Friday, December 8, 2017

கனவு (சிறுகதை)


எனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை. அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அவைகள் நம் ஆழ்மனதின் வெளிப்பாடுகள் என்று எல்லாவற்றிலும் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. உண்மையில் கனவுகள் எனக்கு ஆழ்ந்த அமைதியையும், நிம்மதியின்மையையும் ஒருங்கே அளித்திருக்கின்றன. சில கனவுகள் அதீத கற்பனைகள் கொண்ட ஃபென்டசி கதை போன்றும், நீண்டு நெடிய பயணத்தை மேற்கொண்டது போலவும் அப்படியே நிறைவிருக்கும். சில பதறவைத்து காலமெல்லாம் இந்த பயத்துடன் வாழப்போகிறேனா என்கிற அலைகழிப்பை கொடுப்பதாக இருக்கும். ஒரு கனவின் தொடர்ச்சியை அடுத்தடுத்த நாட்களிலும் கண்டிருக்கிறேன். ஒரு மாதம் தொடர்ந்து கண்டதுகூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கனவுகள் ஓவ்வொரு விதமாக இருக்கும். கனவை நிறுத்த முடிந்ததில்லை. ஏன் கனவுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டும், அதன் போக்கில் இருந்துவிட்டு போகட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு இந்த கனவுகளை பயஉணர்ச்சியோடே பார்க்கிறார்கள். தலையில் தூக்கிவைக்கப்பட்ட நீர்குடம் போல பாரத்தை நம்மீது இறக்குபவை இந்த கனவுகள், இறக்கி வைத்தபின் கிடைக்கும் பாரமின்னையின் சுகவும் கூடவே அளிப்பவை. ஆகவே எந்தவித தொந்தரவுகள் செய்யாமல் அவைகளை அப்படியே விட்டுவிட நினைக்கிறேன்

 
தூங்கும்முன் கால்களை கழுவிக்கொண்டும், பல் விலக்கிவிட்டும், உடலின் உறுப்புகள் தளர்ந்தபின்னும், உண்ட இரவுணவு செரித்துவிட்டதை உறுதி செய்தபின்னும் மிக தாமதமாக உறங்க செல்ல வேண்டும் என என் நாத்தனார் கனவுகளை நிறுத்த எனக்கு அறிவுறுத்தினாள். அப்படி எதுவும் நான் செய்ததில்லை ஆனால் கனவுகள் அவையெல்லாம் செய்ததாக கண்டிருக்கிறேன் என்று சொன்னால் மற்றவர்களுக்கு வேடிக்கையாக தோன்றும். ஒரு நாள் வீட்டிற்குள் வெள்ளம் வந்துவிட்டதுபோல் கனவு வந்தது. சாமான்கள் எல்லாம் மிதக்க முட்டி வரை இருந்த தண்ணீரில் மிதந்து சென்றது போன்ற கனவு. எப்போதும் போன்று கனவுதான் என்கிற ஆசுவாசத்தில் சிரித்துக்கொண்டே எழுந்தபோது வீடு தீப்பிடித்து இருந்தது. வீட்டில் எல்லா சாமான்களும் கருகி, தீயணைப்பு வண்டியின் தண்ணீர் பீச்சலால் நனைத்து தரையில் சொதசொதவென்று தண்ணீர் ஓட்டம் இருந்தது. தீயில் கருகி பின் நனைத்தப் பொருட்களால் ஒருவித வீச்சம் அடித்துக் கொண்டிருந்தது. இந்த களேபரம் எதுவும் தெரியாமல் மூடிய அறைக்குள் தூங்கிக் கனவுக் கண்டுக் கொண்டு இருந்திருக்கிறேன். குழந்தைகள் தான் பயந்திருந்தன. அவர்களின் முகத்திலும் கணவர் சதீஷின் முகத்திலும் தெரிந்த அச்சம் பிரிதொரு சமயம் கண்டதில்லை.

முன்பு கண்ட கனவுகள் மெல்லிய தன்மையுடன் அதில் வரும் எல்லா மனிதர்களும் நீண்டு ஒல்லியாக இருந்தார்கள். திருமணமான பின் அந்த கனவுகளில் ஒரு தடித்த தன்மை கூடியிருக்கிறது. கனவுகளில் இப்போது தடித்த ஆட்களாகவே தெரிகிறார்கள். மெல்லிய பயமூட்டும் நெகிழ்வு தன்மை மறைந்து கடினமான சொக்கவைக்கும் கவர்ச்சிகள் அதிகம் கலந்து வருகின்றன. திருமணமான புதிதில் கணவனுக்கு காலையில் கனவுகளைப் பற்றி சொல்லும்போது அதீத ஆர்வம் கொண்டவராக காணப்படுவார். அவருக்கு இந்த கனவுகளின்மேல் ஆர்வமும் வியப்பும் இருந்தது. கனவுகளைப் பற்றி முன்பு அம்மாவிடம் சொல்லும்போது கோபப்படுவாள். வெளியே இதையெல்லாம் ஏன் சொல்கிறாய் என்று சீறுவாள். அவளைப் பொருத்தவரை எந்த விஷயத்தையும் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவள். அவளுக்கு வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு எதையும் அறிய தந்துவிடாமல் இருக்க வேண்டிய ரகசிய பாதாள உலகம்

முதல் குழந்தை பிறந்த பிறகு கனவுகளின் வேகம் சற்று மட்டுப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு கனவுகளின் எண்ணிக்கையோ அதிகரித்துவிட்டது. குழந்தை இரவில் பாலுக்காக அழுதபோது அந்த சத்தம் கேட்காமல் கனவுகளில் நான் இருப்பதாக அம்மா சொல்லுவாள்.
கனவு ஒரு பெரிய பிரவாகம், அது தன்னளவில் கோபம், வீரம், காதல், காமம் என்று எல்லாவற்றையும் கொண்டிருக்கிறது. கனவுகள் தன்னிச்சையாக வருவதில்லை. வெளிவிவாகரங்களின் அழுத்தத்தால் அது பொங்கி வரும் உலைபோல வெளியேறுகிறது. ஆம் வெளியேதான் வருகிறது. வரும்போது என் மனதின் ஆசைகளை, வெறுப்புகளை மட்டுமல்ல என்கூட இருக்கும் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை எதிர்க்கொண்டே வெளியாகிறது. அதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஒரு முறை என் கணவர் கொண்டு வந்த தின்பண்டத்தில் நஞ்சு தடவியதுபோல கனவு வந்ததை அவரிடமே கூறி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினேன். அது அவரது உள்ளிச்சையின் வெளிப்பாடாகதான் இருக்கும் என்று கூறியதை அவர் பலமாக மறுத்து சண்டையிட்டார். அந்த கனவை கூறியதனால் அவருக்கு இருந்த வருத்தம் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் வெளியே அதை காட்டிக் கொள்ளாததுபோல நடந்துக் கொண்டார். 

ஒரு முறை ஊட்டிக்கு அனிதா பிறந்து எட்டுமாதமாக குழந்தையாக இருந்த சமயத்தில் போயிருந்தோம். அங்கிருந்த மெல்லிய ஈரக்காற்று காதுமடல்களில் குசுகுசுவென்று பேசி உடலின்பத்தை கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உடல் மெல்லிய எதிர்ப்புணர்ச்சியோடு இருந்தது. குழந்தையின் கழுத்தை பாஸ்கர் அழுத்த அதனால் வலிப்பு நோய் வந்ததுபோன்ற கனவில் கண்விழித்தபோது இரவு மூன்றுமணி. பாஸ்கர் அதைக் கேட்டு பதறி காலையில் எழுந்ததும் முதல் வேளையாக அங்கிருந்த சைக்கியாட்ரி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். குழந்தைகளைப் பற்றி எது சொன்னாலும் பயந்துபோய்விடுவார். அப்போது அவர் செய்கைகள் வேடிக்கையாக இருக்கும். டாக்டரிடம் அவர் பேசும்போது என் கண்களை சந்திக்க மிகவும் கூச்சப்பட்டார். இது பெரிய விஷயமில்லை என்று மருத்துவர் சொல்லி அவரின் வற்புறுத்தலால் சில மாத்திரைகள் எழுதி தந்தபின்னே அமைதியானார்.

என் கணவருக்கு கனவுகளால் ஏற்படபோகும் பிரச்சனைகளை அவரால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவரிடம் சொல்லாதவரையில் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் கணவன் மனைவிக்கிடையேயான அமைதியான இணக்கமான ஒரு சூழலில் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடிந்ததில்லை. இரவில் நான் மாத்திரைகளை விழுங்கிய பின்னே அமைதியாவார். அவர் முகத்தில் தெரியும் சின்ன புன்னகைக்காக வேண்டியே அதை செய்யவேண்டியிருக்கிறது. மாத்திரைகளை உண்டபின் கனவுகள் மிக ஆழத்தில் யாருமற்ற இருண்டறையில் ஒரு குற்றவுணர்ச்சியற்ற நிலையில் நின்று நடத்திக் கொள்வதாகப்படும்.

கனவுகளில் தெரியும் அப்பட்டதன்மை நேரில் மனிதர்களிடையே வெளிப்படுத்த முடியாதவை. கனவுகள் ஒருபோதும் கசிந்துருகி நான் யார் என்று வெளிப்படுத்திக் கொண்டதில்லை. கூர்ந்து கவனித்து ஒரு அவதானத்தின் மூலமே அதை புரிந்துக் கொள்ளமுடியும். கனவுகள் அதீத பாவனைகளை கொண்டவைகள் என்று நாம் நினைப்பதற்கு எதிரானவைகள். நான் புரிந்துகொண்ட வகையில் கனவுகள் நிஜத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் மிக நெருக்கமானவைகள்.

கனவுகளை நான் வெறுக்கவில்லை. அவற்றால் பல நன்மைகள் எற்பட்டிருக்கின்றன. என் மகனுக்கு ஏற்படபோகும் உடல்நலகுறைவை முன்பே அறிந்திருக்கிறேன். மகளின் கண்பிரச்சனையை கனவுகளின் மூலம்தான் முன்கூட்டியே அறிந்தேன். அவளுக்கு கண்ணாடி போடப்போவதுப் பற்றி கனவில் கண்டுவிட்டேன். ஆனால் இதையெல்லாம் சொல்வதனால் அவர்களுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை, மாறாக நான் அதீதமாக மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதாக கூறுவார்கள்.

ஒரு முறைக்கூட என் விஷயமாக நான் பேசியவைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக அல்லது பரிசீலிப்பதாகவும்கூட கூறியதில்லை. அந்த விவகாரங்கள் முற்றிலும் எனக்கானதாக அவர்கள் நினைப்பது என் மனதை மேலும் அழுத்தியதுண்டு. நான் அவர்கள் என்று குறிப்பிடுவது என் கணவர், குழந்தைகள் மட்டுமல்ல, என் அம்மா, அப்பா, அத்தை, மாமா மற்றும் நாத்தனாரையும் சேர்ந்துதான். என் அண்ணன்களுக்கு ஒரளவிற்கு இதில் அக்கறை இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்யமுடிந்ததில்லை என்பதுதான் என் சோகம்.

எனக்கு அளிக்கப்படும் மருந்துகளால் கனவுகளின் பரப்பு சுருங்கியிருக்கலாம், அதன் வீரியம் முன்னைவிட பல மடங்கு அதிகரித்திருப்பதை நான் பல சமயங்கள் அறிந்திருந்தேன். மருந்துகளின் அளவு வாரத்திற்கு வாரம் அதிகரிப்பதும் மேலும் புதிய மருந்துகள் சேர்க்கப்படுவதும் நடக்கிறது. ஆனால் அவற்றால் என் தூக்கத்தை அதிகரிக்க முடிகிறதே தவிர கனவுகளை குறைக்க முடியவில்லை.

கனவுகளைக் கண்டு அவர்கள் பயப்படுவதற்கு காரணம், அதில் இருக்கும் உண்மைதன்மைக்குதான். அதை பல நேரங்களில் அவர்களிடம் சுட்டிக் காட்டும்போது அவர்கள் முகங்களில் தெரியும் பீதி என்னை நிம்மதியிழக்க செய்கிறது. நான் நினைக்கும் நிஜத்தைவிட பயங்கரமானதா என்கிற நிம்மதியின்மைதான் அது. நான் சொல்லும் எதையும் அவர்கள் பலமாக மறுப்பதும், அதற்கான காரணங்களாக நான் சொல்பவைகளை கற்பனையானது என நிருபிக்கவும் அவர்கள் பலவகையில் முயற்சிப்பவர்களாக இருப்பார்கள்.
ஒருமுறை என் கணவருக்கு வண்டிக்காரத் தெருவில் ஒரு பெண்ணுடம் குடும்பம் நடத்துவதும் அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பது அவர்களுக்கு சொன்னபோது அதை ஆராய்ந்து கூட பாராமல் இந்த கனவு, கற்பனைகளை சொல்வதை இனி நிறுத்தவேண்டும் என்றும் இல்லையேல் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்கள். ஆனால் என் கனவுகளில் அது அப்பட்டமாக தெரிந்தபடியே இருந்தது. அதன் தாக்கம் என் மனதை, உடலை சிக்கலான வடிவமற்ற வடிவமாக மாற்றிக் கொண்டிருந்தது. அதன் உருகுலைவால் என் கண்கள் வீங்கி கண்ணங்கள் தளர்ந்து ஒரு பேதைபோல உருகொண்டேன். முதுகு லேசாக கூனல் விழுந்தது போலாகி தலை எப்போது குனிந்தபடி ஆகியது. என் மார்புகள் தளர்ந்து உடலோடு ஒட்டி வெம்பிய காய்போலாகியது. என்னை தொடர்ந்து கவனிக்கும் கணவர் என் மாற்றங்களை லேசான புன்முறுவலுடன் எதிர்கொள்வது போலிருந்தது. காற்றினால் கட்டுப்பாடை இழந்து பெருவெளியில் அலைந்து திரியும் மேகங்களின் தனிமையே வாழ்க்கையானது. என் சோகம் மற்றவர்களுக்கு ஒரு பொருளற்ற வார்த்தைகள்போல் பொய்யாக அவர்களால் எதிர்கொள்ளப்பட்டது. 

அப்படி ஒரு பெண் அந்த தெருவிலேயே இல்லை என்று சாதித்தார்கள். நானே ஒருமுறை அவளை தேடிப்போனபோது ஒரு குழந்தையோடு வெளியே நின்றிருந்தாள். நான் சொன்ன அந்த பெண்ணின் பெயர் சாவித்திரி, இடை சற்று பெருத்தும் பிட்டங்கள் பிதுங்க, நிற்க தடுமாறுவது போலிருந்தாள். அவள் கண்களில் எந்நேரமும் ஒருவித மயக்கநிலை குடிகொண்டிருந்தது. உதடுகளில் நமைச்சல் உடையவள் போல் உதடுகளை குவித்துக் வைத்திருந்தாள்.

அவளுக்கு பிறந்த குழந்தையின் தந்தை யார் என்றேன். கோபமுற்ற அவள் என்னை வாய்க்கு வந்தபடி திட்டி அந்த இடத்திலிருந்து ஓடிப்போனாள். இதைக் கூறியதும் அவர்கள் இது நிச்சயமாக கனவுதான் என்றார்கள். அவர்களின் என்னை எதிர்கொள்ளும் உத்திகளில் ஒன்றாக இதைச் சொல்லாம். அதாவது என் கனவை நிஜம் என்று நிஜத்தை என் கனவு என்று சொல்லி தப்பித்துக் கொள்வது.

விவாகரத்துபெற கோர்ட்டை அவர் அணுகும் கனவைப் பற்றி கூறியதும் மறைத்த உண்மையை கண்டுபிடிக்கப்பட கள்வனைப் போல் பதறினார். என் குழந்தைகளை என்னிடமிருந்து பிரிக்க தாயாக இருக்க தகுதியில்லை என கூறஆரம்பித்திருந்தார். இம்மாதிரியான நேரங்களில் உறவினர்களிடையே ஒரு மெல்லிய மகிழ்ச்சி வந்துவிடுகிறது. அதை பேசிப்பேசியே நாட்களை சந்தோஷப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியால் தோன்றும் தன்னகங்காரத்தை கனவுகளில் என்னில் கண்டு நான் உவகை கொண்டேன்

இதில் மனிதர்கள் என்னிடம் நடந்துக் கொள்ளும் முறைகளை கவனித்திருக்கிறேன். என்னை வாழத்தெரியாதவள், பைத்தியம், மூளைக் கோளாறு என்று வசை பாடுவதையும் என் காதார கேட்டிருக்கிறேன். பிற வீடுகளில் செல்லும்போது அவர்களின் கண்களில் தெரியும் மெல்லிய குரோதமும், அலட்சியமும், வேண்டாத பொருளை நுகர சொன்னதுபோன்று பாவனையில் பேசு பேச்சுகளால் அவமதிக்கவும் பட்டிருக்கிறேன். இத்தனையும் தாங்கி உயிர் வாழ்த்தல் என்பது ஒரு சிறிய குகையில் தண்ணீரும் உணவும் இன்றி வாழ்வது போன்றதுதான்.
சாவத்திரியின் பெருத்த மார்புகளையும் அகன்ற இடையை பார்க்கும்போது அவள் தன் தாய்மை உணர்ச்சியை என் குழுந்தைகள் மீதும் செலுத்தாமல் இருக்கமாட்டாள். தான் விரும்பிய ஒருவரின் குழந்தைகளை அவள் வெறுப்பாள் என நினைக்க தோன்றவில்லை. அவளை கொலை செய்ய நினைத்து கத்தியை எடுத்துச் சென்ற நான், அவளை முழுமையாக கண்டதும் மனதை மாற்றிக் கொண்டேன்.

இந்த குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த கனவுகளால் இன்னும் எத்தனை வாதைகள் ஏற்படபோகின்றன என்கிற எண்ணமே மேலோங்குகிறது. ஏன் நான் வாழ்வை கனவுகளினூடாக பார்க்கவேண்டும். கனவு எனக்கு அளிக்கப்பட்ட சாபமா? கனவை எல்லோரும் சொல்வதுபோல் நான் வெறுக்கவேண்டுமா? அதனால் நான் இழந்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்வு திரும்பவந்துவிடுமா? கேள்விகள்தான் என் வாழ்க்கையாகி போய்விட்டது. 

கடைசியாக சாவித்திரியை சந்தித்து என சோகங்களையாவது அவளிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை. சில மாதங்களாக என் கனவுகளிலும் அவளை காணமுடியவில்லை. அவள் உயிருடன் இருக்கிறாளா என்கிற சந்தேகம் என் மனதில் வலுக்கின்ற இன்று, ‘நான்தான் என் கணவனை கொலை செய்தேன்’ என்று மற்றவர்கள் எப்போதும் சொல்லும் அதே பொய் வார்த்தைகளால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.

(குறி சிற்றிதழ் (19) அக்‍-நவ-டிச 17 இதழில் வெளியான சிறுகதை.)

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல கனவுகள் பெரும்பாலும் நாம் நினைக்கின்ற நினைவுகளே. சிலருக்கு வித்தியாசமாக வருவதுண்டு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல கனவுகள் பெரும்பாலும் நாம் நினைக்கின்ற நினைவுகளே. சிலருக்கு வித்தியாசமாக வருவதுண்டு.