Friday, February 10, 2017

நெடுங்சாலைகளும் நெடும்பாலங்களும்



சொலவடை காலத்திற்கு ஏற்றாற்போலதான் வரும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுபோல பாலம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒரு சொலவடை கூடியவிரைவில் உருவாகிவிடும். பாலம் இல்லாத ஊர் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது. எங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்னால் பட்டுக்கோட்டைக்கும் போகும் வழியில் உள்ள ரயில்வே கிராசிங்கிற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது. சாலையை முழுவதும் அடைத்து பலமான பாலமாக அமைந்திருந்தது. வாகனங்கள் எந்த சிரமமும் இன்றி செல்லமுடிந்தது. அடிக்கடி ரயில் வருவதால் காத்திருக்கும் நேரம் இல்லாமல் பயணநேரமும் வெகுவாக குறைந்தது. நன்மைகள் ஏற்பட்டது போல் வேறு சில மாற்றங்களும் உருவாயின. 

ரெயில் டிராக்கிற்கு அருகில் இருந்த கடைகள் வியாபாரம் இல்லை. முழுவதும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த டிராக்கிற்க்கு அருகில் இருந்த சாலைகளில் இருந்த மக்களுக்கு மட்டுமே கடைகள் பயன்பட்டன. கொஞ்ச நாளில் பாலத்திற்கு கீழுருந்த பகுதிக்கு மனிதர்கள் செல்லும் வழக்கம் இல்லாமல் போனது. டிராக்கிற்கு இருபக்கதில் இருந்த சொற்ப மனிதர்களின் தொடர்பு இல்லாமலே போனது. சில ஆண்டுகளிலேயே அந்த சின்ன சுற்றுவட்டாரம் ஒரு கிராமம்போல் ஆகிவிட்டது. கிராமத்தின் தோன்றம்போல வந்துவிட்டதை கவனிக்கமுடிந்தது. சில ஆண்டுகள் கழித்து அந்த பகுதிக்கு செல்லும்போது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. சிறு நகரமான தஞ்சாவூரில்தான் இந்த நிலைமை. இதுமாதிரி எந்தெந்த நகரங்களில் பெரிய பாலங்களால் மக்கள் தொடர்பற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகள் உருவாகிவிடுகின்றன.

இதேபோல நெடுங்சாலைகளால் வேறு மாதிரியான பகுதிகள் உருவாகின்றன. முக்கியமாக ஒரு சிறுநகரத்தின் நடுவில் போக்குவரத்திற்காக 100 அடி சாலைகள் உருவாகும்போது அந்த பகுதியையே இரண்டாக பிரித்துவிடுகிறது. எளிதாக மக்கள் குறுக்கே கடந்து வந்த ஒரு காலம் முடிந்து ஒரு ஊரையே இரண்டாக பிரித்துவிடுகிறது. இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதும் அங்கிருப்பவர்கள் இங்கு வருவதும் என இருந்த இயல்பான வாழ்க்கை மாறி தீவுகளாக ஆனதுபோல சாலையின் இருபகுதியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் காணமுடிதவர்களாக ஆகிவிட்டார்கள். மக்கள் தேவைகளுக்கு புதிய கடைகள் உருவாக வேண்டியிருக்கிறது. மக்கள் சாலையை குறுக்காக கடப்பது ஒரு நகரத்திலுருந்து மற்றொரு நகரத்திற்கு செல்வதுபோலதான் இருக்கிறார்கள்.
 
கைவிடப்பட்ட சிறுநகரங்களும் உண்டு. சமீபகாலத்தில் மிக அதிகளவில் நடந்திருக்கிறது. புறவழிச்சாலைகள் உருவானதும். அதுவரை நகரத்திற்குள் வந்துக் கொண்டிருந்த பேருந்துகளும், கார்களும் நின்றுபோக சிறுநகரங்கள் சட்டென தங்கள் சோபையை இழந்துவிடுகின்றன. அதுவரை கலகலப்புடன் இருந்த சாலை பராமரிப்புகள் போய் மணல் மண்டிய குண்டும் குழியும் உடைய சாலைகளாக மாறிவிடுகின்றன.

பெரிய பாலங்கள் உருவானபின் சாலையை ஒட்டிய கடைகள் எதிரில் இருக்கும் பாலத்தின் சுவரை பார்த்தபடி அமைந்துவிடுகின்றன. பெரிய தடுப்பு அரணாக பால சுவர் முன்னே நிற்பதை பார்க்க சிறைபோலதான் இருக்கிறது. பாலம் உருவாகிவிடுவதால் பழைய சாலை சின்னதாக ஆகிவிடும். ஆகவே வண்டிகளை அந்த சாலையில் எங்கும் நிறுத்த முடியாது. பார்கிங் வசதி இல்லாத கடை, ஓட்டல் போன்றவைகளின் முன்னால் வண்டிகள் நிறுத்தமுடிவதில்லை. ஆகவே வியாபாரமும் முன்பைவிட பாதிப்பையே சந்திக்கும்.

பாலம் நெடுங்சாலைகளால் குறுக்க கடக்க நாம் இருசக்கர வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும். பெரிய சாலைகளால் எரிபொருள் மிச்சமானால் இந்த சாலை கடப்பதினால் மீண்டும் நாம் எரிபொருட்களை செலவழிக்க வேண்டியிருக்கிறது.

பாலங்கள் நெடுங்சாலைகளால் மனித தொடர்புகள் குறைகின்றன அதேவேளையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கின்றன. ஆமாம் சரியாகத்தான் சொன்னார்கள்: இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களின் தொடர்புகள் குறையும் என்று.

No comments: