Friday, August 18, 2017

களிமண் பட்டாம்பூச்சிகள் (சுப்ரபாரதி மணியன்) கதைப் பற்றி ஹரணி



கதையின் தலைப்பு ஒரு ஜென் அனுபவக் கவிதையின் முதல் அடியைப் போல இருந்தது பிடித்துப்போனது வாசிக்கத் தொடங்குமுன். ஆகவே இக்கதையை வாசித்து முடித்தேன். அப்புறம் இதுகுறித்த விமர்சனத்திற்காக ஐந்துமுறை வாசித்து முடித்தேன்.

கதையை வாசித்து முடித்ததும் ஒரு காரியம் செய்ய மனம் எண்ணியது. சிறு வயதில் அதாவது பள்ளிப் பருவத்தில் வயல் வெளிகளுக்குப் போய் வாய்க்காலில் களிமண் எடுத்து வந்து சமையல் சாமான்கள், ஒற்றை மாட்டு வண்டி அதற்கான சக்கரங்கள் போன்றவை செய்வதுண்டு. கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டன அந்த அனுபவத்தைத் தாண்டி என்றாலும் ஆனாலும் அது மனதுக்குள் இன்றைக்கிருக்கும் பச்சைக் களிமண்ணைப்போல ஈரமாய்ப் பிடித்துக்கிடக்கிறது மனவயலில்.


வீட்டிற்கு அருகிலுள்ள சிறுவர்கள் இருவரை அழைத்து போய் கொஞ்சம் களிமண் எடுத்துவாங்க என்று கேட்டேன். எதுக்குண்ணே.. என்ன செய்யப்போறீங்க? என்றார்கள் கிண்டலாய். போய் எடுத்துவாங்க என்று ஆளுக்கு ஐந்து ரூபாய் தந்தவுடன் உடன் ஓடினார்கள். வரும்போது பெரிய பூவரசு இலையில் களிமண்ணுடன் வந்து தந்துவிட்டுப்போனார்கள்.

ஒரு பட்டாம்பூச்சியைச் செய்யலாம் என்று எண்ணி அதை அப்படியே மாடிக்கு எடுத்துப்போய் செய்ய ஆரம்பித்தேன். சற்று நீண்ட சிறு உருளைப்போலப் பட்டாம்பூச்சியின் உடலைச் செய்வதில் சிரமமில்லை. அது முண்டம்போல இருந்தது. கால்களையும் உணர்வுக்கொம்புகளையும் செய்வதற்கு களிமண்ணை மெலிதாக உருட்டமுடியவில்லை. உடைந்து விழுந்துகொண்டேயிருந்தது. அப்புறம் ஒரு மின் வயரை எடுத்து அதிலுள்ள சிறு கம்பிகளைக் கத்திரிக்கோலால் துண்டாக்கி பட்டாம்பூச்சியின் உடம்பின் இருபக்கமும் செருகி அதன்மேல் பூச்சுப்போல களிமண்ணைப் பூசப் பிடித்துக்கொண்டது. எனக்குள் மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது.

அப்புறம் சற்று தடிமனா நீள் உருளைகளாக உருட்டிக்கொண்டு அவற்றைப் பட்டாம்பூச்சியின் இறக்கைப்போல கைவிரல்களால் தட்டையாக்க சிறகு கிடைத்தது. அதை அப்படியே மின்கம்பியில் பொருத்த பொருந்திக்கொண்டு கிட்டத்தட்ட பட்டாம்பூச்சிபோல இருந்தது. ஆனால் அது வண்ணப் பட்டாம்பூச்சியல்ல களிமண் நிறம் பூசப்பட்ட பட்டாம் பூச்சிபோல இருந்தது.
எனக்குள் ஒரு கவிதை துளிர்த்தது.

                 பட்டாம்பூச்சி செய்தேன்
                 களிமண்தான் எல்லாமும்
                 பறந்தது மனமே.

இக்கதையின் வாசிப்பு எனக்கு மேற்சொன்ன அனுபவத்தைத் தந்தது.

இப்போது கதைக்கு வருவோம். கதையின் பொருண்மை ஓரிரு தொடர்களில் அடக்கிவிடக்கூடியது. அதற்கு முன்னால் இத்தலைப்பிற்கு என்ன பொருள் என்று திரு சுப்ரபாரதிமணியன் அவர்களிடம் கேட்டேன்

அவர் முகநூல் செய்திமடல் வழியாக.. பறக்கமுடியாது. இயல்பாக நடக்கவேண்டிய பிரசவத்தை அறுத்துசெய்வது என்பதன் குறியீடாக என்று சொன்னார்.

கதையும் இதுதான். இயல்பாக நடக்கவேண்டிய எதுவும் இயல்பாக நடப்பதில்லை. அப்படி நடக்க விடுவதில்லை என்று.

கதையில் கோடங்கியின் குடும்பத்தில் பிறந்த கோபிநாத் என்பவனின் மனைவி தங்கமணிக்குப் பிரசவவலி வராமல் இருக்கிறது. அந்த வலி வருவதற்கான முயற்சிகளை எல்லாம் தங்கமணியின் பெரிய அத்தை ஜான‘கி சொல்லி பயமுறுத்துகிறாள்.

பற்களைக் கடித்துக்கொண்டு முக்கவேண்டும். முடிந்த மட்டும் உந்தித் தள்ளவேண்டும. கால்களை அகல விரித்து வைத்துக் கொள்ளவேண்டும். நிணநீர் அதிகம் வெளியேறுகிறதென்று கவலைப்படக்கூடாது. பெருங்குரலெடுத்து, பெரிய கஷ்டம் வந்து விட்டது அதிலிருந்து தப்பிப்பதுபோல சப்தமிடவேண்டும்.

இவை யாவும் இயல்பான வலியின் செயற்பாடுகள் என்றாலும் இயல்புநிலை வரவில்லை என்றால் இவற்றைச் செயற்கையாக செய்து இயல்பாக்கிக்கொள்ளும் அவலத்தைக் கதையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுவிடுகிறார் திரு சுப்ரபாரதிமணியன்.

இன்னொருபுறம் கணபதி எனும் கிளைப்பாத்திரம் ஆனால் கதையின் பொருண்மைக்கு உறவான பாத்திரம். கோடங்கி. ஜாதகம் பார்ப்பவர். அவரின் மகன் சோமசுந்தரம். தன்னுடைய குலத்தொழிலைக் கற்றுக்கொள் கற்றுத் தருகிறேன் வாழ்வில் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறார். அவரின் இயல்பு அது. ஆனால் அது சோமசுந்தரத்தின் இயல்பல்ல. அவனுக்குப் படித்துவிட்டு வேலைக்குப்போய் சம்பாதிக்கவேண்டும் என்பது விருப்பமான இயல்பு. இருப்பினும் தந்தையின் வேண்டுகோளுக்குச் சம்மதித்துக் கற்றுக்கொண்டாலும் அவன் மனம் அதில் ஈடுபடாமல் ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்குச் சென்று சேர்ந்துவிடுகிறான்.

கம்ப்யூட்டர்னு என்னென்னமோ படிச்சே.. கோழித் தீவனத்துக்கு போயிட்டியேடா..அதுக்காக கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்க முடியுமா நான்? கம்ப்யூட்டர் வேலைன்னு அதுவும் டிரை பண்ணிட்டு இருக்கேன். கெடச்சா போயிருவேன்.

அப்பா சொன்னது இயல்பில்லை என்று மகன் இயல்பில்லாத ஒரு வேலையில் இயல்பாகிப்போகிறான். ஆனால் மனத்துக்குள் இலக்கு இருக்கிறது.

கணபதியின் கோடங்கி தொழிலும் வேடிக்கைக் காட்டுகிறது. இயல்பாக அதில் ஊன்றிச் சம்பாதித்தவருக்கு அது இயல்பற்று கைவிரிக்கிறது. எனவே கூப்பிட்ட இடங்களுக்குப் போய் ஜாதகம் பார்க்கிற இயல்பின்மையே சாத்தியமாகிறது.

      ஜாதகம் பார்க்கற தொழில் அப்படி இப்படின்னீங்க.. இப்போ
      வீடு தேடிப்போய் பாக்கவேண்டிய காலம் வந்துருச்சி பாருங்க
      வெளியூர்னு போயி பார்க்கறீங்க..

      கோபால் மாதிரி கண்ணு முன்னாலே ஜெயிச்சவங்க இருக்காங்களே
      வெளியூர் போயி கோபால் ஜெயிச்சிருக்கானே

      கோபால் பத்தியெல்லா பேசாதீங்கப்பா.. நாணயமானவனில்லே.
      கள்ள நோட்டுக்காரன்னே பேரு வந்திருச்சு.. மெட்ராஸ் மாதிரி
      தௌள்வாரிக இருக்கற ஊர்ல இருக்கறதுக்கு செரியான ஆளுதா.
      அவர் சம்பாத்தியம் பத்தி பெருமையா பேசாதீங்க..

எல்லாமும் இயல்பானவை மாறி இயல்பற்ற ஒரு சூழலுக்கு இந்த உலகில் வாழவேண்டிய நிலைப்பாட்டை வெகு இயல்பாக சொல்லி இந்த இயல்பற்ற தன்மையின் அவலம் வாழ்க்கை சிதைவைக் காக்க உதவுவதைக் குறியீடாக
உணர்த்துகிறார் சு.பா.மணியன்.

தங்கமணிக்கு இயல்பாக நடக்கவேண்டிய பிரசவத்தை அறுத்து எடுத்துவிட்டு வெளிநாடுபோகவேண்டிய கட்டாயத்தைக் கோபி உருவாக்குகிறான். கதையை இப்படி முடிக்கிறார்

அறுத்து எடுக்க நேரம் குறிச்சுக் குடுக்குற நெலமைக்க நம்ப பொழப்பு போயிருச்சு பாரேன்..

இவையாவும் அழுத்தமான மண்ணின் பிறப்புகள் என்றாலும் அவை களிமண் பட்டாம்பூச்சிகள் உருவம் இருக்கும், உண்மை இருக்கும் உணர்வு இருக்கும் ஆனால் எல்லாமும் மனத்தில் நிஜத்தில் அவை பறக்கமுடியாத பட்டாம்பூச்சிகள்தான்.

வாழ்வின் இயல்பென்பது நினைப்பது நடப்பதில்லை. நடப்பதை விரும்பிக்கொள்ளவேண்டும். கிடைப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது இயல்பில்லை அது இயல்பற்ற தன்மையின் கூறுகளைப் பற்றி வாழ்வதில் இருக்கிறது.

இக்கதையில் வரும் தங்கமணியின் ஆசைகளும் அப்படித்தான் நினைத்ததுபோல் அமையவில்லை. கணவனுடன் வெளிநாடு செல்லவில்லை. அழைத்துப்போகிறேன் என்றவன் கர்ப்பிணி ஆக்கிவிட சரி.. பிரசவத்திற்காவது நல்ல மருத்துவமனைக்கு அழைத்துப்போங்கள் என்கிறாள். இயல்பாய் குழந்தைப் பிறக்காவிட்டால் அறுத்து எடுத்துப் பிறந்தால் ஜெயலலிதாவின் திட்டத்தில் பவுன் கிடைக்கும் என்கிற அரசியலும் உள்ளே இருக்கிறது இயல்பற்று.

இது எல்லோரும் அறிந்த ஒன்று என்றாலும் இது இன்றும் மாறாமல் அப்படியே வளர்ந்துகொண்டேபோகிறது என்பதுதான். வானத்து நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தால் சில நட்சத்திரத்தொகுதிகள் ஒன்றிணைக்கும் நேர்க்கோட்டில் இருப்பது புரியும். ஆனால் வானம் ஒன்று. அப்படித்தான் வாழ்க்கையும் என்றாலும் அவற்றிலும் இயல்பற்ற தன்மைகள் வாழ்தல் எனும் நேர்க்கோட்டில் இணைத்து வாழவேண்டிய கட்டாயத்தையே இச்சிறுகதையிலும் உணர்த்தியிருக்கிறார்.

[தஞ்சைக் கூடல் 24‍/6/17 அன்று நடந்த கூட்டத்தில் பேசிய உரையின் கட்டுரை வடிவம்.]

No comments: