Monday, June 26, 2017

கும்பல் மனநிலை



தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறி பேருந்தில் பயணம் செய்யும் ஒருவரை தாக்கும் வழக்கம் முன்பு சென்னையில் இருந்தது. அந்த வழியாக நடந்து செல்பவர்கூட அவர் மேல் தாக்குதல் தொடுக்கலாம். அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று யாரும் கேட்கப் போவதில்லை. சரியான மனிதரைதான் அடிக்கிறோமா என்கிற பிரக்ஞையும் அவர்களிடம் இருக்காது. கும்பல் மனநிலையோடு தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒருவர் செய்யும் செயல். அதன் பின்னணியில் இருக்கும் கூரூர மனநிலையைப் பற்றி ஒருவருக்கு அக்கறையில்லை என்பதே இது உணர்த்துகிறது.

சிறுகதை கூட்டத்தை ஒழுங்கு செய்யும் ஒருங்கிணைப்பாளராகிய நான் கூட்டத்திற்கென்று உருவாக்கி வைத்திருக்கும் நெறிமுறைகளை நடைமுறைப் படுத்துவது தவறு என்றும், அதற்கு வன்முறையாளர் என்று ஏசுவதையும் எப்படி புரிந்துக் கொள்வது எனத் தெரியவில்லை.

முக்கியமான சிறுகதைகளைப் பற்றி மட்டும் பேசுவது என்றும், கவிதை, கட்டுரை, நாவல் போன்ற பிற வகைமைகளை தவிர்ப்பது என்றும் ஆரம்பத்திலேயே திரு ஹரணியும் நானும் பேசி முடிவெடுக்கப்பட்டது. சிறுகதைகளையும் அதில் முக்கியமானவைகளை ஒவ்வொரு மாதமும் முன்நிறுத்துவதும் தான் நோக்கம். முதல் கூட்டத்திலேயே இது நடந்துவிடமுடியாது. ஒரு பத்து கூட்டமாவது முடிந்த பின்னே கதை குறித்த தேய்வழக்கு பேச்சுகள் ஒழிந்து ஒரு காத்திரமான விமர்சனங்களும் மதிப்பீடுகளும் கலந்துக் கொள்பவர்களிடையே வெளிப்படும். நல்ல சிறுகதைகளை இனங்கானவும் அது குறித்து உடனே இணைய தளங்கள் மூலமாக ஒரு உரையாடலை உருவாக்கவும் முடியும் என்கிற நினைப்போடுதான் இப்படி ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட தயக்கங்கள் விலகி ஒரு நிலைக்கு வரும் சமயத்தில் சிறுகதை விமர்சனங்கள் தவிர்த்து வேறு தீவிரமான சர்ச்சை/அவதூறுகளைப் பற்றி பேசஆரம்பிப்பது நாம் நினைத்திருக்கும் செயலுக்கு எதிரானதாக இருக்கும் என நினைத்தேன். ஆகவே புலியூர் முருகேசன் பேசும் போது அது வேண்டாம் என்றென். அதை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தினார். நான் ஏற்றுக்கொண்டு பேசியபின்னும் தொடர்ந்து அதையே பேச வேண்டும் என கட்டாயப்படுத்தியது எந்த வகையில் நியாயமாகும் என தெரியவில்லை.

திரு. நா.விச்வநாதன் பேசியபோது தடுக்காமல் நான் பேசும்போது தடுப்பது ஏன் என்கிற கேள்வி அவரிடமிருந்தது. முருகேச பாண்டியனின் பேட்டியில் இருந்த தமிழ் எழுத்தாளர்கள் மீதான காட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நா.வி. கூறிவிட்டு கதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். (அந்த கதையும் பேட்டியும் ஒரே இதழில் வந்ததால். அதுகூட புலியூருக்கு எதிராக அல்ல, சாதகமாகவே சொல்லியிருந்தார்.) வந்திருந்தவர்கள் திரு ஹரணி, நா.வி உட்பட அனைவரும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்றும் நீங்கள் பேசியது சரிஎன்றே கூறினார்கள்.

ஆனால் புலியூர் முருகேசன் நான் லக்ஷ்மி மணிவண்ணனையும் ஜெயமோகனையும் தற்காப்பதாகவும் எழுதுவது எதன் அடிப்படை என்று விளங்கிக் கொள்ளமுடியவில்லை. இதை ஒரு உத்தியாக பயன்படுத்தி கூட்டத்தில் உள்ளவர்களை சிறுமை படுத்தப்படுதலை எப்படி ஏற்றுக் கொள்வது.

ஒரு கூட்டத்தை இப்படிதான் நடத்த வேண்டும் மற்றவர்கள் கட்டாயப்படுத்துவது ஒருவரின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இதில் உள்ள எதாவது ஒரு வரியை எடுத்து மடக்க நினைப்பவர்களை நான் என்ன சொல்லமுடியும். ஒவ்வொரு நாணயத்திற்கு இருபக்கங்கள் உண்டு. மற்றொரு நியாயத்தையும் புரிந்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடலாம் அதற்கு மேல் என்ன செய்யமுடியும்.
 
ஆரம்பத்தில் நான் சொன்ன கும்பல் மனநிலை இலக்கியத்திலும் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. நேரே பேசும்போது சிரித்து பேசும் நண்பர்கள் தங்களை அறப்போராளியாக காட்ட கீழிறங்கி மற்றவனை மிதிக்கவேண்டியிருக்கிறது, பரிதாபம். நீ எழுதாமல் பேனாவை மூடிவை என்றும் கூட்டத்தை நடத்தாமல் டிவியைப் பார் என்றும் சொல்லும் அவர் நண்பர்களிடம் வேறு எதைச் சொல்லி புரியவைக்க முடியும். அது அவரவர் கைமண் அளவு.

No comments: