிலிடரி பள்ளியில் சேர்க்க நினைத்திருப்பதும், அது நடக்காவிட்டால் 6வது படிக்கும் மகளை இந்த பள்ளியில் சேர்க்க இருப்பதாக சொன்னார். தாமதித்தால் சீட் கிடைக்காது என்று கவலை கொண்டார். ‘படிப்பு விஷயத்துல அஜாக்கிரதையாக இருக்க கூடாது பாருங்க’ என்று உறுதியாக சொன்னார்.

ஒரு காலத்தில் அரசாங்கத்திற்கு பள்ளியில் பிள்ளைகளை அழைக்க படாதபாடு படவேண்டியிருந்தது. இன்று பள்ளிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பள்ளிக்கூடம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக நினைத்துக் கொள்கிறார்கள் இந்த மக்கள். கல்வி திணிக்ககூடியதல்ல என்று எப்படி புரியவைப்பது. கல்வியை வருங்காலத்தில் வரும் வேலைவாய்ப்புகளுடன் பிணைத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கிய காரணம். நான் முன்பு வேலை செய்த இடத்தில் என்னுடன் வேலை செய்தவர்கள் மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்ஸி படித்தவர்கள். நான் அரசுபள்ளியில் பன்னிரெண்டு வரை தமிழில் படித்தவன். வேலையில் அவர்கள் என்னைவிட சிறந்து விளங்கியவர்களாக சொல்ல முடியவில்லை.

ஒருவரின் ஆளுமை, தனித்திறமைகளை பள்ளி எந்தவகையிலும் தீர்மானிக்க முடியாது. வீட்டுச்சூழல், கல்வி சார்ந்த தகவல்கள், அத்தோடு இயற்கையாகவே இருக்கும் தனியியல்புகள் எல்லாமும் சேர்ந்தே குழந்தைகளின் ஆளுமைகளை தீர்மானிக்கின்றன.

கற்றல் இயற்கையாக நடக்க வேண்டும். அத்தோடு கற்றல் ஒரு பயிற்சியல்ல. இயல்பாக நம்முடன் சேர்ந்து கொள்ளகூடியது. மூர்க்கமாக இந்த பள்ளிகளால் செய்யப்படும் திணிப்புகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தகூடியது. என் கல்லூரி காலத்தில் என்னுடன் படித்த மாணவனுக்கு திடீரென மூளை பிசகிவிட்டது. தனக்கு தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். இரவில் நடக்க ஆரம்பித்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் கொடுத்த கெடுபிடியில் அவனுக்கு இப்படி ஆகியது. ஆனால் நிர்வாகம் எந்தவகையில் பொறுப்பேற்கவில்லை. நாங்கள் எங்கள் கடமையை செய்தோம் என்றது. பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம் கல்லூரி நிர்வாகத்திற்குபோய் நிர்வாகம் ஆசிரியர்களுக்கு கொடுத்து கடைசியில் மாணவனுக்கு வந்து சேர்ந்தது, பைத்தியம் ஆனார். ஒருவர் தானே என்று சும்மா இருக்கமுடியாது. கிட்டதட்ட அனைவருமே சற்று பிசகிதான் இருக்கிறோம்.

மக்களிடையே எதிர்காலம் குறித்த பதற்றம் இருந்துக் கொண்டேயிருக்கிறது. மகன்/மகள் படிக்காமல் போய்விட்டால் வேலை கிடைக்காமல் போய்விடும். சமூகத்தில் அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என்று ஓயாமல் புலம்புபவர்களாக இருக்கிறார்கள். கூடப்படிக்கும் சகதோழன்/தோழி அதிக மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் தங்கள் குழந்தைகளை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள் அல்லது கறித்துக் கொட்டுகிறார்கள். பள்ளி நிர்வாகமும் விடுவதில்லை. உங்கள் பிள்ளை இப்படியே போனால் அமெரிக்கா போகாமல் இந்தியாவில் இருந்தே சாவான் என்று பயமுறுத்துகிறார்கள். சாபத்தை பெற்றதுபோல் துடித்துப் போகிறார்கள் பெற்றோர்கள்.

இன்றைய தேதியில் எந்தளவிற்கும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். குழந்தைகள் விரும்புகிறார்கள், இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் என்னென்ன வகுப்புகள் உள்ளன என்று தேடி சென்று சேர்த்துவிடுகிறார்கள். பள்ளியில் செஸ், கராத்தே, இருந்தால் வெளியே அபாகஸ் சேர்க்கிறார்கள். மூன்றும் இருந்தால் ஏதாவது இசைப்பள்ளியில் சேர்க்கிறார்கள். போதாதற்கு டியூசன் வேறு. ஒரு குழந்தையின் அளவு என்ன என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள தயாராக இல்லை. மற்ற குழந்தை படிக்கிறதே? ஏன் என் குழந்தை படிக்க முடியாது? இப்படியே எதையும் செய்ய துணிகிறார்கள்.

கதைப் புத்தகங்களை படித்தால் சீறிவிழும் பெற்றோர்களை எப்படி புரிவைக்க முடியும் இந்த பள்ளிகளில் ஒன்று இல்லை, குழந்தைகள் கற்பனையும், இசைவும் மட்டுமே எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும் என்று. இன்னும் ஒரு தலைமுறை ஆகும் இந்த சமூகம் தன்னை கல்வி என்னும் வெற்று கெளரவத்திலிருந்து தன்னை விலகிக் கொள்ள. அதுவரை படிப்பு விஷயம் மக்களிடையே பூதாகரமாக இருக்கும்.

No comments: