Thursday, June 29, 2017

வாசிப்பை நேசிக்கும் சமூகம்



எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கிடையே பேசிக் கொள்கிறார்கள். எது சிறந்த தொடர், அதில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி இயங்குகிறார்கள், அவர்களின் பாத்திர வடிவமைப்பைப் பற்றி, அவர்களின் குணநலன்களைப் பற்றி, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை தவிர்த்து, நாளில் ஒரு சில நிமிடங்களேனும் பேசிக் கொள்கிறார்கள்.
குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல ஆரோக்கிய உரையாடலை உருவாக்குகிறது என்றுகூட சொல்லலாம். ஆனால் இதேவகையான உரையாடல்களை ஒரு புத்தகம் குறித்து அல்லது ஒரு முக்கிய புத்தகத்தின் மதிப்பு குறித்தும் நாம் விவாதிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த அளவிற்கு நாம் தொலைக்காட்சியை குறித்து பேசுகிறோமோ அந்த அளவிற்குகூட வேண்டியதில்லை, புத்தகம் குறித்து ஒரு சின்ன பேச்சுகூட நாம் பேசுவதில்லை. இந்த பேச்சுகள் முன்பு வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் வெளிவந்த காலங்களில் இருந்தன. இப்போது அந்த இடம் தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டது.

வாசிப்பு என்கிற பழக்கம் புத்தகம் குறித்த பேச்சுக்களால் மட்டுமே சாத்தியம் ஆகும். என் பெரியப்பா வீட்டில் புத்தகங்கள் குறித்து பேச்சுகள் தினம் இருக்கும். வார இதழ்கள், தினசரி, நேரடி புத்தகங்கள் என்று எதுவேண்டுமானாலும் இருக்கும். இன்று குழந்தைகள் பேசுவது என்று ஆகிவிட்டது. எல்லா குழந்தைகளும் மொபைலில் விளையாட விரும்புகிறார்கள்.

பள்ளிகளிலிருந்தே வாசிப்பு பழக்கம் ஏற்படவேண்டும். வயதிற்கேற்ற அவர்களின் விருப்பபடி புத்தங்கள் வாங்குவதும் அதை மற்ற அதே வயதினரும், அவர்களைவிட வயது முதிர்ந்தவர்களும் அந்த புத்தகங்களைப் பற்றி விவாதித்து ஒரு புரிதலை உருவாக்கி தரவேண்டும். வயதிற்கு மீறிய நிறைய சந்தேகங்கள் குழந்தைகள் கேட்கின்றன என்று பயந்து பெற்றோர்கள் விவாதிப்பதே இல்லை. குழந்தைகள் புத்தகங்கள் படித்து கெட்டுபோய்விடும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஆச்சரியமாகதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் வருபவைகளை அது வயதிற்கு மீறியதாக இருந்தாலும் அதை குழந்தைகளில் விவாதிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

மேலை நாடுகளிலும் பள்ளிகளில் மீண்டும் புத்தகங்களின் விவாதத்தை தொடங்கியிருக்கின்றன. முன்பு திரைகளில் மூலம் காட்டப்பட்டு அது குறித்து பள்ளிகளில் விவாதங்கள் கருத்துக்கள் குழந்தைகளிடம் கேட்கப்பட்டன. ஆனால் வீட்டில் புத்தகம் படித்து பின் விவாதங்களையும், கருத்துக் கேட்டல்களையும் நடத்தும்போது அதிக ஆர்வத்துடனும் மிக நுண்திறனோடும் பேசுகின்றனர் என்று கண்டறிந்தார்கள்.
ஒருவரின் கற்பனை திறனை வளர்க்க புத்தகங்களால் மட்டுமே சாத்தியமாகும். தொலைக்காட்சிகள், கணினி விளையாட்டு சாதனங்கள் கற்பனை வளர்வதை தடுக்க கூடியவைகள். அடுத்த தலைமுறைக்கு அறிவுச் செல்வங்களை கடத்தமுடியக்கூடிய ஒரு சாதனம் புத்தகங்கள்தான். குடும்ப பிண்ணனி தேவையில்லாமல், சாதி/மதம் என்று எந்த பின்புலத்தின் குறுக்கீடுகளும் இல்லாமல் ஒருவர் தன் அறிவையும் ஞானத்தையும் வளர்த்தெடுக்க புத்தகங்கள்தாம் துணைபுரிய முடியும்.

ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடத்திட்டத்தை தவிர மற்றயவைகளை அளிக்க கூடாது என்கிற முனைப்புடன் இருக்கும் தலைமுறையிடம், புத்தக ஞானத்தை பெறாத ஒரு தலைமுறையிடம் எப்படி வாசிப்பை கொண்டு செல்வது என்பது சிக்கலாகதான் இருக்கிறது.

வளர்ந்த சமூகங்கள் எல்லாமே புத்தகங்களை வாசித்து வளர்ந்தவைதாம். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய தொழிநுட்பங்கள், புதிய இலக்கிய வகைகள் என்று எல்லாமும் புத்தகம் வாசித்து வளர்ந்த சமூகத்திடமிருந்து வந்தவைகள். வாசிப்பிற்கான சிறந்த அத்தாட்சியாக இந்த ஒன்றே போதும்.

புத்தகங்களின் தேவையுணர்ந்த சமூகங்கள் பேப்பர் புத்தகங்களாகவும் அதே வேளையில் டப்லட் போன்ற சாதங்களிலும் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். நாம் அவர்கள் அளித்த சக்கைகளான வீடியோ கேம்களை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். ஒரு புத்தகத்தை முடிக்கும்போது ஏற்படும் மனநிறைவும், தன் ஞானதில் ஒரு சிறிய முன்னேற்றத்தை அறிந்தவர்கள் யாரும் வாசிப்பை விடுவதில்லை. நம் சமூகத்தின் தேவையும் அதுதான்.

தமிழகத்தில் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வாசிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. புத்தகங்கள் வாங்கப்பட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் விழிக்கும்போது நம் சமூகமும் விழித்துவிடும்.

No comments: