Tuesday, August 29, 2017

ஆகஸ்ட் மாத தஞ்சைக் கூடல் கூட்டம் (19-08-17)



ஒவ்வொரு முறை கூட்டம் முடிந்ததும் இந்த கூட்டத்தோடு போதும் என்று தோன்றும். இந்தமுறையும் தான். ஆனால் அது அடுத்த கூட்டம் வரும்வரை மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் புதுப்புது நண்பர்கள் வருவது உற்சாகத்தை அளித்துவிடுகிறது. புத்தம் புதிய விஷயங்கள் கூட்டத்தில் சேர்ப்பதும் நடக்கிறது. அதனால் ஒவ்வொரு சமயமும் ஒரு புதிய அனுபவம் கிடைத்துவிடுகிறது. இந்த முறை ஹைலைட் சி.எம்.முத்து அவர்கள்தான். அவர் பங்கேற்பாளராக வந்திருந்தாலும் பேசும் ஒவ்வொரு சமயமும் சிரிப்பு பீரிட்டது. இதற்கு முன்பு முத்தமிழ் விரும்பி அவர்கள் கூட்டியிருந்த கூட்டத்தில் சி.எம். முத்து தன் எழுத்து அனுபவங்களை பேசும்போது வந்திருந்த அத்தனைப் பேரும் சிரிப்பை சிரிப்பை நிறுத்தமுடியாமல் தவித்தோம். அவர் எழுதி சாகித்ய அகாதமி வெளியீட்டில் சில எழுத்தாளர்களின் கட்டுரைகளாக தொகுக்கப்ட்டிருந்த எழுத்தும் வாழ்வும் என்கிற நூலில் இருந்த அவரை கட்டுரையைதான் அன்று வாசித்தார். பெரும் அனுபங்கள் கொண்ட யாவர்க்கும் தங்கள் வாழ்வை சொல்லும்போது அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேடிக்கையாகவே இருக்கிறது.

இந்த கூட்டத்தில் நா.விச்வநாதன், ராகவ் மகேஷ், எஸ்.பிரசன்ன கிருஷ்ணன் ஆகியோருடன் நானும் பேசினேன். அத்தோடு முக்கிய ஆளுமைகள் கலந்துக் கொண்டார்கள், சி.எம் முத்து, வியாகுலன், முத்தமிழ் விரும்பி, அன்டனூர் சுரா, செம்பியன், கோவிந்தராஜு, கணேஷ் ராவ், பிரபு கோபி. நா.வி. பேசும் புதிய சக்தியில் வெளியான கல்யாணி கதையை பேசினார். பிரசன்ன கிருஷ்ணன் தடம் இதழில் வெளியான ஆதவன் தீட்சன்யாவின் கதையை பேசினார். நான் காலச்சுவட்டில் வெளியான யுவன் சந்திர சேகரின் பரமபதம் () அறுந்த சரம் என்கிற கதையை பேசினேன்.

நா.வி வருவதில் தாமதமாகிவிட்டது, ஆகவே நான் முதலில் பேசினேன். யுவன் அவர்களின் கதையை முதலில் பேசவேண்டியதாகிவிட்டது. அது ஒரு தத்துவார்த்தமான கதை. அதை புரிந்துக் கொள்வதிலும் வெளிப்படுத்துவதில் இருக்கும் சிரமம் இருந்தது. மூன்று முதியவர்கள் ஒரு மடத்தில் வாசலில் இருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக் கொள்கிறார்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பேசும்போது நாலாவதாக ஒரு குரல் வருகிறது. அதுவும் தன் அனுபவத்தை கூறிக்கொள்கிறது. எல்லோருக்கும் அதீதத்தின்மீதும் இயற்கைக்கு அப்பாற்பட்டும், தெய்வாதீனத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கைகள் அது குறித்த சிலாகிப்புகள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

அதை இந்த கதையில் அவர் கூறவருவதும் அந்த கற்பனை அப்பாற்ப்பட்ட ஒன்றுடன் கதையை முடித்தும் இருக்கிறார். கற்பனை அப்பாற்ப்பட்ட எந்த தெய்வாதீனமும் மரணத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் காணாமல் போய்விடுகின்றது என்கிற சின்ன தீற்றலாக அதை சொல்லுவதுமாக கதை இருக்கிறது. அதை கட்டுரையாக எழுதியிருந்தாலும் சொல்லும்போது இறுக்கமாக தொனியில் அமைந்து விட்டது. (அந்த கட்டுரை தனியாக வெளியாகியிருக்கிறது).
அடுத்து பிரசன்ன கிருஷ்ணன் தடத்தில் வந்த ஆதவன் தீட்சன்யாவின் காமிய தேசத்தில் ஒரு நாள் கதையைப் பற்றி பேசினார். (முழுமையான அந்த கட்டுரை பின்னர் வெளியாகும்.) எப்போதும் போன்று நீண்ட உரையாக அதை பேசிமுடித்தார். சில குறைகள் அந்த கதையில் இருந்ததை சுட்டிக் காட்டினேன். சி.எம் முத்து சட்டென திரும்பி அதை நானும் கவனித்தேன் என்று பேசினார். அதை அடுத்து ராகவ் மகேஷ் அவர்கள் இலக்கிய நையாண்டிகள், வேடிக்கைகளை பார்வையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அவர் சிறந்த மேடைப் பேச்சாளராக திகழ்பவர். பெரிய கூட்டங்களை அதன் நாடி அறிந்து தேவையானவற்றை பேசும் வல்லமை கொண்டவர். இந்த சிறிய கூட்டத்திலும் அதற்கு தேவையான விஷயங்களைப் பேசி முடித்தார்.

நா.வி அவர்கள் பேசிய கல்யாணி கதை பிரபு காளிதாஸ் எழுதியது. முன்பு எடுப்பு கக்கூஸ் இருந்த காலங்களைப் பற்றி அவருக்கு தெரிந்தவைகளை பகிர்ந்துக் கொண்டார். கதை அவருக்கு பிடித்திருந்தது. அந்த காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் எப்படி நம்மிடமிருந்தது எப்படி அதிலிருந்து வெளியேறினோம் என்று பேசினார். அவர் முடித்தது, அந்த கதை இந்த காலத்தில் தன் காலை பதிக்க முடியாமல் தவிப்பதாக எனக்கு தோன்றிய ஒரு கருத்தை சொன்னேன்.

தான் பேசுவதாக முத்தமிழ் விரும்பி அவர்கள் பேசினார்கள். பொதுவாக அவர் பேசுபவர் இல்லை. இந்த மாதிரி விமர்சனங்கள் தான் விரும்பவில்லை என்றும் நேர்மறையான விமர்சனங்கள் மட்டுமே பேசுவோம் என்று சற்று காட்டமாகவே கேட்டுக் கொண்டார். வியாகுலன் அவர்கள் எழுந்து அவருக்கு பதிலளித்தார். அகவயமான ஒரு விஷயத்தை புறவயமாக சொல்லப்படுவதும் பின் அது அகவயமாக பொருள் கொள்ளப்படுவதினால் நமக்கு விமர்சனங்கள் அது நேர் அல்லது எதிராக இருந்தாலும் பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கணேஷ்ராவும் விமர்சனங்கள் எப்போதும் சற்று திமிராக எனக்கு தெரியும் என்கிற தொனியில் இருப்பதாக தனக்கு படுவதை கூறினார்.

பொதுவாக ஒரு படைப்பை குறித்து விமர்சித்தாலே அது ஆசிரியரை வீழ்ந்துவதற்காக
செய்யப்படுகிறது என பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு மாதத்தில் வெளியான கதை பேசப்படாவிட்டால் அது எப்போதும் பேசப்படுவதில்லை. ஒரு ஆண்டில் வெளியாக மொத்த கதைகள் அந்த ஆண்டில் ஏதெல்லாம் நேர்/எதிராக விமர்சிக்கப்பட்ட்தோ அவைகள் மட்டுமே மீண்டும் படிக்கப் படுகின்றன அல்லது மீண்டும் பேசிப்படுகின்றன. விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது தேவை என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நேர்மறையான விமர்சனமே தேவையென்றால் நம் எல்லோர் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்கின்றது என்று பொருள். ஆனால் அது சாத்தியமே இல்லை. மீண்டும் மீண்டும் பேசப்படும்போது மட்டுமே நிலைபெறுகிறது.

மீண்டும் கலகலப்பாக பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். ஒரு புகைப்பட அமர்வு முடிந்ததும் மீண்டும் வெளியே வந்து ஒரு உரையாடல் நிகழ்ந்தது. பின் விடைபெற்றோம்.

No comments: