Sunday, October 1, 2017

இரு கதைகள்

வரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கிஆனந்த விகடன் (4/10/17)
கலைச்செல்வி எழுதிய புகார்குறி, காலாண்டிதழ் (சூலை ஆகஸ்ட் செப். 2017).
கூடல் நிகழ்வு - 30.09.2017 - மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, தஞ்சாவூர்.
 
சிறுகதைகள் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவை. சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவைசமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை என்கிற கருத்துகள் ஒருபக்கம் இருந்தாலும். ஒரு கதை வாசிக்கையில் எளிமையும் சுவையும் விடாது வாசிக்க வைக்கும் இயல்பையும் ஏற்படுத்தவேண்டும். அவ்வகையில் இவ்விருகதைகளும் முற்றிலும் உதவுகின்றன.
இரு கதைகளின் பொருண்மை நிலைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்ட அல்லது பேசப்பட்ட அல்லது எல்லோரும் அறிந்துகொண்டிருக்கிற ஒன்றாக இருந்தாலும் கதையின் முடிப்பில் இவ்விருகதைகளும் பொலிவு பெறுகின்றன.

மனித வாழ்க்கையில் விழுமியம் எனப்படும் மதிப்புகள் மிக முக்கியமானவை. இவையே மனித வாழ்வின் தளராத தன்மைக்குப் பெருங்காரணங்களாக இருக்கின்றன. இந்த விழுமியங்கள் குறித்த கருத்தாக்கங்கள் காலந்தோறும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தாலும் ஏதேனும் ஒருவகையில் எல்லா மனித வாழ்விலும் இவை நீக்கமறத் தள்ளமுடியாத அளவிற்கு நிறைந்து உள்ளமையையும் உணரமுடிகிறது.

மனித வாழவின் கருதுகோள் முக்கியமானது. அதாவது பற்றுக்கோடு. இந்த பற்றுக்கோடு எதுவாயினும் இருக்கலாம். இவற்றைக்கொண்டு வாழ்வைத் தொடங்குதல் அல்லது வாழ்தல் என்பது அமைந்தாலும் இத்தகைய பற்றுக்கோட்டிற்கு நம்பிக்கை எனும் ஒற்றைச்சொல் மிகமிக வலுவான ஒன்றாக இருக்கிறது. அவற்றையே இவ்விருகதைகளும் வேறுவேறு பொருண்மைகளில் வேறுவேறு தளங்களில் சிறப்பாக விதந்தோதுகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் மனித வாழ்வில் ஒரு பிடிப்பையும் நிம்மதியையும் பெறுவதற்கு இந்த நம்பிக்கைகள் உதவுகின்றன என்பதை இக்கதைகள் வெகு எளிமையாக எடுத்துக் கூறிப்போகின்றன.

திரு வரவணை செந்தில் எழுதிய சிறுகதை செல்லக் கிறுக்கி எனும் சிறுகதைகயின் பொருண்மை சிறியது. வீடு மாற்றலில் நேரும் சிறு அனுபவத்தைக் கொண்டது. அம்மா, மனைவி, பிள்ளைகளுடன் வீடு மாறுகிறான் ஒருவன். புதுவீட்டில் சாமான்களை இறக்கிவைக்கையில் நேரும் சம்பவங்கள் எதார்த்தமானவை. அதில் அம்மா பாத்திரம் வெகு எதார்த்தமானது. எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் உறவுலகத்தைச் சட்டென்று ஏற்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரம் அம்மாவுடையது. அதுதான் இக்கதையின் மையப் பலம். ஆனால் மாமியாரை அழைத்துப்போகும் மருமகளின் எண்ணத்தை திரு செந்தில் கூறுகையில் வெளியூருக்குப் போய்விட்டால் பாம்பைக் கண்டு பயப்படும் குரங்குகள் ஒன்றையொன்று கெட்டியாகக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவதைப்போல அப்படி ஒற்றுமையாகிவிடுவார்கள். அம்மாவின் பாத்திரம் இயல்பானது. சக வீடுகளை எங்குப்போனாலும் அரவணைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் தன்மையிலானது. இது கதையின் சிக்கல். இங்கேதான் செல்லக்கிறுக்கியின் அறிமுகம். பட்டப்படிப்பு முடித்தவள் ஆனால் பேச்சில் கொஞ்சல். பிடிக்காத தன்மை. ஆனால்அவளின் செயல்கள் யாவருக்குமானது. யாவரும் கேளீர் தன்மையில். பிள்ளைகளுக்குப் புராஜக்ட் வேலைகள் செய்து தருவது, மழை வருகையில் மாடித்துணிகளை எடுத்து வந்து மடித்து வைப்பது, மால்களை அறிமுகம் பண்ணிக்கொள்வது, இவையெல்லாம் அறிமுகமில்லாத இடத்தில் யாரேனும் செய்ய முன்வரும்போது ஏற்கும் சுயநல மனப்பாங்கு. அல்லது செல்லக்கிறுக்கிப்போல அமையாத வயிற்றெரிச்சல். அல்லது மாமியாரின் இளமையைக் கற்பனை செய்வது எனக் கதையாசிரியர் அருமையாக அமைத்துள்ளமை இக்கதையின் தேவையை நிறைவுசெய்கிறது. தன்னிடம் திருட வந்தவர்களிடம் இயல்பாக நடந்துகொள்ளும் செல்லக்கிறுக்கி கிறுக்கியல்ல என்பதை சொல்லாமல் சொல்லிப்போவது இக்கதை தரும் வாழ்வின் நம்பிக்கை.

இரண்டாவது கதை திருமதி கலைச்செல்வியின் புகார். தொடர்ந்து வரும் ஒரு புகார்க் கடிதத்தின் மையத்தைத் தெரிந்துகொள்ளும் விருப்பம். அப்புகாரைக் கவனிக்கும் இருக்கையில் வேலை பார்க்கும் ஒருவன் நேரில்செல்வது. இது சற்று எதார்த்த மீறலாகத் தெரிந்தாலும் உண்மை. இப்படி நடப்பது நன்மையளிப்பது என்கிற நம்பிக்கையைத் தருவது இக்கதை. வெகு அழகாக நேர்த்தியாகக் கதையை நகர்த்துகிறார் கலைச்செல்வி. மணமேட்டில் டீ சாப்பிட்டுட்டுப் போங்க சார் என்று சொல்லும் டீக்கடைக்காரரிடமிருந்து இந்த நம்பிக்கை விதைகொள்கிறது. முகவரி சொல்லும் பாங்கு. உரையாடல் தொடங்கும் இடம் அருமையானது. கதிரேசன் நீங்களா. இல்லையே அவரு எங்கப்பா. பூங்கோதை உங்க அத்தையா. ஆமா சார் உங்களுக்கு எப்படித் தெரியும். எங்க அத்தைக்குத் தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க சார். எதுக்கு? என்னத்துக்கு? என்ன தெரியும்? எதுவும் தெரியாது. ஆனால ஒற்றைச்சொல் சந்தோஷப்படவைக்கும். இறந்துபோனவள் எப்படி சந்தோஷப்படுவாள் சாமியாடி வழியாக. நம்பிக்கையின் செடி துளிர்க்கிறது. ஜோஸ்யம் ஒரு பக்கம். பெட்டிஷன் ஒருபக்கம். சுவாரஸ்யமான வாழ்வின் செடியில் இலைகள் துளிர்க்கின்றன கதையில். மரபுகள் இறுக்கமான குடும்பத்தில ஒரு பெண் போட்டோகிராபர். அதுவும் இராணுவ எல்லையில். சுவாரஸ்யங்கள் நிறைந்து வழிகின்றன. போர் எல்லை. பாதிக்கப்பட்டவங்களுக்கு சமைத்து போட்டல். நிறைய போட்டோக்கள். பெண்பிள்ளையின் சாகசங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதவை. காரணம் பெண்ணாக இவற்றைச் செய்யக்கூடாது. அப்படியொரு சமுக நியாயம் உள்ளது- அதை எல்லோரும் குறிப்பாகப் பெண்கள் பிற்றல் வேண்டும் அல்லது அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் பின்பற்றாவிடில். எதுவும் நேரலாம். அதுதான்நேர்ந்திருக்கிறது. மரணம். விசாரிக்க வந்தவனைச் சாப்பிட அழைத்துச் சாப்பிட வைத்த நம்பிக்கை கதையில் பெருஞ்செடியாகிறது. எழுபது வயது குறையாத நபர். உள்ளே வந்ததும் விசாரிப்பவன் கூறுகிறான்.

உங்களைச் சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. ஒவ்வொரு தியாகமும்.. அரிய செயலும் மதிக்கப்படணுங்கய்யா..

அவர் முகம் மேலும் மலர்ந்தது. நீங்க எங்கேர்ந்து வர்றீங்க தம்பீ

 செகரடேரியட்லேர்ந்துங்கய்யா..

 மகனைப் பெருமிதமாக நிமிர்ந்துப் பார்த்தார்.

உங்க நம்பிக்கை சரிதாம்ப்பா.

முகம்மதும் பெருமிதத்தோடுதான் சொன்னார்.

ஆனால் கதையை வாசிக்கிற யாரும் பெருமிதம் கொள்ளமுடியாது. இது ஒரு மாயைத் தன்மை. இவை விலக்கப்படல் வேண்டும். நாம் எல்லோரும் விலக்குதல் வேண்டும். ஒருவேளை இது சாத்தியமானால் இந்த நம்பிக்கை உறுதியானால் எல்லோரும் பெருமைப்படலாம்அப்போதுதான் இக்கதையின் உண்மையான தரும நியாயங்கள் செல்லுபடியாகும்.


(30/9/17 அன்று நடந்த தஞ்சைக் கூடல் கூட்டத்தில் பேசிய உரையின் கட்டுரை வடிவம்.)

3 comments:

Unknown said...

நன்றி நண்பர்களே..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நிகழ்வு ஐயா
மகிழ்ந்தேன்
நன்றி

வரவனையான் said...

தோழமைக்கு நன்றி! <3