Wednesday, July 26, 2017

ஊரும் நகரம்



வளர்கிறது என்கிற எண்ணம் ஒரு சிறுநகரத்தின் மீது ஏற்படும்போதே அது பிரம்மை என்றுகூட எனக்கு தோன்றிவிடுவது உண்டு. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்த நகரம், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி இருந்த நகரம் என்று ஒரு சிறுநகரத்தை பலவாறு வகைப்படுத்தி கூறுவது உண்டு. அதற்கு சான்றாக புகைப்படங்கள், காணொளிகளை காட்டுவது உண்டு. மாற்றம் கொண்டுவிடுவதை புதிய பாதைகள் உருவாவது, புதிய குடியிருப்புகள் உருவாவது, புதிய கடைகள் உருவாவது போன்ற சில விஷயங்களைக் கொண்டு கண்டு கொண்டுவிடலாம். ஏன் மனிதர்களின் உடைகளைக் கொண்டும் கண்டுக்கொள்ளலாம். சின்ன நகரங்கள் சற்று பெரிய நகரமாகவும், நடுநகரம் இன்னும் பெரிய நகரமாகவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதே வேளையில் கிராமம் இன்னும் கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் நினைப்பது நகரம் நகருகிறது. மக்களால் ஒரு இடத்தை விட்டு வேறு இடம்சென்று அந்த நகரத்தை சற்று நகர்த்தி வைக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்

டெல்லியில் ஒல்ட் டெல்லி என்று ஒரு பகுதி உண்டு. அங்கு பழைய பாணி வீடுகளும் தெருக்களும் மிக மோசமான நிலையில் வாழ்க்கை தரத்துடன் மக்களை காணலாம். அதை கண்டபின்னே ஒவ்வொரு நகரத்திலும் இதைக் காணலாம் என்று தோன்றியது. சென்னையில் வடசென்னையின் ராயப்புரம் அப்படியான நகரம். தஞ்சையில் சில பகுதிகள் அப்படியான பகுதிகள் உண்டு. மிக பழமையான மன்னர்கால தெருக்களும் வீடுகளையும் அதில் காணலாம். பழைய நகரம் கொஞ்சகொஞ்சமாக மாறி கிராமமாகிவிடுகிறது.

பல்வேறு காரணங்களால் மக்கள் நகரத்திற்கு உள்ளேயே இடம் மாறுகிறார்கள். புதிய வீடுகள் உருவாவதும் பழைய வீடுகள் புதுப்பிக்க படுவதும் நடக்கிறது. முன்னது வேகமாக பின்னது சற்று மந்தமாக நடப்பதாக இருக்கிறது. ஆகவே புதிய நகரப்பகுதிகள் விரைவில் உருவாவது போலிருக்கிறது.

நகரமயமாதல் போது மக்கள் எப்படி குழுமுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. ஊர்ந்து சென்றால் ஊர், நகர்ந்து வேறுஇடம் சென்றால் அது நகரம் என்பது மாதிரி நகரங்களின் உள்கட்டமைப்புகள் மாறும்போது மக்கள் எப்படி ஒரிடத்திலிருந்து கலைந்து மற்ற இடங்களில் குழுமுகிறார்கள் என்பதை சற்று விரிவாக அககண்ணோடு நோக்கினால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்.

அதிலும் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் நிலங்கள் மாற்றப்பட்டு ப்ளாட்டுகளாக வரும்போது சாதாரணமாக இருப்பதும் அங்கு முதலில் வந்து சேரும் மக்களைக் கொண்டு அவர்கள் பெயர்களை சாதிகளைக் கொண்டே நகரத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அந்த எக்ஸ் நகர்ல எல்லாம் நம்ம ஜனம் தான். இந்த நிலத்துக்கு இந்தப் பக்கம் அப்புறம் இந்த பக்கம் எல்லாம் நம்ம ஆளுங்கதான் தாரளமா வாங்கலாம் என்று கூறிதான் ஒருவருக்கு விற்கப்படுகிறது. அல்லது உங்க பக்கத்து நிலம் ஒரு டாக்டர் வாங்கியிருக்காரு, நீங்க தாராளமா வாங்கலாம். வேறு ஒருத்தர் வாங்குறதுக்கு முன்ன வாங்கிடுங்க என்று அலப்பறை வேறு அதில் இருக்கும்.

ஒரு நகர் பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகம் சென்று அந்த நகரை அவர்களின் இடமாக மாற்றிக் கொள்கிறார்கள். முன்பு அரசர்கள் செய்ததை இப்போது மக்களே செய்து கொள்கிறார்கள்.

ஒரு முஸ்லீம் குடும்பம் வந்ததும் மற்ற சாதியினர் விலகிக் கொள்கிறார்கள். குறிப்பாக கிருஸ்தவர்கள் அங்கு வாங்குவதேயில்லை. கும்பகோணத்தில் ஸ்றீநகர் காலனி என்ற பகுதி முதலில் இந்துகளாக வாங்கப்பட்டது. பின்பகுதியில் முஸ்லீம்கள் வாங்க ஆரம்பிக்க முழுவதும் முஸ்லீம் ஏரியாவாக இப்போது அது கணிக்கப்படுகிறது. வேறுஒரு இடத்தில் கள்ளர் சமூகத்தினர் வாங்க ஆரம்பிக்க அவர்களே தங்கள் சாதியினருக்கு வாங்க முக்கியத்துவம் கொடுக்க இப்போது அது கள்ளர் சமூக பகுதியாகிவிட்டது.

தஞ்சையில் உள்ள ஒரு பகுதி முஸ்லீம்களின் பகுதி. இதுவரை நான் அங்கு சென்றதில்லை. ஊருக்கு என்று இருக்கும் சில அடையாளங்கள் ஏதுமில்லாமல் புதிய ஊருக்கு சென்ற நினைப்பை உண்டாக்கியது. தஞ்சையில் மராட்டியர்கள் வசிக்கும்பகுதிக்கு செல்லும் ஒருவர் அடையும் புதிய அனுபவம் நிச்சயம் புதிதாக இருக்கும். அதேபோல் தஞ்சையில் செளராஷ்டிரர்கள் வசிக்கும் பகுதி நமக்கு வேறு ஒரு புதிய ஊருக்கு வந்துவிட்டதையே உணர்த்தும்.

பொதுவாக இந்த பகுதிகளில் நகரத்தில் நிகழும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதில்லை. சினிமா போஸ்டர்கள் இல்லாமல் இருக்கும். நகரத்தின் விளம்பர பேனர்களை அங்கு காண முடியாது. மைய நகரம் வேறு ஒரு இடத்தில் இருக்கும். அதன் தாக்கம் தினசரி பேப்பர்களின் மூலம்தான் புரிந்துக் கொள்ளமுடியும். சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நிகழ்ந்த போது இந்த பகுதிகளில் அதன் தாக்கம் கொஞ்சமும் இருந்திருக்காது.

மைய பேருந்து நிலையமும் அரசு அலுவலக கட்டிடங்கள் கொண்ட பகுதிதான் நகரத்தின் மையத்தை சொல்கிறது என நினைக்கிறேன். புதிய பேருந்து நிலையம் ஒரு நகரத்திற்கு வந்தவுடன் அதன் உருவம் முழுமையாக சில வருடங்களில் மாறியிருக்கும். அப்படியான நகரங்களை தொடர்ந்து பயணிப்பவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

நகரம் வளர்க்கிறது என்றால் அது ஊர்ந்து செல்கிறது என்ற பொருளும் கொள்ளலாம்.

No comments: