Wednesday, October 4, 2017

முகநூலில் பிரபலமாவது எப்படி?

நகைச்சுவை:
முகநூல் இப்போதுதான் வந்தது. மிக சமீபமாகத்தான் பரவலாக அறியப்பட்டது. ஆகவே புதியதாக கண்டுபிடிக்கப்படும் விதிகளால் தான் பிரபல ஆகமுடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.


சமூக வெளியில் பிரபல்யமாக என்ன செய்வோம், பிடித்தவரோ இல்லையோ காலையில் பார்த்ததும் அவர்களுக்கு குட்மார்னிங் சொல்வோம். டீ வாங்கிதருவோம். அதாவது காக்காய் பிடிப்போம். அதற்கு இங்கே லைக் என்று பெயர். ஒருவரின் ஸ்டேடஸ் பிடிக்காமல் போகலாம், அல்லது சொதப்பலாக இருக்கலாம், அவர் பிரபலமாக இருக்கும் ஒரே காரணம் போதும். உடனே லைக் போட்டுவிடுங்கள். ஒருவரின் லைக் எதிர்காலத்தில் வேண்டும் என நினைப்பவர்களை படிக்காமலும், முன்பின் யோசிக்காமலும் லைக் போட்டுவிடலாம்.

முகநூலுக்கென்று ஒரு காலாச்சாரம் உண்டு. நமக்கு வேண்டியவர்கள், அதாவது நாம் ஏற்றிருக்கும் கொள்கை, நிலைப்பாடு, கசமுசா ஆகியவற்றை கொண்டிருப்பவர்கள், எது செய்தாலும் அதற்கு ஒத்த கருத்துக்களை பகிருதல். அவர்களை வசைபாடும் கூட்டத்தை நாம் கூட்டாகவோ அல்லது தனியாகவோ சென்று கிழித்தெறியவேண்டும்.

பிரபல்யமாக இருக்கக்கூடியவர்கள் நம் கொள்கை எச்சட்றா சாமாச்சாரங்களுக்கு எதிராக கருத்து சொன்னால் அவர்களின் கேலிப்படங்களாக அல்லது முந்தைய காலத்தில் உடல்பாகங்கள் தெரிய இருக்கும் புகைப்படங்களாக போட்டு முகநூலையே ஒருவழியாக்க வேண்டும். அப்படி எதுவும் படங்கள் கிடைக்கவில்லை என்றால் மார்பிங் செய்துவிட வேண்டியதுதான். அப்போதுதான் நாம் செய்யப்போகிறவற்றிற்கும் லைக்கும், கமெண்ட்டும் போடுவார். முடிந்தார் ஷேரும் செய்வார்.

நடப்பு நிகழ்ச்சிகள் ஒன்றுவிடாமல் படிக்க வேண்டும். அதில் நமக்கு எதிரானது ஒருதினத்தில் ஒன்றாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் சும்மா இருக்கமுடியாதே, ஆகவே எதுவும் கிடைக்காமல் போக வாய்ப்பேயில்லை. அப்படியும் கிடைக்காத பட்சத்தில் நாம்தான் உருவாக்க வேண்டும். ஒருவர் பேசிய பேச்சை சற்று மாற்றி அவர் சொன்னதாக சொல்லி நமக்கு சாதகமாகவோ எதிரானதாகவோ மாற்றிக் கொள்ளலாம். சில நேரங்களில் எளிமையாக வேறுசிலர் செய்ததை எடுத்து கொண்டு அந்தநாளை ஓட்டிவிடலாம்.

ஒவ்வொரு நாளும் முக்கியமான நாள், நாம் முகநூலில் இல்லாத நாளாக இருக்ககூடாது. எப்பாடு பட்டாவது நாம் நம் நம் பங்களிப்பை செய்துவிடவேண்டும் என்பதால், அதுவும் ஒரேவிதமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதால், நகரில் நடக்கும் எல்லா இலக்கிய/அரசியல் கூட்டங்களுக்கு செல்லவேண்டும். சனி, ஞாயிறுகள் வசதியானவைகள். எதுவும் கேட்க முடியாத, அப்படி கேட்டால் முதுகில் டின் கட்டகூடிய கூட்டத்தில் அமைதியாக இருந்து நடப்பவைகளை கவனித்து வெளியேறிவிடவேண்டும். அங்கே சில புகைப்படங்கள் எடுக்க முடிந்தால் நல்லது. அதைப் போட்டு அதாவது காறித் துப்பி ஒரு நாளை ஓட்டிவிடலாம். நமக்கு பிடித்த அரசியல் கட்சி என்றால் வானளாவி புகழ்ந்து மற்றவர்கள் செய்வதைவிட பலமடங்காக செய்துவிடவேண்டும். ஆனால் இலக்கிய கூட்டத்தில் அப்படி அமைதியாக இருக்ககூடாது. ஒரு சின்ன இடம் கிடைத்தால் போது எழுந்து வசைமாறி பொழிந்து வெளியேறிவிட்டு முகநூலில் வந்து மீண்டும் பல்வேறு பாணியில் வசைபாடிவிட்டு தூங்கச் செல்லவேண்டும். தூங்க செல்லும்முன் நண்பர்களை எல்லாம் அழைத்துச் சொல்லிவிட்டு செல்லவேண்டும். சீறும் சிங்கங்கள் என்பதை உணர்த்த வேறு வழியில்லை.

கவிஞராக இருந்தால் தினம் ஒரு கவிதை எழுத வேண்டும். அதில் நடப்பு நிகழ்ச்சியும் இருக்க வேண்டும். பிரபலமாக இருக்கும் ஒரு எழுத்தாளரை பிடித்து அவரை கேலி செய்து அவரின் உடல்மொழி, பேசி பேச்சின் ஒரு வரி என்று எதையாவது கிண்டி எடுக்க வேண்டும். அவரைப் பிடிக்காதவர்கள் எல்லாம் வரிசை கட்டி லைக் போட, கமெண்ட் எழுத என்று வகை செய்ய வேண்டும். அதாவது அவரை பிடிக்காதவர்களுக்கு பிடித்ததை செய்யவேண்டும். என்னென்னமாறி கிண்டலடிக்கலாம் என்று ஒரு நோட்டு புத்தகத்தில் அல்லது வேர்ட் பைலில் எழுதி வைத்துக் கொண்டாலும் சரி. வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதானே முக்கியம். நம்மைவிட வேறுஒருவர் அதேபோல் எழுதிவிடக்கூடாதே!

சிலநேரங்களில் சிறித்தமுகத்துடனும் சிலநேரங்களில் சீரியசான முகத்துடன் புகைப்படத்தை வெளியிடவேண்டும். நண்பர்கள் சூழ இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியிடவேண்டும். அறசீற்றத்தை வெளிப்படுத்த சில முக்கிய இடங்கள் வரலாற்று இடங்களில் சென்று எடுத்த புகைப்படத்தை வெளியிடலாம். கூடவே கொண்ட கொள்கைகளை கடைபிடித்த நம் தலைவர்களின் புகைப்படங்கள் பலவேறு கோணங்களில் இருப்பதை வெளியிடவேண்டும்.

பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள், செயல்பாட்டாளர்கள் போன்றவரகளை எந்த நிலையிலும் குறைத்து சொல்லவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி தெரியாமல் சொல்லிவிட்ட எந்த கொம்பனும் முகநூலில் வசிக்க விட்டுவிடக்கூடாது. ஏனெனில் அதுவே நமக்கு என்றென்றும் பாதுகாப்பானதும், பிரபல்யமானதும் ஆகும். நான் சொன்னதின் அர்த்தம்வேறு என்று அவர் மன்னிப்பு கேட்டாலும் விட்டுவிடக் கூடாது. ஒரு மாதத்திற்காகவேனும் இந்த பேச்சும், மன்னிப்பும் பயனுள்ளதாக இருக்கும். கிடைக்கும் வரை லாபம் என்பதால் அதைவைத்து கேலி சித்திரங்கள், புகைப்படங்கள், மீம்ஸ்கள் என்று போட்டு தாக்கலாம்.

மேலே சொன்னவற்றையெல்லாம் சொல்லி நான் ஒளிவுமறைவற்றவன் என்று காட்டிக் கொள்ளலாம். இதைவைத்தே வசைபாடல்கள் வெளியாகும் என்றாலும் அதுவும் நமக்கு பிரபலமாவதற்கு உதவுகிறது என்பதை மறக்க கூடாது.

5 comments:

கலைச்செல்வி said...

சிரித்து முடியில.. ஆனா எதுவும் அதிகமா சொல்லீடல..

கரந்தை ஜெயக்குமார் said...

முகநூல் பக்கம் அதிகம் செல்வதில்லை

கே.ஜே.அசோக்குமார் said...

இருவருக்கும் நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் சொற்றொடர்களில் ஒன்று "However they agreed to disagree".
தம் ஏற்பின்மையை ஏற்றுக்கொண்டார்கள் என்ற பொருளில் வரும் இந்த சொற்றொடர் பெரும்பாலும் மாறுபட்ட கருத்து கொண்ட இரு தரப்பு நாடுகளுக்கிடையேயான உறவை வெளிப்படுத்தும்போது (பிடிக்கவில்லை, ஆனால் பிடிப்பதைப் போல காட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிலையில்) பயன்படுத்தப்படும். தங்களின் இந்த அலசலைப் படித்தபோது இந்த சொற்றொடர் நினைவிற்கு வந்தது.

கே.ஜே.அசோக்குமார் said...

நீங்கள் ஏற்றுக்கொள்ளாததை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.