Friday, July 7, 2017

இலக்கிய சண்டைகள்



இலக்கிய சண்டைகளைப் பார்க்கும்போது ஒரு கோழிமுட்டை அளவில் இருக்கும் இலக்கிய உலகில் இலக்கியம் படைத்தால் என்ன, படைக்கவில்லை என்றால் என்ன என தோன்றிவிடும் என ஒரு முறை ஜெயமோகன் கூறியிருந்தார். இலக்கிய ஆக்கங்கள் தோன்றிய காலத்திலிருந்தே இலக்கிய பூசல்களும், சர்ச்சைகளும் அதன் காரணமாக சண்டைகளும் தோன்றிவிட்டன. இன்று நமக்கு படைப்புகள் மட்டுமே கண்களுக்கு தெரிகின்றன. அப்போது நடந்த சண்டைகளை தோண்டித்தான் எடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இப்போது நிலைத்திருக்கும் படைப்புகளுக்கு அப்போது நிகழ்ந்த சண்டைகள்தான் காரணம் எனவும் தோன்றுகிறது.


சிறிய எல்லைகளை, வாசகப்பரப்புகளை உடைய தமிழ் இலக்கிய உலகில் நடக்கும் சண்டைகளைவிட அதனினும் சிறிய வாசக எல்லைகளை உடைய இலங்கை, மலேய, சிங்கை இலக்கிய உலகில் சண்டைகள் அதிகம். சர்சைகள் சண்டைகள் எப்போது தொடங்குகின்றன? ஒருவர் மற்றொருவரால் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்குபோது, வேண்டுமென்றே இருட்டிப்பு செய்யப்படுகிறது என்று நினைக்கும்போது, தன் பெயரை அவதூறு செய்கிறார் என நினைக்கும்போது சண்டைகள் தொடங்குகின்றன என நினைக்கிறேன்.

பெரியதாக சாதிக்காத இலக்கிய எழுத்தாளன் ஒரு சாதித்த எழுத்தாளனை குறைத்து மதிப்பிடுவதும், அவதூறு செய்வதும் இலக்கிய உலகில் பெரியதாக கண்டுக் கொள்ளப்படுவதில்லை. கண்டும் காணாமல் கடந்து போய்விடுகிறார்கள். சின்னதாக சாதித்த எழுத்தாளன் கூட சூழலுக்கு எதிராக அல்லது மீறலாக ஒன்று சொல்லுபோது அதிக கவனம் பெறுகிறான். இரு அணியாக பிரிந்து விடுகிறது இலக்கிய உலகம். அதுவரை அவன் சாதித்ததை ஏற்றுக் கொண்டிருந்த இலக்கிய உலகம் சற்று அவன் ஒன்றுமே சாதிக்க வில்லை என்கிறது.

இலக்கிய வாசகன் இங்குதான் அதிர்ச்சியடைகிறான். இலக்கிய உலகில் படைப்பதைவிட சர்ச்சைகளை காட்டமாக எழுதி புகழ் பெறலாம் என்கிற எண்ணத்தை அடைகிறான்.
ஒரு கருத்து, கூற்று, மீறல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதில் உண்மையில்லை என்று தோன்றும்படி இருந்தால் எந்த சச்சரவும் ஏற்படுவதில்லை. ஏன் இப்படி பொய்களை சொல்கிறீர்கள் என்கிற வாதம்கூட எழுந்ததாக நினைவில்லை. ஆனால் கூற்றில் உண்மை இருக்கிறது என்று தோன்றினால் மட்டுமே பெரிய சச்சரவுகள் ஏற்படுகின்றன. கொஞ்சம் யோசித்தால் அந்த உண்மையை மறைக்கத் தான் இவ்வளவு பாடுபடுகிறார்களா என்று தோன்றும்.

பல்வேறு சமயங்களில் உண்மையான வாதத்தில் இருக்கும் தவறான வார்த்தை பிரயோகமே அந்த வாதத்தை பொய் என்று சொல்லத் தலைப்படுவார்கள். அந்த தவறான வார்த்தைதான் அவர்களை உறுத்துகின்றன. ஒன்றை வார்த்தை சொல்லி காயப்படுத்துவது, முக்கியமற்ற வேறுஒன்றை பேசி திசை திருப்புவது என்று பல இலக்கிய சர்ச்சைகளில் இருக்கும்.

இலக்கிய சண்டைகள் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறதோ அந்த அளவிற்கு அது சர்சையாகப் பேசப்படும். எனக்கு தெரிந்த இலக்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். இலக்கிய சண்டைகளை விரும்புபவர். எல்லா சண்டைகளிலும் கலந்து கொள்பவர். மற்ற இலக்கிய சண்டைகள் வெற்றிப் பெறும்போது, தன் முனைப்போடு செயல்பட்டு தன்னை சார்ந்த இலக்கிய சண்டைகள் எவ்வளவு முயற்சித்தும் ஒரு நாளுக்கு மேல் நீடித்ததில்லை என்பதை புரிந்துக் கொண்டதேயில்லை.

இலக்கிய சண்டைகளைப் புரிந்துக் கொள்ள இதுதான் வழியாக இருக்கும் என நினைக்கிறேன். ஒருவரது கருத்து மற்றவருக்கு அவதூறாக இருக்கும். ஒருவரது அவதூறு மற்றவருக்கு கருத்தாக இருப்பதில்லை. சர்சைகள் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கே நிலைத்து நிற்கின்றன.

No comments: