Wednesday, August 9, 2017

தஞ்சைக் கூடல் ஜூலை மாதக் கூட்டம் (29/7/17)



எப்போதும் போன்றதொரு பதட்டம் இந்தமுறையும். பதட்டத்தின்படி எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. இடத்திற்கு போனதும் எல்லாம் மறைந்து கொஞ்சம் இயல்பிற்கு திருப்பியது. பிரசன்ன கிருஷ்ணன் முன்பே வந்திருந்தார். அவர் திருச்சியில் இருந்து பஸ் பிடித்து இடந்தேடி வந்துவிட்டிருந்தார். இலக்கியம் ந்ம்மை எப்படியெல்லாம் அழைத்துச் செல்கிறது. அவர் பெங்களூருவில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

நான் அவருடன் பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் வியாகுலனும், மா.கோவிந்தராஜுவும் வந்துவிட்டார்கள். இலக்கியமும் நடைமுறை வாழ்க்கையும் மாறிமாறி பேச்சில் கலந்திருந்தது. ஹரணி, கவிஜீவன், ராகவ் மகேஷ் வந்ததும் பேச்சில் சுவாரஸ்யங்கள் கூடின. அதே வேகத்தில் கூட்டத்தை தொடங்கிவிடவேண்டும் என்கிற எண்ணத்தோடு அறிமுக பேச்சை தொடங்கினேன். ராகவ் மகேஷின் நண்பர்களான ரா.பிரபு, கணேஷ்ராவ் இருவரும் வந்திருந்தார்கள். தமிழம்மா அன்பரசி டீச்சர் முதல் முறையாக வந்திருந்தார். பார்க்கும் ஒவ்வொரு சமயமும் வர்வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


சற்று நேரத்தில் நெருஞ்சி அமைப்பை வைத்திருப்பவரும் தஞ்சையின் இலக்கிய ஆளுமையின் முக்கிய நபருமான முத்தமிழ் விரும்பி வந்தார். இந்துமணி, ராம சந்திரசேகரன் போன்றவர்கள் அன்று வருவதாக இருந்தார்கள். அவசர வேலையால் அவர்களால் வரமுடியவில்லை. இந்த மாதம் நிறைவாக அமைந்திருந்தது. எப்போதும் ஏதாவது ஒரு சின்ன குறைகள் தேவையற்ற சம்பவங்களும் நடந்துவிடும். இந்தமுறை அப்படி எதுவும் இல்லை.

ஹரணி கணையாழியில் வந்திருந்த அலங்காரம் (கலைச்செல்வி) கதையை பேசினார். அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. சிலாகித்து ஒவ்வொரு சம்பவமாக கூறினார். பேசப்பட்ட சீதையின் அவலங்களைப் பற்றி பேசும்போது நிஜமாக தன் துன்பம்போல வருந்தினார். அன்றைய அதே நிலைதான் இன்றும் பெண்களுக்கு தொடர்கிறது. நான் அப்போதைய விழுமியங்களை இன்று போட்டு பார்ப்பது சரியாகுமா என்று கேள்வியை முன்வைத்தேன். அதற்கும் தீர்க்கமாக தன் கருத்தை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். அடுத்து, வியாகுலன் அவர்கள் உயிர் எழுத்தில் வெளியான பிடித்த பாத்திரத்தின் பெயர் (மு.குலசேகரன்) என்கிற கதையை பேசினார். ஒரு காதலன் காதலியை சந்திக்க செல்வதுபோல, ஒரு மகன் தாயை சந்திக்க செல்வதுபோல ஒரு வாசகன் அவனுக்கு பிடித்த எழுத்தாளனை சந்திக்க செல்வதுபோல இக்கதை இருக்கிறது என்றார். அதன் கூறல்முறையும், எடுத்துக் கொண்ட கருவையும் பாராட்டிப் பேசினார். அது ஜெயமோகனும், விஷ்ணுபுரம் நாவல் பற்றி பேசுகிறது என்று கூறியபோது, அப்படி எனக்கு தோன்றவில்லை, என்று மறுத்தார்.

எஸ்.பிரசன்னகிருஷ்ணன் காலச்சுவடில் வெளியான தீராத திருநாள் (குமார நந்தன்) கதையை குறித்து பேசினார். பல ஆசிரியர்கள் எழுதிப் பார்த்த கதை. இன்னும் சொற்பிரயோகங்களின் கவனம் கொண்டிருக்கலாம் என்று கூறினார். அதே வேளையில் நீண்ட உரையாக அவரது பேச்சு இருந்தது. சின்ன விஷயத்தையும் விடாமல் எல்லாவற்றையும், எழுதிய ஆசிரியர் ஆச்சரியப்படும் வகையில், பேசினார் (அவர் பேசியதன் எழுத்துவடிவம் தளத்தில் இருக்கிறது).

அடுத்து நான் அம்ருதாவில் வெளியான கொடும்பாவி (காலபைரவன்) கதை குறித்துப் பேசினேன். பொய் சொல்லி உறவுக்காரர்களிடன் பணம் பறிக்கும் ஒருவன். யாராவது இறந்துவிட்டதாக கூறி ஊர்செல்ல காசு கேட்டு காணாமல் போய்வ் விடுவான். சில நேரங்களில் ஆட்கள் வந்து அவனை விட்டுவிட்டு யார் என்று பார்த்த்துவிட்டு செல்வார்கள். நிறைய துக்கங்கள் அவனால். அவன் அப்பாவே அவனை விஷம் வைத்து கொல்ல நினைக்கிறார். ஒருநாள் மழைவேண்டி கொடும்பாவி இழுக்க அவன் செல்லும்போது (அதனால் குடிக்க காசு கிடைக்கும்) ஒருவன் வந்து உன் அப்பா தூக்குமாட்டி இறந்துவிட்டதாக கூறுகிறார். இதுதான் கதை. தவறு செய்கிறவனின் மனநிலை அதை இலகுவாக எடுத்துக் கொள்கிறது, ஆனால் ஊரின் நன்மைக்கு ஒன்றை செய்யும்போது தனது குடும்பத்தின் நிம்மதியை அவன் இழக்கிறான் என்பதை அவன் அறியவில்லை. ஒரு நுணுக்கமான கதை சொல்லியாக இருக்கிறார் காலபைரவன். அவரது சில கதைகளை முன்பே படித்திருக்கிறேன். அதில் சில ஆண்டுகளுக்கு முன் காக்கைகளைப் பற்றிய கதை இன்னும் நினைவில் இருக்கிறது.

ராகவ் மகேஷ் இலக்கிய வம்புகள் குறித்து வேடிக்கைகள் சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார். நல்ல வேடிக்கைப் பேச்சாளர் அவர். பல மேடைகளில் பேசியவர். கவிஜீவன் பேசும்போது அவர் கொண்ட மனவருத்தம் புரிந்துக் கொள்ள முடிந்தது. தஞ்சை ப்ரகாஷ் கூட்டங்களில் கலந்துக் கொண்டவர் அவர்.

கடைசியாக வந்திருந்தவர்கள் கதைகள் குறித்தும், கூட்டம் குறித்தும் சில வார்த்தைகள் பேசினார்கள். சிலர் நிறைவாக சில மகிழ்ச்சியாக உணர்ந்த இந்த கூட்டம் ஒவ்வொரு மாதமும் தொடரவேண்டும் என்றார்கள். அந்த ஒருவார்த்தையே அடுத்த மாதத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது.

No comments: